இஸ்லாம் முழங்குவது எதனை?

வணக்கத்துக்குரிய ஏக இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கும்படி இஸ்லாம் அழைக்கின்றது. மேலும், தன்னுடைய அறிவு ஞானத்தைக் கொண்டு சிந்தித்து உணருமாறு மனிதனுக்கு திரும்ப திரும்ப கட்டளையிடுகின்றது.

இஸ்லாம் பரவிய ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே உலகின் மாபெரும் நாகரிகங்களும், பல்கலைக்கழகங்களும் வளமானதொரு வாழ்வை நோக்கி நடைபோடத் துவங்கின.

“அறிவைத் தேடிப்பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீதும் கடமை” – எனும்

முஹம்மத் (ஸல்) அவர்களின் அமுதமொழி இம்மாபெரும் புரட்சிக்கு அடிகோலியது! இதன் விளைவாக, கிழக்கு மற்றும் மேற்குலக சிந்தனைகளின் கூட்டிணைப்பும், ஆக்கபூர்வமான பழைய கருத்தோட்டங்களை உள்ளடக்கிய புதிய சிந்தனைகளைக் கொண்டதொரு உலகம் உருவானது.

இதன் தாக்கத்தால் கலை, மருத்துவம், கணிதம், இயற்பியல், வானவியல், புவியியல், கட்டடக்கலை, இலக்கியம், வரலாறு உள்ளிட்ட மனித வாழ்வின் பல்வேறு துறைகளும் மாபெரும் வளர்ச்சியும் ஏற்றமும் கண்டன. அதுமட்டுமல்ல, அரேபிய எண் அமைப்பு, நவீன கணித வாய்ப்பாட்டு முறையான அல்ஜிப்ரா, கணிதத்தின் தோற்றுவாயான பூஜ்யம் இவைபோன்ற இன்னபிற பல்வேறு கண்டுபிடிப்புகள் அனைத்தும் மத்திய ஐரோப்பாவுக்குச் சென்றது இஸ்லாமிய உலகிலிருந்துதான் என்பது வரலாற்று உண்மை!

அதுமட்டுமல்ல, மிக நுணுக்கமான உபகரணங்கள் பல தயாரிக்கப்பட்டன. உதாரணமாக, ஐரோப்பிய கடற்படையினருக்கு பெரிதும் துணையாக அமைந்த உயர்வுமானி (Astrolabe) கோணமானி (Quadrant)  மேலும், உயர்ரக கடற்ப்பயண வரைபடங்கள் ஆகியன பெரும் நவீனமடைந்தது இஸ்லாமிய உலகின் தாக்கத்தினால் தான்!

நூல்: ‘இஸ்லாத்தை அறிந்து கொள்ளுங்கள்’
ஆசிரியர்: மு.அ. அப்துல் முஸவ்விர் B.Sc.
இஸ்லாமிய நிலையம் – தமிழ் பிரிவு
குவைத்.

 

This entry was posted in ஈமான் (நம்பிக்கை). Bookmark the permalink.