இறை தூதர் ஸாலிஹ்!

11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”

11:62. அதற்கு அவர்கள், ஸாலிஹே! இதற்கு முன்னெரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதை விட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

11:63. “என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விட மாட்டீர்கள்” என்று கூறினார்.

11:64. “அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக் கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்”(என்றும் கூறினார்).

11:65. ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்து விடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

11:66. நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்.) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

11:67. அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்.

11:68. (அதற்கு முன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டத்தினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்வீர்களாக! ‘ஸமூது’ (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.

அல் குர்ஆன்: சூரா – ஹூத்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை தூதர் ஸாலிஹ்!

இறை தூதர் ஹூத்

11:50. ‘ஆது’ சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: ‘என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.

11:51. ‘என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குறிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)

11:52. “என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் – இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).

11:53. (அதற்கு) அவர்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் – நாங்கள் உம் மேல் (ஈமான் – நம்பிக்கை) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார்கள்.

11:54. ” எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள். அதற்கு) அவர், நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார்.

11:55. “(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியை செய்துப் பாருங்கள்; (இதில்) நிங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்” (என்றும் கூறினார்).

11:56. நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன் நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.

11:57. “நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்து விட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்குப் பதிலாக வைத்து விடுவான்; அவனுக்கு எப்பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்).

11:58. நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்த போது, ஹூதையும் அவருடன் ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் – இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம்.

11:59. (நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் – அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாத கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.

11:60. எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! ‘ஆது’ கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான ‘ஆது’ கூட்டத்தாருக்கு கேடுதான்.

அல் குர்ஆன்: சூரா – ஹூத்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை தூதர் ஹூத்

இறைதூதர் நூஹ் (நோவா)

11:25. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர், (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”

11:26. “நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்” (என்று கூறினார்.)

11:27. அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), “நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாக ) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானவர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை – மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்” என்று கூறினார்கள்.

11:28. (அதற்கு) அவர் (மக்களை நோக்கி) “என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும்அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார்.

11:29. அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்து சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்த பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம் இல்லை; எனவே ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாக நான் காண்கிறேன்.

11:30. :என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டி விட்டால், அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

11:31. “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு (வான தூதர்) என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைக்கு மாறாக நான் ஏதும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்” (என்றும் கூறினார்).

11:32. (அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.

11:33. (அதற்கு) அவர், “நிச்சயமாக அல்லாஹ் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக் கூடியவர்களும் அல்லர்” என்று கூறினார்.

11:34. “நாம் உங்களுக்குநல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பயனும் அளிக்காது; அவன்ந்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்).

11:35. (நபியே! நீர் இதைக் கூறும் போது) “இதனைஇட்டுக் கட்டிச் சொல்கிறார்”என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: “நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என்மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.”

11:36. நூஹ்வுக்கு வஹீ (செய்தி) அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களைத்தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்; ஆதலால் அவர்கள் செய்வதைப் பற்றி நீர் விசாரப்பாடாதீர்.”

11:37. “நம் பார்வையில் நம் (வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலை கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.”



11:38. அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பது போலவே, (அதி சீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.

11:39. “அன்றியும், எவன் மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன் மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).

11:40. இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நான் நூஹை நோக்கி:) “உயிர் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக் கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படிவார்கள் என்று எவர்களைக் குறித்துமுன்பே நம்) வாக்கு ஏற்பட்டு விட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களையும் ஏற்றிக் கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.

11:41. இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாகஎன் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.

11:42. பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களைசுமந்துக் கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (நம்பிக்கை கொள்ளாதவர்களுடன் சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.

11:43. அதற்கு அவன்: என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான். இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவனைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றபடுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

11:44. பின்னர்: “பூமியே! நீ, உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக் கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலை மீது தங்கியது – அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.

11:45. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.

11:46. அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விட வேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”

11:47. “என் இறைவா! எனக்கு எதைப் பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில் கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகி விடுவேன்” என்று கூறினார்.

11:48. “நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக; இன்னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினைத் தரும் வேதனை அவர்களை தீண்டும்” என்று கூறப்பட்டது.

11:49. (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோஇதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்)

அல் குர்ஆன்: சூரா – ஹூது.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறைதூதர் நூஹ் (நோவா)

நிலைத்தவனாகிய நித்திய ஜீவன்!

20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்

பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என்

இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல்

பரப்பி) விடுவான்” என்று நீர் கூறுவீராக.



20:106. “பின்பு, அவற்றை சமவெளியாக்கி விடுவான்.



20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்”.

20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் – எக்காளம்

மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்;

அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும்

(அவ்வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச்

சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக

அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர

(வேறெதையும்) நீர் கேட்க மாட்டீர்.

20:109. அந்நாளில் அர்ரஹ்மான் (அருளாளன்)

எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்துக்

கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய

ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.

20:110. அவர்களுக்கு முன்னிருப்பதையும்,

அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன்

நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்)

கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.

20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான

(அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து

தாழ்ந்து விடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச்

சுமந்துக் கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி

விடுவான்.

20:112. எவர் முஃமினாக (நம்பிக்கை கொண்டவராக)

இருந்து, ஸாலிஹான – நற்செயல்களைச் செய்கிறாரோ

அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ,

(தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட

மாட்டார்.

20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை

அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள்

பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது

நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும்

பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை

விவரித்திருக்கின்றோம்.

20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே

மிக் உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு

(குர்ஆனின்) வஹீ – செய்தி அறிவிக்கப்பட்டு அது

முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர்

அவசரப் படாதீர்; ‘இறைவா! கல்வி ஞானத்தை

எனக்கு அதிகப்படுத்துவாயாக!’ என்றும் நீர்

பிரார்த்தனை செய்வீராக!.

அல் குர்ஆன்: சூரா தாஹா.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நிலைத்தவனாகிய நித்திய ஜீவன்!

அர்ரஹ்மான்! (அருளாளன்)!

17:105. இன்னும், முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே நாம் இதனை (குர்ஆனை) இறக்கி வைத்தோம்; முற்றிலும் சத்தியத்தைக் கொண்டே இது இறங்கியது; மேலும், (நபியே!) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமேயன்றி அனுப்பவில்லை.



17:106. இன்னும், மக்களுக்கு நீர் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிப்பதற்காகவே இந்த குர்ஆனை நாம் பகுதி பகுதியாகப் பிரித்தோம்; இன்னும், நாம் அதனைப் படிப்படியாக இறக்கி வைத்தோம்.

17:107. (நபியே!) “அதனை நீங்கள் நம்புங்கள், அல்லது நம்பாதிருங்கள்; (அதனால் நமக்குக் கூடுதல், குறைவு எதுவுமில்லை) நிச்சயமாக இதற்கு முன்னர் எவர் வேத ஞானம் கொடுக்கப்பட்டிருந்தார்களோ, அவர்களிடம் அது (குர்ஆன்) ஓதி காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஸுஜூது – சிரவணக்கம் செய்தவர்களாக முகங்களின் மீது (பணிந்து) விழுவார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

17:108. அன்றியும், “எங்கள் இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்; எங்களுடைய இறைவனின் வாக்குறுதி நிறைவேறி விட்டது” என்றும் அவர்கள் கூறுவார்கள்.

17:109. இன்னும் அவர்கள் அழுதவர்களாக முகங்கள் குப்புற விழுவார்கள்; இன்னும் அவர்களுடைய உள்ளச்சத்தையும் (அது) அதிகப்படுத்தும்.

17:110. “நீங்கள் (அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள்; அல்லது அர்ரஹ்மான் என்று அழையுங்கள்; எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக்கின்றன” என்று (நபியே!) கூறிவீராக; இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும், இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக.

17:111. “அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொ:ள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும்,எந்த வித பலகீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கின்றானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக.

அல் குர்ஆன்: பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின் சந்ததிகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அர்ரஹ்மான்! (அருளாளன்)!

தீர்ப்பு நாளின் அதிபதி!

18:45. இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்துஇறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன: ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்

18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்க கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.

18:47. (நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்டவெளியாக காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.

18:48. அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; “நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணி கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்)

18:49. இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டு வைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்ய மாட்டான்.

அல் குர்ஆன்: அல் கஹ்ஃபு (குகை)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தீர்ப்பு நாளின் அதிபதி!

அல்லாஹ்வின் வழிமுறை!

7:94. நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.

7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலைக்கு மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் – ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.

7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.

7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?

7:98. அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?

7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.

7:100. பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.

7:101. (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை – இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் (நம்பிக்கை கொள்ளாதவர்களின்) இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.

7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை – அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.

அல் குர்ஆன்: அல் அஃராஃப் (சிகரங்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் வழிமுறை!

யாருடையது அழகிய சபை?

19:66. மனிதன் கேட்கிறான்: “நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று.

19:67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்து பார்க்க வேண்டாமா?

19:68. ஆகவே, (நபியே) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.

19:69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு (அருளாளனுக்கு) மாறு செய்வதில் கடினமாக – தீவிரமாக – இருந்தவர்கள் யாவரையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.

19:70. பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்களுடைய பாவத்தால்) முதல் தகுதியுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

19:71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம் இறைவனின் முடிவான தீர்மானமாகும்.

19:72. அதன் பின்னர், தக்வாவுடன் – பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.

19:73. இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில் (நம்பிக்கை கொண்டவர்களிடத்தில்) (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்: (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) “நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடைய சபை மிக அழகாகவும் இருக்கிறது?” என்று கேட்கின்றனர்.

19:74. இன்னும், இவர்களை விட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.

19:75. “யார் வழி கேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை (தீர்ப்பு நாளை) காணும் வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலகீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்துக் கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

19:76. “மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.”

19:77. “நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும் – தீர்ப்பு நாளிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப் படுவேன்” என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?

19:78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா; அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கின்றானா?

19:79. அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.

19:80. இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.

19:81. (முஷ்ரிக்குகள் – இணை வைப்பவர்கள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!

19:82. அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து இவர்களுக்கு விரோதமாக மாறிவிடுவர்.

அல் குர்ஆன்: ஸூரத்து மர்யம்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on யாருடையது அழகிய சபை?

நம்பிக்கை கொண்டோருக்கான சட்டதிட்டங்கள்!

24:1. (இது திருக் குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.

24:2. விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்: மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவரின் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் (நம்பிக்கை கொண்டவர்களில்) ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்த பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு யாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு (நம்பிக்கை கொண்டவர்களுக்கு) விலக்கப் பட்டிருக்கிறது.

24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள் தான் தீயவர்கள்.

24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா (பாவ மன்னிப்பு) செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ – நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால், அவன், நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:

24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).

24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:

24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களில் உள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).

அல் குர்ஆன்:அந்நூர் (ஒளி)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நம்பிக்கை கொண்டோருக்கான சட்டதிட்டங்கள்!

நன்மை புரிபவரின் பிரதிபலன்!

13:19. உம் இறைவனால் உம்மீது நிச்சயமாக இறப்பட்ட(வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தான் நல்லுபதேசம் பெறுவார்கள்.

13:20. அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள்; இன்னும், (தாம் செய்த) உடன் படிக்கையை முறித்து விடவும் மாட்டார்கள்.

13:21. மேலும், அவர்கள் எத்தகையோரென்றால் அல்லாஹ் எது சேர்த்து வைக்கப்படப் வேண்டும் எனக் கட்டளையிட்டானோ, அதைச் சேர்த்து வைப்பார்கள்; இன்னும், அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள்; மேலும், (மறுமை – தீர்ப்பு நாளின்) கடுமையான கேள்விக் கணக்கைக் குறித்தும் பயப்படுவார்கள்.

13:22. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைப்பிடிப்பார்கள்; தொழுகையையும் (வணக்கத்தையும்) நிலைநிறுத்துவார்கள்; நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் – தீர்ப்பு நாளில் (சுவனபதியென்னும்) நல்ல வீடு இருக்கிறது.

13:23. நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள்; மலக்குகள் – வான தூதர்கள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.

13:24. “நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தற்காக ‘ஸலாமுன் அலைக்கும்’ (உங்கள் மீது சாந்தி உண்டாவதாக!) உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று!” (என்று கூறுவார்கள்,)

13:25. எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிபடுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ; இன்னும் அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ; பூமியில் ஃபஸாது (விஷமம்) செய்கிறார்களோ – அத்தகையோருக்குச் சாபந்தான்; இன்னும், அவர்களுக்கு மிகக்கெட்ட வீடும் இருக்கிறது.

13:26. அல்லாஹ் தான் நாடியவர்க்கு சம்பத்தை விசாலமாக்குகின்றான்; (தான் நாடியவருக்கு) அளவிட்டுக் கொடுக்கின்றான்; எனினும் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் மகிழ்ச்சியடைகிறார்கள் – இவ்வுலக வாழ்க்கையோ மறுமைக்கு (மறு உலக வாழ்க்கைக்கு) ஒப்பிட்டால் மிகவும் அற்பமேயன்றி வேறில்லை.

அல் குர்ஆன்: அர் ரஃது (இடியோசை)


Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நன்மை புரிபவரின் பிரதிபலன்!