அச்சமின்றி இருக்க தகுதியுடையவர் யார்?



6:74. இப்ராஹீம் தம் தகப்பனார் ஆஜரிடம், “விக்கிரகங்களையா நீர் தெய்வங்களாக எடுத்துக் கொள்கிறீர்? நான் உம்மையும் உம் சமூகத்தாரையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை நிச்சயமாகப் பார்க்கிறேன்” என்று கூறியதை நினைத்துப்பாரும்.

6:75. அவர் உறுதியான நம்பிக்கையுடையவராய் ஆகும் பொருட்டு வானங்கள், பூமி இவற்றின் ஆட்சியை இப்ராஹீமுக்கு இவ்வாறு காண்பித்தோம்.

6:76. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்ட போது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்.

6:77. பின்னர் சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், “இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், “என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.

6:78. பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்ட போது: “இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று அவர் கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.

6:79. “வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்கானவனாக – (இணைவைப்போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்).

6:80. அவருடன் அவருடைய கூட்டத்தார் விவாதித்தார்கள்; அதற்கவர் “அல்லாஹ்வைப் பற்றியா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவன் நிச்சயமாக எனக்கு நேர்வழி காட்டி விட்டான்; நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் பயப்பட மாட்டேன்; என் இறைவன் எதையாவது நாடினாலன்றி (எதுவும் நிகழ்ந்து விடாது); என் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?” என்று கூறினார்.

6:81. உங்களுக்கு அவன் எந்த அத்தாட்சியும் இறக்கி வைக்காமலிருக்கும்போது நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது பற்றி பயப்படவில்லை – அப்படியிருக்க நீங்கள் (அவனுக்கு) இணைவைப்பவற்றுக்கு நான் எப்படி பயப்படுவேன்? நம் இருபிரிவினரில் அச்சமின்றி இருக்கத்தகுதி உடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், (கூறுங்கள் எனவும் கேட்டார்).

6:82. எவர் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்த வில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியை பெற்றுக் கொண்டவர்கள்.

6:83. இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

அல் குர்ஆன்: அல் அன்ஆம்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அச்சமின்றி இருக்க தகுதியுடையவர் யார்?

எச்சரிக்கையை செவிமடுப்போர் எவரேனும் உண்டோ?

14:42. மேலும் அக்கிரமக்காரர்கள் செய்துக் கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமாக இருக்கின்றான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதபடுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை – இறுதி) நாளுக்காகத்தான்.

14:43. (அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.

14:44. எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்கவில்லையா?” (என்றும்)

14:45. அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டி இருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).

14:46. எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்த போதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.

14:47. ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.

14:48. இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.

14:49. இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.

14:50. அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.

14:51. அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்தற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.

14:52. இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.



அல் குர்ஆன்: ஸூரத்து இப்ராஹீம்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on எச்சரிக்கையை செவிமடுப்போர் எவரேனும் உண்டோ?

அல்லாஹ்வின் விருந்தினர்களே!

நம்பிக்கை கொண்டவர்களே!

2:125. (“கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை – மகாமு இப்ராஹீமை – தொழும் இடமாக ஆக்கி கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்) இன்னும் ‘என் வீட்டை சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜுது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்’ என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.

2:158. நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன; எனவே (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல; இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

2:195. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை – நேசிக்கின்றான்.

2:196. ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படி பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப் படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு (ஆடு,மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்; அந்த ஹத்யு (குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளை களையாதீர்கள்; ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ (தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்கு பரிகாரமாக நோன்பு (விரதம்) இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ (அறுத்து பலியிடல்) கொடுத்தல் வேண்டும்; பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல்வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாக பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்த சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் (இறை இல்லம்) பக்கத்தில் இல்லையோ அவருக்குத்தான் – ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

2:197. ஹஜ்ஜுக்குறிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம்மீது கடமையாக்கி கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு – ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கின்றான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் கைரானது (நன்மையானது), தக்வா (என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.

2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும் போது “மஷ்ருல் ஹராம்” என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.

2:199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

2:200. ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜு கிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல் – இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், “எங்கள் இறைவனே! இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு” என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் (தீர்ப்பு நாளில்) யாதொரு நற்பாக்கியமும் இல்லை.

2:201. இன்னும் அவர்களில் சிலர், “ரப்பனா! (எங்கள் இறைவனே!) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக; இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!” எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.

2:202. இவ்வாறு, (இம்மை, மறுமையிரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு; தவிர, அல்லாஹ் கணெக்ககெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.

2:203. குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் (மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்து விட்டால் அவர் மீது குற்றமில்லை; யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாரோ அவர் மீதும் குற்றமில்லை; (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது) அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அல் குர்ஆன்: அல் பகரா.

3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

3:97. அதில் தெளிவான அத்தாட்சிகல் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெருகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை – ஏனெனில்) – நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.

அல் குர்ஆன்: ஆல் இம்ரான்.

5:94. ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் யார் அவனை அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனை உண்டு.

5:95. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக்கொன்றால் (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்குச் சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாக கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது பரிகாரமளிக்க ஏதுமில்லையாயின் தனது வினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கின்றான்.

5:96. உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக – ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நிங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள்.

5:97. அல்லாஹ், சங்கை பொருந்திய வீடாகிய கஃபாவை மனிதர்களுக்கு (நன்மைகள் அருளும்) நிலையான தலமக்கியிருக்கின்றான்; இன்னும் சங்கையான மாதங்களையும், (குர்பானி கொடுக்கும்) பிராணிகளையும் ((குர்பானிக்காக) அடையாளம் பெற்ற பிராணிகளையும் (அபயம் பெற்றவையாக ஆக்கிருக்கின்றான்;) அல்லாஹ் இவ்வாறு செய்தது, நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலும் இருப்பவற்றையெல்லாம் நன்கறிவான் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதற்காகவேயாம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்து பொருட்களையும் நன்கறிபவன்.

அல் குர்ஆன்: அல் மாயிதா.

22:26. நாம் இப்ராஹீமுக்கு புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து ‘நீர் எனக்கு எவரையும் இணை வைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தை சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, சுஜுது செய்(து தொழு)வோருக்கும், அதை தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).

22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).

22:28. தங்களுக்குறிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரை சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.

22:29. பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி,நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) பூர்வீக ஆலயத்தை :தவாஃபும்” செய்ய வேண்டும்.

22:30. இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மை படுத்துகிறாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன; ஆகவே விக்கிரகங்களின் அசுத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்.

22:34. இன்னும் கால்நடை (ப் பிராணி)களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும்படிச் செய்வதற்காகவே குர்பான் கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன் தான்; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்கள் முற்றிலும் வழிபடுங்கள்; (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

22:36. இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்: அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது; எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக; பிறகு, அவை தங்கள் பக்கங்கள் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும்,இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் – இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

22:37. (எனினும்) குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்தற்காக அவனை நீங்கள் பெருமை படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக

அல் குர்ஆன்: அல் ஹஜ்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on அல்லாஹ்வின் விருந்தினர்களே!

படைத்தவனைப் பற்றி அவன் படைப்புகளின் தர்க்கம்!

2:204. (நபியே!) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கின்றான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி (சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாக கூறுவான்; (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.

2:206. “அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்” என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது; அவனுக்கு நரகமே போதுமானது; நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.

அல் குர்ஆன்: அல் பகரா.



22:3. இன்னும் எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கிறவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகிறவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.

22:8. இன்னும்: கல்வி ஞானமோ, நேர் வழிகாட்டியோ, வேத(ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்து தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.



22:9. (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம (தீர்ப்பு) நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்கச் செய்வோம்.

22:10. ” உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்).

அல் குர்ஆன்: அல் ஹஜ்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on படைத்தவனைப் பற்றி அவன் படைப்புகளின் தர்க்கம்!

யாருக்கும் அநியாயம் புரியாத இறைவன்!

21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் குறை கூறுபவர் இவர்தானா?” என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை, மேலும் அவர்கள் ரஹ்மானுடைய (அருளாளனுடைய) நினைவை நிராகரிக்கின்றனர்.

21:37. மனிதன் அவசரக்காரனகவே படைக்கப்பட்டிருக்கிறான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.

21:38. “நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

21:39. தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படாமலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)

21:40. அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.

21:41. இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டார்கள் – ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது.

21:42. “உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக் கூடியவர் எவர்?” என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால் அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.

21:43. அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்கு தாமே உதவி செய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றபடுபவர்களும் அல்லர்.

21:44. எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்துக் கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?

21:45. “நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ (இறை செய்தி) மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டே தான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும் செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பை செவிமடுக்க மாட்டார்கள்.

21:46. உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்கு கேடுதான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.

21:47. இன்னும், கியாம (தீர்ப்பு) நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை தீமையில்) ஒரு கடுகு அளவு எடை இருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறு கணக்கெடுக்க நாமே போதும்.

அல் குர்ஆன்: அல் அன்பியா (நபிமார்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on யாருக்கும் அநியாயம் புரியாத இறைவன்!

அனைவரும் ஒரு நாள் மரிப்பவரே!



21: 30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் (நம்பிக்கை கொள்ளாதவர்கள்) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?

21:31 இன்னும் இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.

21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளை புறக்கணித்து விடுகிறார்கள்.

21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.

21:34. (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்றும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழ போகிறார்களா?

21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரிட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

அல் குர்ஆன்: அல் அன்பியா (நபிமார்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அனைவரும் ஒரு நாள் மரிப்பவரே!

நம்பிக்கை கொண்டவர்களே!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஈமான் கொண்டவர்களே! இன்பத்திலும் துன்பத்திலும் பிரார்த்தனை புரியுங்கள் (அல்லாஹ் அவன் வேதத்தின் மூலம் கற்று கொடுத்தவாறு)

“எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தார் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!” (2:286)

எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (3:8)

எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக!” (3:147)

“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளை கைப்பற்றிக் கொள்வாயாக!” (7:126)

“எங்கள் இறைவனே! அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கி விடாதே!” (10:85)

“(எங்கள் இறைவனே!) இந்த நம்பிக்கை கொள்ளாத மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!” (10:86)

“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கபடுத்துவதையும் நிச்சயமாக நீயே அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ உள்ள எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை” (14:38)

“எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள்ளதாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” (18:10)

“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்” (23:28)

“என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன். இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (23:97,98)

“எங்கள் இறைவா!நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” (23:109)

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக!” (25:74)

“இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக; மேலும் ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக!” (26:83)

“என் இறைவனே! என்னையும், என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டிருக்கிற (தீய)வற்றிலிருந்து காப்பாயாக!” (26:169)

“என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக! இன்னும் உன் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!” (27:19)

“இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” (46:15)

“எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்.” (59:10)

யா அல்லாஹ்! இன்ப ,நிலையிலும் துன்ப நிலையிலும் உன் பக்கமே முகம் திருப்பக்கூடிய உண்மை முஸ்லிம்களாக எங்களை வாழ வைப்பாயாக!

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on நம்பிக்கை கொண்டவர்களே!

இறை தூதர்கள் இப்ராஹீம் & லூத்.

11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி கொண்டு வந்து ‘ஸலாம்’ (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.

11:70. ஆனால் அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டு விட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

11:71. அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாஃக்கைப் பற்றியும், இஸ்ஹாஃக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.

11:72. அதற்கு அவர் கூறினார்:”ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சர்யமான விஷயம்தான்!”

11:73. (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சர்யப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.

11:74. (இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி ,நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.

11:75. நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.

11:76. “இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம் இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்து விட்டது – மேலும், அவர்களுக்குத் தவிர்க்க முடியாத வேதனை நிச்சயமாக வரக் கூடியதேயாகும்.

11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் (இறைத்தூதர்) வந்த போது, (தம்) மக்களுக்காக அவர் பெரிதும் விசனமடைந்தார் (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக “இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.

11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள். இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே இதோ இவர்கள் என் புதல்விகள். இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள். நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.

11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர். நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.

11:80. அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்க வேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்க வேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.

11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள் “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம். நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது. எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும் போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்று விடும்! உம்முடைய மனைவியை தவிர, உங்களில் யாரும் திரும்பி பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்து கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும். விடியற்காலை சமீபித்து விடவில்லையா?”

11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம். இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை மழைப்போல் பொழியவைத்தோம்.

11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன. (அவ்வூர்) இந்த அநியாயகாரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.

அல் குர்ஆன்: சூரா – ஹூது.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை தூதர்கள் இப்ராஹீம் & லூத்.

முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

அன்பான என் மார்க்கத்தின் சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த குர்ஆன் வசனங்களை உற்று நோக்குங்கள்.

2:214. உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு
ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே
சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள்
எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி
போன்ற) கஷ்டங்களும், துன்பங்களும் பீடித்தன;
“அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்” என்று
தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும்
அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்;
“நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே
இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்)

3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும்,
வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்;
அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு,
மாடு ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி
நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை
மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை
(யெல்லாம் நிலயற்ற) உலக வாழ்வின்
சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான
தங்குமிடமுண்டு.

8:25. நீங்கள் வேதனைக்கு பயந்துக் கொள்ளுங்கள்;
அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்
தான் குறிப்பாக பிடிக்கும் என்பதில்லை – நிச்சயமாக
அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன்
என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

10:62. (முஃமின்களே) அறிந்து கொள்ளுங்கள்;
நிச்சயமாக அல்லாஹ்வின் நேயர்களுக்கு எவ்வித
அச்சமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும்
மாட்டார்கள்.

21: 23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக்
கேட்க முடியாது;ஆனால், அவர்கள் தாம் (அவர்கள்
செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.

21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச்
சுவைப்பதாகவே இருக்கிறது; பரிட்சைக்காக
கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம்
உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே
நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

17:58. இன்னும் கியாம நாளைக்கு முன்னே
(அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊரையும் நாம்
அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக்
கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை; இது
(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில்
வரையப்பெற்றே இருக்கிறது.

39:49. மனிதனை ஏதேனும் ஒரு துன்பம்
தீண்டுமானால் அவன் நம்மையே (பிரார்த்தித்து)
அழைக்கிறான்; பிறகு, நம்மிடமிருந்து ஒரு
பாக்கியத்தைக் கொடுத்தோமானால்; அவன்: இது
எனக்குக் கொடுக்கப்பட்டதெல்லாம், என் அறிவின்
காரணமாகத்தான்!” என்று கூறுகிறான். அப்படியல்ல!
இது ஒரு சோதனையே – ஆனால் அவர்களில்
பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.

இன்சா அல்லாஹ்.

மீண்டும் இறை வசனங்களுடன் சந்திப்போம்,

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லீம் சகோதரா சிந்தித்துப் பார்!

முஸ்லீம்களுக்காக…

விரைவில் சகோதரர்களுடன்!

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on முஸ்லீம்களுக்காக…