1391. நான் அன்சாரிகளின் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூ மூஸா (ரலி) அவர்கள் வந்து, ‘நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பிவிட்டேன். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை” என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், ‘(தங்களிடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்’ என்று கூறினார்கள்” என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இ(வ்வாறு நபியவர்கள் கூறினார்கள் என்ப)தற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும்’ என்றார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?’ என்று கேட்டார்கள்.அதற்கு (அங்கிருந்த) உபை இப்னு கஅப் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார்” என்றார்கள். அங்கு நான்தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூ மூஸா (ரலி) அவர்களுடன் சென்று ‘நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்”.
ஒருவரின் வீட்டுக்குள் நுழையும் முன்பு அனுமதி கோருதல்.
நுபுவ்வத்திற்குப் பிறகு இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையின் பெயர் என்ன?
கேள்வி எண்: 85. நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்திற்குப் பிறகு இஸ்லாத்தில் (இஸ்லாமிய பெற்றோருக்கு) பிறந்த முதல் குழந்தை எது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்? Continue reading
பயபக்தியாளரிடம் தன் பிள்ளைக்கு பெயர் வைத்தல்.
1386. (என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒரு முறை) அபூ தல்ஹா (ரலி) வெளியே செல்ல அப்போது அந்தப் பையன் இறந்துவிட்டான். அபூதல்ஹா (ரலி) திரும்பி வந்தபோது ‘என் மகன் என்ன ஆனான்?’ என்று கேட்டார்கள். (அவரின் துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), ‘அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்” என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூ தல்ஹா (ரலி) இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவுகொண்டார்கள். உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம்) ‘பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்” என்று கூறினார்கள். விடிந்ததும் அபூ தல்ஹா (ரலி) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள். அபூ தல்ஹா (ரலி), ‘ஆம்” என்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் சுபிட்சம் வழங்குவாயாக” என்று பிரார்த்தித்தார்கள். பின்னர் உம்முசுலைம் (ரலி) ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூ தல்ஹா (ரலி), ‘குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டு செல்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். என்னிடம் உம்மு சுலைம் (ரலி) பேரீச்சம் பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, ‘இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?’ என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் ‘ஆம்; பேரீச்சம் பழங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தம் வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார்கள்.
1387. எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அப்போது அவர்கள் ‘இப்ராஹீம்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக சுபிட்சம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு என்னிடம் கொடுத்துவிட்டார்கள். அக்குழந்தையே அபூ மூஸா (ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும்.
1388. நான் (என் மகன்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைரை (மக்காவில்) சூலுற்றிருந்தேன். சூல்காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன். மதீனா வந்தேன் (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். பிறகு, நபி (ஸல்) அவர்களிடம் அவனைக் கொண்டு சென்று அவர்களின் மடியில் அவனை வைத்தேன். பிறகு அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனுடைய வாயில் உமிழ்ந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீர் தான் அவனுடைய வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனுடைய வாயினுள் வைத்து தேய்த்து விட்டார்கள். பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள்வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன்தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு மதீனாவில்) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான்.
1389. அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ (ரலி) அவர்களின் புதல்வர் ‘முன்திர்’ என்பவர் ப
ிறந்தவுடன் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அக்குழந்தையைத் தம் மடியில் வைத்தார்கள். அப்போது (குழந்தையின் தந்தை) அபூ உசைத் (ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (திடீரென) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் நடந்த (சம்பவம்) ஒன்றினால் அவர்களின் கவனம் (வேறு பக்கம்) திரும்பியது. உடனே அபூ உசைத் (ரலி) அவர்கள் தம் புதல்வரை நபியவர்களின் மடியிலிருந்து எடுத்துவிடுமாறு கூற, அவ்வாறே (குழந்தை) தூக்கப்பட்டது. (சிறிது நேரத்தில்) தன்னிலைக்குத் திரும்பிய நபி (ஸல்) அவர்கள் ‘அந்த குழந்தை எங்கே?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ உசைத் (ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! குழந்தையை (வீட்டுக்கு) அனுப்பிவிட்டோம்” என்று கூறினார். ‘அக்குழந்தையின் பெயரென்ன?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, ‘இன்னது’ என (தம் மகனுக்கு வைக்கப்பட்ட பெயரை) அபூ உசைத் கூறினார்கள். (அப்பெயர் பிடிக்காததால்) நபி (ஸல்) அவர்கள் ‘அல்ல (இனிமேல்) அவர் பெயர் ‘முன்திர்’ (எச்சரிப்பவர்) ஆகும்” என்று கூறினார்கள். எனவே, அன்று அவருக்கு நபி (ஸல்) அவர்கள் தாம் ‘முன்திர் எனப் பெயர் சூட்டினார்கள்.
1390. நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு ‘அபூ உமைர்’ என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார்கள். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகிறேன். நபி (ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), ‘அபூ உமைரே! உன் சின்னக்குருவி என்ன செய்கிறது?’ என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.
அரசனுக்கு அரசன் என்று எவரையும் அழைக்காதே.
1385. மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு ‘மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கெட்ட பெயர்களை நல்ல பெயராக மாற்றுதல்.
1384. ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது ‘அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார்” என்று (மக்களால்) சொல்லப்பட்டது. எனவே, அவருக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப்’ என்று பெயர் சூட்டினார்கள்.
நபியின் குறிப்புப் பெயரைச் சூட்டாதே.
1380. ஒருவர் பகீஃ எனுமிடத்தில் ‘அபுல் காஸிமே!’ என்று அழைத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கித் திரும்பியபோது ‘உங்களை அழைக்கவில்லை’ என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். என் குன்யத்தை (‘அபுல்காஸிம்’ என்னும் என்னுடைய குறிப்புப் பெயரை) சூட்டிக் கொள்ளாதீர்கள்!” என்றார்கள்.
1381. எங்களில் – அன்சாரிகளில் – ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு ‘முஹம்மத்’ என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் இப்னு ஃபுளாலா (ரலி)) என்னிடம் கூறினார்: நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி (ஸல்) அவர்கள், ‘என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல் காசிம் என்னும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள். ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே ஆக்கப்பட்டுள்ளேன். அந்த அன்சாரித் தோழர் ‘காசிம்’ என்ற நபி (ஸல்) அவர்களின் பெயரைத் தன் குழந்தைக்குச் சூட்ட விரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்றார்கள்.
1382. எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் ‘காசிம்’ என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்), ‘உம்மை நாங்கள் அபுல் காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைத்து, மேன்மைப்படுத்திட மாட்டோம். (நபியவர்களுக்கு ‘அபுல் காசிம்’ எனும் பெயர் இருப்பதே காரணம்)” என்று சொன்னோம். எனவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று, இதைத்) தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உம்முடைய மகனுக்கு அப்துர் ரஹ்மான் எனப் பெயர் சூட்டுக!” என்று கூறினார்கள்.
1383. அபுல் காசிம் (ஸல்) அவர்கள், ‘என் பெயரை (உங்களுக்குச்) சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் ஆச்சரியமான அத்தாட்சிகளில் உள்ள சாஸனத்தை உடைய குகைவாசிகள்!
அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 18:10)
ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். (அல்குர்ஆன்: 18:11)
பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம். (அல்குர்ஆன்: 18:12) Continue reading
செய்யாத ஒன்றை செய்ததாக கூறுதல்.
1379. ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குச் சக்களத்தி ஒருவர் இருக்கிறார். நான் (அவரிடம்) என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக் கொண்டால், அது குற்றமாகுமா?’ என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘கிடைக்கப் பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக் கொள்கிறவர், போலியான இரண்டு ஆடைகளை (அதாவது இரவல் மற்றும் அமானித ஆடைகளை, அல்லது போலியான மேல் மற்றும் கீழ் ஆடைகளை) அணிந்துகொண்டவர் போலாவார்” என்று கூறினார்கள்.
புஹாரி :5219 அஸ்மா (ரலி).
சவுரி முடி செயற்கை சிங்காரங்கள் பற்றி.
1375. ஒரு பெண் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் என் மகளுக்கு மணமுடித்து வைத்தேன். பிறகு அவள் (தட்டம்மையால்) நோயுற்றுவிட அதன் காரணத்தால் அவளுடைய தலை முடி கொட்டிவிட்டது. அவளுடைய கணவரோ (அவளை அழகுபடுத்தும்படி) என்னைத் தூண்டுகிறார். எனவே, அவளுடைய தலையில் நான் ஒட்டுமுடி வைத்து விடட்டுமா?’ என்று கேட்டார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும், ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் சபித்தார்கள்.
புஹாரி : 5935 அஸ்மா (ரலி).
1376. அன்சாரிகளில் ஒரு பெண் தம் மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரின் மகளின் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, ‘என் கணவர், என்னுடைய தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்” என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்கள்.
புஹாரி :5205ஆயிஷா (ரலி).
1377. ‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?’ என்று இப்னு மஸ்ஊத் (ரலி) கூறினார்கள். இச்செய்தி பனூஅசத் குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’ எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, ‘இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், ‘(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!” என்று கேட்டதற்கு அவர்கள், ‘நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். ‘இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்” எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?’ என்று கேட்டார்கள். அந்தப் பெண், ‘ஆம் (ஒதினேன்)” என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்” என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, ‘உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்” என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி), ‘சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!” என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), ‘என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்” என்று கூறினார்கள்.
புஹாரி : 4886 இப்னு மஸ்ஊத் (ரலி).
1378. முஆவியா (ரலி) ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரி முடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), ‘மதீனா வாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?’ என்று கேட்டுவிட்டு, ‘நபி (ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுப்பதையும், ‘பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களின் பெண்கள் பயன்படுத்தியபோது தான்’ என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்” என்று சொல்லக் கேட்டேன்.
புஹாரி : 3468 ஹூமைத் பின் அப்துர்ரஹ்மான் (ரலி).
சாலையில் தடை ஏற்படுத்தாதே.
1374. ”நீங்கள் சாலையில் அமர்வதைத் தவிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறு வழியில்லை அவைதாம், நாங்கள் பேசிக் கொள்கிற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் நீங்கள் அந்தச் சபைகளுக்கு வ(ந்து அம)ரும்போது, பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘பாதையின் உரிமை என்ன?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும் (பாதையில் செல்வோருக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் (அதன் உரிமைகள்) ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
புஹாரி : 2465 அபூஸயீத் அல்குத்ரி (ரலி).