அனைத்தையும் அறிந்தவனின் ஏற்பாடு!

13:8. ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சுருங்கிக் குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது.

13:9. (எல்லாவற்றின்) இரகசியத்தையும்,பரகசியத்தையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகவும் பெரியவன்; மிகவும் உயர்ந்தவன்.

13:10. எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாக கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்கு சமமே).

13:11. மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள் – வான தூதர்கள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனை பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையை தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும், அல்லாஹ் ஒரு சமுதாயத்தவருக்குத் தீவினையை நாடினால், அதைத் தடுப்பவர் எவருமில்லை – அவர்களுக்கு அவனைத் தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.

13:12. அவன் எத்தகையவெனின், அச்சத்தையும் (அதே நேரத்தில் மழைக்குறிய) ஆதரவையும் தரக்கூடிய நிலையில் மின்னலை அவன் தான் உங்களுக்குக் காட்டுகிறான்; கனத்த மேகத்தையும் அவனே உண்டாக்குகிறான்.

13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹ் செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடைவனாக இருக்கின்றான்.

13:14. உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனையன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்:) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டிருப்பவனைப்போல் இருக்கிறது. (இவன் அள்ளாது) அது வாயை அடைந்து விடாது – இன்னும் காஃபிர்களின் (நிராகரிப்பவரின்) பிராத்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.

அல் குர்ஆன்: அர் ரஃது (இடியோசை)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அனைத்தையும் அறிந்தவனின் ஏற்பாடு!

அனைத்தையும் அடக்கி ஆள்பவன் அவனல்லவா!

13:16. (நபியே அவர்களிடம்:) “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ் தான் என்று நீரே கூறும்: “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்துக் கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்.” மேலும் கூறும்: குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.” (அவ்வாறில்லையே; எனவே, நபியே! நீர் உறுதியாகக்) கூறும்: “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.

13:17. அவன் தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன; அவ்வெள்ளம் நுரையை மேலே சுமந்து செல்கிறது; (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது; இவ்வாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்து போய் விடுகிறது; ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது; இவ்வாறே அல்லாஹ் உவமைகளைக் கூறுகிறான்.



13:18. எவர் தம் இறைவனின் கட்டளைகளை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு (அது) அழகிய நன்மையாகும்; இன்னும் எவர் அவனது கட்டளைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ, அவர்களுக்கு பூமியிலுள்ள பொருட்கள் யாவும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப்போன்ற (இன்னொரு) பாகமும் இருந்து (மறுமையின் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) அவற்றையெல்லாம் மீட்டுப் பொருளாகக் கொடுத்துவிடவே விரும்புவார்கள்; (ஆனால் இது பலனை அளிக்காது;) அவர்களுக்குக் கேள்வி கணக்கு மிகவும் கடினமாக இருக்கும்; அவர்கள் தங்கும் இடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட புகலிட(மும் ஆகு)ம்.

அல் குர்ஆன்: அர் ரஃது (இடியோசை)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அனைத்தையும் அடக்கி ஆள்பவன் அவனல்லவா!

எங்கே திருப்பப்படுகிறார்கள்?

9:30. யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் மஸீஹை (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப் போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பபபடுகிறார்கள்?

9:31. அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் (இயேசுவையும்) தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள். வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் (அல்லாஹ்) அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.



9:32. தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.

9:33. அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான்.முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள் இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே ( அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்).

9:34. ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.

9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).

அல் குர்ஆன்: அத் தவ்பா – மன்னிப்பு தேடுதல்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on எங்கே திருப்பப்படுகிறார்கள்?

உறுதியான இறுதி தீர்ப்பு நாள்!

70:1. (நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப்போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.

70:2. காஃபிர்களுக்கு (நிராகரிப்பவர்களுக்கு அது ஏற்படும் போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.

70:3. (அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).

70:4. ஒருநாள் மலக்குகளும் (ஜிப்ரயீலாகிய – வான தூதர்) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

70:5. எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.

70:6. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.

70:7. ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கின்றோம்.

70:8. வானம் – உருக்கப் பட்ட செம்பைப் போல் ஆகி விடும் நாளில் –

70:9. இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்) –

70:10. (அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்க மாட்டான்.

70:11. அவர்கள் நேர்க்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்(தீர்ப்பு) நாளில் வேதனைக்கு ஈடாக குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-

70:12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்-

70:13. அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-

70:14. இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ளப் (பிரியப்படுவான்).

70:15. அவ்வாறு (ஆவது) இல்லை; ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமான)து கொழுந்து விட்டு எரியும் நெருப்பாகும்.

70:16. அது (சிரசுத்) தோல்களைக் (எரித்து) கழற்றி விடும்.

70:17. (நேர்வழியை) புறக்கனித்துப் புறங்காட்டி சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.

70:18. அன்றியும் பொருளைச் சேகரித்து பிறகு (அதைத் தக்கப்படி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே )அவனையும் அது அழைக்கும்.

70:19. நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.

70:20. அவனை ஒரு கெடுதி தொட்டு விட்டால் பதறுகிறான்;

70:21. ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக் கொள்கிறான்.

அல் குர்ஆன்: அல் மஆரிஜ் (உயர் வழிகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உறுதியான இறுதி தீர்ப்பு நாள்!

துறவித்தனம் ஆகுமானதா?

57:26. அன்றியும், திடமாக நாமே (அல்லாஹ்வே) நூஹையும், (நோவா) இப்ராஹீமையும் (ஆப்ரகாம்) தூதர்களாக அனுப்பினோம்; இன்னும் அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக இருந்தனர்.

57:27. பின்னர் அவர்களின் (அடிச்)சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (இயேசு) (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் (பைபிள்) கொடுத்தோம் – அன்றியும், அவரை பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும், கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டு பண்ணிக் கொண்டார்கள்): ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதை சரிவர பேணவில்லை – அப்பால், அவர்களில் ஈமான் (நம்பிக்கை) கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாகவே இருக்கின்றனர்.

அல்குர்ஆன்: அல் ஹதீத் (இரும்பு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on துறவித்தனம் ஆகுமானதா?

அல்லாஹ்வின் திருநாமங்கள்!

60:22. அவனே அல்லாஹ்; வணக்கத்திற்குரியவன்; அவனைத் தவிர வேறு நாயன் இல்லை; மறைவானதையும், பகிரங்கமானதையும் அறிபவன்; அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

60:23. அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன், சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் – அவர்கள் இணை வைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.

60:24. அவன் தான் அல்லாஹ்; படைப்பவன்; ஒழுங்குப்படுத்தி உண்டாக்குபவன்; உருவமளிப்பவன் – அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ்பீஹ் (துதி) செய்கின்றன – அவனே (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்.

அல் குர்ஆன்: அல் ஹஷ்ர் (ஒன்று கூட்டுதல்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அல்லாஹ்வின் திருநாமங்கள்!

அநியாயம் புரியாதீர்!

2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில் – நியாயத் தீர்ப்பு நாளில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறு விதமாய் எழ மாட்டார்கள்) இதற்குக் காரணம் “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, (ஆகுமாக்கி) வட்டியை ஹராமாக்கி (ஆகுமானதல்ல) இருக்கின்றான். ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகி விடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கின்றது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்.

அல் குர்ஆன்: அல் பகரா (பசுமாடு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அநியாயம் புரியாதீர்!

உலக வாழ்வின் நிலை!

57:20. அறிந்து கொள்ளுங்கள்; “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும், (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப்படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் (தீர்ப்பு நாளில்) கடிமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு – நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு – ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.

அல் குர்ஆன்:அல் ஹதீத் (இரும்பு)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on உலக வாழ்வின் நிலை!

வேதனை வந்த பின் புலம்பி என்ன பயன்?

39:53. “என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக.

39: 54. ஆகவே (மனிதர்களே) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட் மாட்டீர்கள்.

39:55. நீங்கள் அறியாத விதத்தில், திடீரென உங்களிடம் வேதனை வரும் முன்னரே, உங்கள் இறைவனால் உங்களுக்கருளப்பட்ட அழகானவற்றைப் பின்பற்றுங்கள்.

39:56. “அல்லாஹ்வுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகளில் குறை செய்து விட்டதின் கைசேதமே! பரிகாசம் செய்பவர்களில் நிச்சயமாக நானும் இருந்தேனே”! என்று (ஒவ்வொருவரும்) கூறாமல் இருப்பதற்காகவும்;

39:57. அல்லது: “அல்லாஹ் எனக்கு நேர்வழியை அறிவித்திருந்தால் , நானும் முத்தகீன் – பயபக்தியுடையவர்களில் – ஒருவனாகி இருப்பேனே!” என்று கூறாமல் இருப்பதற்காகவும் ;



39:.58. அல்லது: வேதனையை கண்ட சமயத்தில், “(உலகத்திற்கு) நான் மீண்டு செல்ல வழி உண்டாகுமாயின், (அழகிய) நன்மை செய்வோரில் ஒருவனாக நானும் ஆகி விடுவேன்!” என்று கூறாமல் இருப்பதற்காகவும்;



39:59. (பதில் கூறப்படும்) “மெய்யாகவே என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; ஆனால் அவற்றை நீ பொய்பிக்க முற்பட்டுப் பெருமையடித்தாய்; காஃபிர்களில் (நிராகரிப்பவர்களில்) ஒருவனாக இருந்தாய்.”



39:60. அன்றியும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) முகங்கள் கியாம (இறுதி தீர்ப்பு) நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்; பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரத்தில் இருக்கிறதல்லவா?

அல் குர்ஆன்: அல் ஜூமர் (கூட்டங்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on வேதனை வந்த பின் புலம்பி என்ன பயன்?

அழிந்தவனின் வரலாற்றில் அறிவுரை பெறுவோம்.

28:76. நிச்சயமாக காரூன் மூஸாவின் (மோஸே) சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தான். எனினும்: அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்;அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் – நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன;அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்; “நீ (இதனால் பெருமைக் கொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்க மாட்டான்” என்று கூறினார்கள்.

28:77. “மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை (மறு உலக) வீட்டைத் தேடிக்கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதைச் செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே: நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்)

28:78. (அதற்கு அவன்) கூறினான்: ” எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப் பட்டிருக்கிறேன்!” இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமை உடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டர்கள்.

28:79. அப்பால், அவன் (கர்வத்துடனும் உலக) அலங்காரத்துடனும் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்; “ஆ! காரூனுக்கு கொடுக்கப் பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக் கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்றும் கூறினார்கள்.

28:80. கல்வி ஞானம் பெற்றவர்களோ; “உங்களுக்கென்ன கேடு! ஈமான் (நம்பிக்கை) கொண்டு, நல்ல அமல்கள் செய்பவர்களுக்கு அல்லஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

28:81. ஆகவே, காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கின்ற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

28:82. முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சர்யம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகின்றான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை (அருள்) செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்த செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் (நிராகரிப்போர்) சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

அல் குர்ஆன்: அல் கஸஸ் (வரலாறுகள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அழிந்தவனின் வரலாற்றில் அறிவுரை பெறுவோம்.