7:94. நாம் நபிமார்களை (தூதர்களை) அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம்மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
7:95. பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலைக்கு மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்: நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன” என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் – ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
7:96. நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் (நம்பிக்கை) கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் – பரகத்துகளை – பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
7:97. அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
7:98. அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
7:99. அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்டவாளிகளான மக்களைத் தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
7:100. பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
7:101. (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்: நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை – இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் (நம்பிக்கை கொள்ளாதவர்களின்) இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
7:102. அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை – அன்றியும் அவர்களில் பெரும்பாலோரைப் பாவிகளாகவே கண்டோம்.
அல் குர்ஆன்: அல் அஃராஃப் (சிகரங்கள்)
அல்லாஹ் காஃபிர்களின் (நம்பிக்கை கொள்ளாதவர்களின்) இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
***
If Allah had sealed the hearts, then why blame the Kafirs?
அன்பு சகோதரரே!!
அந்த வசனத்தின் ஆரம்பத்திலிருந்து கவனியுங்கள். ஒன்றும் அறியாத மக்களின் இதயங்களில் அல்லாஹ் முத்திரையிடுவதில்லை. மாறாக தெளிவான படிப்பினைகளைக் கொடுத்து, அந்த படிப்பினை மிக்க பேருண்மைகளின் பக்கம் மனிதனை கவனம் செலுத்தச் சொல்லி, அதிலிருந்து பாடம் பெறுங்கள் என்கிறான் அல்லாஹ். மேலும் அவ்வாறு பாடம் பெறாத மக்களின் இதயங்களில் அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
ஒவ்வொரு நபியைப் பற்றியும் அவரவரின் சமூகத்தார் பற்றியும் தனிதனியே எடுத்துரைக்கப்பட்ட பின்னர், இப்போது ஒவ்வொரு காலத்திலும் நபிமார்களை அனுப்பும் போது மேற்கொள்ளப்பட்ட பொதுவான இறைநியதி கூறப்படிகிறது. அந்த நியதி இதுதான்: ஒரு சமுதாயத்திற்கு நபி அனுப்பப்படும் போது அச்சமுதாயத்தினர், நல்லுரையைச் செவிதாழ்த்தி கேட்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் இறைவனுக்கு பணிந்து சிரம் தாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவும் முதலில் பற்பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர். பின்னர் அவர்களின் துன்பங்கள் அகன்று, இணக்கமான சூல்நிலை ஏற்பட்டபோதும் அவர்களுடைய உள்ளம் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனும்போது இன்பநலத்தில் திளைத்திருந்த அவர்கள் சோதனையில் ஆழ்த்தப்பட்டார்கள். இங்கிருந்தே அவர்களின் அழிவு ஆரம்பமாகி விட்டது. இறைதூதரின் அறிவுரைகளை அவர்கள் ஏற்காதிருந்தும் கூட அவர்கள் மீது இறைவன் கொடைகளைப் பொழிந்தபோது “நம் குற்றங்களுக்காக நம்மைப் பிடிக்கின்ற இறைவன் எவனும் நமக்கு மேல் இல்லை” என்று எண்ணினார்கள். “நம்மை போல் வேறெவரும் உண்டோ” எனும் அகந்தை அவர்களின் சிந்தையை ஆட்கொண்டிருந்தது. இதுவே அவர்களை இறுதியில் இறைதண்டனையில் ஆழ்த்தியது.