20:105. (நபியே!) இன்னும் உம்மிடம் மலைகளைப்
பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “அவைகளை என்
இறைவன் தூள் தூளாக்கி (மணல்களைப் போல்
பரப்பி) விடுவான்” என்று நீர் கூறுவீராக.
20:106. “பின்பு, அவற்றை சமவெளியாக்கி விடுவான்.
20:107. “அதில் நீர் மேடு பள்ளத்தைக் காணமாட்டீர்”.
20:108. அந்நாளில் அவர்கள் (ஸூர் – எக்காளம்
மூலம்) அழைப்பவரையே பின்பற்றிச் செல்வார்கள்;
அதில் எத்தகைய கோணலும் இருக்காது; இன்னும்
(அவ்வேளை) அர்ரஹ்மானுக்கு (அஞ்சி) எல்லாச்
சப்தங்களும் ஒடுங்கி விடும். கால்கள் (மெதுவாக
அடியெடுத்து வைக்கும்) சப்தத்தைத் தவிர
(வேறெதையும்) நீர் கேட்க மாட்டீர்.
20:109. அந்நாளில் அர்ரஹ்மான் (அருளாளன்)
எவரை அனுமதித்து, எவருடைய பேச்சை உவந்துக்
கொள்கிறானோ, அவர்களைத் தவிர வேறு எவருடைய
ஷஃபாஅத்தும் (பரிந்துரையும்) பலனளிக்காது.
20:110. அவர்களுக்கு முன்னிருப்பதையும்,
அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் அவன்
நன்கறிவான்; ஆனால் அவர்கள் அதை(த் தங்கள்)
கல்வியறிவு கொண்டு சூழ்ந்தறிய மாட்டார்கள்.
20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான
(அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து
தாழ்ந்து விடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச்
சுமந்துக் கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி
விடுவான்.
20:112. எவர் முஃமினாக (நம்பிக்கை கொண்டவராக)
இருந்து, ஸாலிஹான – நற்செயல்களைச் செய்கிறாரோ
அவர் தமக்கு அநியாயம் செய்யப்படுமென்றோ,
(தமக்குரிய) நற்கூலி குறைந்து விடுமென்றோ பயப்பட
மாட்டார்.
20:113. மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை
அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள்
பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது
நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும்
பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை
விவரித்திருக்கின்றோம்.
20:114. ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே
மிக் உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு
(குர்ஆனின்) வஹீ – செய்தி அறிவிக்கப்பட்டு அது
முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர்
அவசரப் படாதீர்; ‘இறைவா! கல்வி ஞானத்தை
எனக்கு அதிகப்படுத்துவாயாக!’ என்றும் நீர்
பிரார்த்தனை செய்வீராக!.
அல் குர்ஆன்: சூரா தாஹா.