தொழுகையில் அமைதியின்மை

‘திருட்டுக் குற்றங்களில் மிகப் பெரும் குற்றம் தொழுகையில் திருடுவதாகும். திருடர்களில் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவனே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் ஒருவன் எப்படித் திருடுவான்? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவன் தொழுகையில் ருகூவையும் சுஜூதையும் முழுமையாகச் செய்ய மாட்டான் எனக் கூறினார்கள்’ அறிவிப்பவர்:அப்துல்லாஹ் அபீகதாதா (ரலி) நூல்: அஹ்மத்

தொழுகையில் அமைதியை விட்டு விடுவது, ருகூவில் – சுஜூதில் முதுகை நேராக வைக்காமலிருப்பது, ருகூவிலிருந்து நிமிர்ந்த பிறகு முதுகை நேராகக் கொண்டு வராதது, இரண்டி ஸஜ்தாவுக்கு மத்தியிலுள்ள அமர்வில் முதுகை நேராக வைக்காமலிருப்பது ஆகியவை பெரும்பாலான தொழுகையாளிகளிடம் வெளிப்படையாகக் காணப்படுகின்றன. தங்கள் தொழுகையில் அமைதியைக் கடைபிடிக்காத இத்தகையவர்கள் இல்லாத பள்ளிகளே கிடையாது எனலாம். அமைதியைக் கடைபிடிப்பது தொழுகையின் முதல் நிலைக் கடமையாகும். இதல்லாமல் தொழுகை நிறைவேறாது. இந்த விஷயம் ஆபத்தானதாகும். ‘ருகூவிலும், சுஜூதிலும் தமது முதுகை நேராக வைக்காதவரை ஒருவரது தொழுகை நிறைவேறாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி), (அபூதாவூத்)

எனவே இது தீய செயலாகும். இதைச் செய்பவர் எச்சரிக்கைக்கும் கண்டனத்திற்கும் உரியவர் என்பதில் ஐயமில்லை. அபூஅப்துல்லாஹ் அல்அஷ்அரி (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குத் தொழுகை நடத்தி விட்டு அவர்களில் ஒரு குழுவினருடன் அமர்ந்திருந்தனர். ஒரு மனிதர் வந்து தொழுதார். ருகூவு செய்யலானார். சுஜூதில் காக்கை கொத்துவது போல அவசர அவசரமாகச் செய்தார். உடனே நபி (ஸல்) அவர்கள், இவரைப் பார்த்தீர்களா? (அவசர அவசரமாகத் தொழுகின்ற) இந்த நிலையில் யார் மரணிக்கின்றாரோ அவர் முஹம்மதுடைய மார்க்கத்தில் மரணிக்க மாட்டார். இவர் காக்கை இரத்தத்தைக் கொத்துவது போல அவசர அவசரமாகத் தொழுகிறார். ருகூவையும் சுஜூதையும் காக்கை கொத்துவது போல அவசர அவசரமாகச் செய்பவருக்கு உதாரணம் பசித்தவனுக்கு ஒத்திருக்கிறது. அவன் ஒன்றிரண்டு பேரித்தம் பழங்களை (அவசர கோலத்தில்) உண்ணுகிறான். அது அவனுக்கு என்ன பலனைத் தரப் போகிறது?’ எனக் கூறினார்கள். (இப்னு குஸைமா)

ருகூவையும் சுஜூதையும் பரிபூரணமாகச் செய்யாத ஒருவரைக் கண்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘நீ (முறையாகத்) தொழவில்லை. இந்நிலையில் நீ மரணித்து விட்டால் முஹம்மத் (ஸல்) அவர்களை எந்த இயற்கை மார்க்கத்தில் அல்லாஹ் படைத்தானோ அந்த இயற்கை மார்க்கத்தில் நீ மரணிக்க மாட்டாய்’ எனக் கூறியதாக ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) கூறினார்கள். (புகாரி)

எனவே தொழுகையில் அமைதியை விட்டு விட்டவர் அதன் சட்ட நிலையை அறிந்து கொண்டால் அந்த தொழுகையின் நேரம் கடந்துவிட வில்லையெனில் அதைத் திருப்பித் தொழுவது அவசியமாகும். காலம் கடந்து விட்ட தொழுகைகளுக்காக (அவற்றை திருப்பித் தொழ முடியாதமைக்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்ளட்டும். அவற்றைத் திருப்பித் தொழ வேண்டிய அவசியமில்லை. பின்வரும் ஹதீஸ் இதை உணர்த்துகிறது: ‘தொழுகையில் அமைதி நிலையைப் பேணாத ஒருவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், ‘நீர் சென்று திருப்பித் தொழும். திண்ணமாக நீர் தொழவில்லை’ எனக் கூறினார்கள். (சுருக்கம் – முஸ்லிம்)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on தொழுகையில் அமைதியின்மை

அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனைகள்

மனிதர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க நினைத்தால் ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்ட துஆக்களால் அல்லது திருமறையிலிருந்தும் பெருமானாரிடமிருந்தும் அறியப்பட்ட துஆக்களைக் கொண்டு பிரார்த்திக்க வேண்டும். இத்தகைய துஆக்களை எடுத்துரைத்து பிரார்த்திப்பதில் சந்தேகமின்றி நிறையப் பலாபலன்களை காண முடிகிறது. இந்த துஆக்களினால் மனிதன் நேரான வழியைப் பெறுகிறான். அன்பியாக்கள், ஸித்தீகீன்கள், ஷுஹாதாக்கள், ஸாலிஹீன்கள் இவர்கள் வழியும் இதுதான். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில பொதுமக்கள் கூறுகின்ற ‘உங்களுக்கு ஏதேனும் தேவைகள் ஏற்பட்டால் எனது மதிப்பை எடுத்துரைத்து அதன் பொருட்டால் பிரார்த்தியுங்கள்’ என்று சொல்லப்படும் ஹதீஸ் பொய்யானதாகும். இந்த ஹதீஸ் பிரபலமான அறிஞர்களால் அறிவிக்கப்படவில்லை. ஹதீஸ் நூற்களிலும் இதைக் காண முடியாது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on அனுமதிக்கப்பட்ட பிரார்த்தனைகள்

தீயவர்களிடம் அமர்தல்

நயவஞ்சகர்கள், தீயவர்களிடம் அமர்தல்

அதாவது நயவஞ்சகர்கள் மற்றும் தீயவர்களிடம் என்பது மகிழ்வுடன் அல்லது அவர்களுக்கு மகிழ்வூட்டுவதற்காகவாகும்.

உறுதியான ஈமான் இல்லாத பெரும்பாலோர் கெட்டவர்களுடன், தீயவர்களுடன் அமர்ந்து கலந்துறவாட விரும்புகிறார்கள். ஏன் அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களையும் குறை கூறக்கூடியவர்களுடனும், கேலி செய்யக் கூடியவர்களுடனும் கலந்துறவாடுகின்றனர். இத்தகைய செயல் சந்தேகமில்லாமல் விலக்கப்பட்டதும் ஈமானை மாசுபடுத்தக்கூடியது ஆகும்.

அல்லாஹ் கூறுகிறான்: “(நபியே!) நம் வசனங்கள் பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்போரை நீர் கண்டால் அவர்கள் அதனை விட்டு வேறு பேச்சில் ஈடுபடும் வரை நீர் அவர்களை விட்டும் ஒதுங்கி விடும். மேலும் எப்பொழுதேனும் ஷைத்தான் உம்மை மறதியில் ஆழ்த்தி விட்டால் அத்தவறை உணர்ந்து கொண்ட பிறகு அக்கிரமம் செய்யும் இக்கூட்டத்தாரோடு நீர் உட்காராதீர்” (6:68)

இந்நிலையில் அவர்களுடன் அமர்வது கூடாது. அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் சரியே. அல்லது அவர்களுடைய பழக்கவழக்கங்கள் மென்மையாகவும் பேச்சுகள் இனிமையாகவும் இருந்தாலும் சரியே. ஆனால் அவர்களை சரியான மார்க்கத்தின் பால் அழைக்கவும் அவர்களின் தவறான கொள்கைக்கு மறுப்புக் கொடுக்கவும் எவர்கள் விரும்புகிறார்களோ அவர்களைத் தவிர. அத்தகையவர்கள் அவர்களுடன் அமர்வது கூடும். ஆயினும் அப்படி அவர்களுடன் அமர்ந்து அவர்களுடைய போக்கை விரும்புவதோ அல்லது வாய் மூடி மௌனமாக இருப்பதோ கூடாததாகும். அல்லாஹ் கூறுகிறான்: “நீங்கள் அவர்கள் மீது திருப்திக் கொண்டாலும் அல்லாஹ் பாவிகளான இத்தகைய மக்கள் மீது (ஒரு போதும்) திருப்தி கொள்ளமாட்டான்” (9:96)
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on தீயவர்களிடம் அமர்தல்

தர்மத்தின் பலாபலன்கள்!

2:261. அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான். இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன் யாவற்றையும் நன்கறிபவன்.
2: 262. அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லி காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குறிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் – அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை. அவர்கள் துக்கமும் அடைய மாட்டார்கள்.
2:263. கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன். மிக்க பொருமையாளன்.
2:264. நம்பிக்கை கொண்டோர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்தைச் சொல்லி காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள். அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். இன்னும் அல்லாஹ் காஃபிரான (நிராகரிப்பவரை) மக்களை நேர்வழியில் செலுத்துவதில்லை.
2:265. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமுள்ள (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெருமழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும் அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடிமழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.
2:266. உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரிச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கின்றது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்து விடுகிறது. அவருக்கு (வலுவில்லாத) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாமபலாக்கி) விடுகிறது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
2:267. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற) வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தருமங்களில்) செலவு செய்யுங்கள். அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தருமங்களில்) செலவழிக்க நாடாதீர்கள். ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண்மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on தர்மத்தின் பலாபலன்கள்!

இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்

அல்லாஹ் தன் சிருஷ்டிகளில் விரும்பியவற்றைக் கொண்டு மனிதர்களிடம் சத்தியம் செய்கிறான். மனிதர்களைப் பொறுத்தவரை சிருஷ்டிகளைக் கொண்டு மற்றொரு சிருஷ்டியிடம் அனுமதிக்கப்படாதது போல அவற்றைக் கொண்டு இறைவனிடத்திலும் சத்தியம் செய்வதில் ஷிர்க் நுழைந்து விடுகிறது. அல்லாஹ் தன் சிருஷ்டிகளைப் பாராட்டி அவற்றின் கௌரவத்தையும், அமைப்பையும், அவற்றைப் படைத்தல் இலேசான காரியமல்ல என்பவற்றையெல்லாம் எடுத்துக் கூறி அதன் காரணத்தினால் தன் ஏகத்துவத்தை உறுதிப் படுத்துகிறான். இவையனைத்தையும் ஏகத்துவத்தின் அத்தாட்சிகள் என்று தெரிவிப்பதற்காகவும் அவற்றைக் கொண்டு இறைவன் சத்தியம் செய்கிறான். Continue reading
Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on இறைவன் தன் சிருஷ்டிகளைக் கொண்டு ஏன் சத்தியம் செய்ய வேண்டும்

சத்தியம் செய்தல்

அல்லாஹ் அல்லாதவற்றின் மீது சத்தியம் செய்தல்

அல்லாஹ் தன்னுடைய படைப்பினங்களில் தான் நாடியதைக் கொண்டு சத்தியம் செய்கிறான். ஆனால் மனிதர்களைப் பொருத்தவரையில் அல்லாஹ்வை விடுத்து மற்றவற்றைக் கொண்டு சத்தியம் செய்வது கூடாது. என்றாலும் பெரும்பாலான மக்களுடைய பேச்சுகளில் அல்லாஹ் அல்லாததைக் கொண்டு சத்தியம் செய்யும் வழக்கம் இருந்து வருகின்றது. எந்த மகத்துவம் அல்லாஹ்வுக்கே தவிர வேறு எவருக்கும் பொருந்தாதோ அத்தகைய மகத்துவம் சத்தியத்தில் உள்ளது.

இப்னு உமர் (ரலி) அறிவிப்பதாவது: ‘அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுடைய தந்தையர் மீது சத்தியம் செய்வதை திண்ணமாக அல்லாஹ் தடை செய்திருக்கிறான். (உங்களில்) யாரேனும் சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும். இல்லையென்றால் மௌனமாக இருக்கட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (புகாரி). இப்னு உமர் (ரலி) மேலும் அறிவிப்பதாவது: ‘அல்லாஹ் அல்லாதவற்றின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அஹ்மத்), ‘அடைக்கலப் பொருளின் மீது யார் சத்தியம் செய்கிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: புரைதா (ரலி). நூல்: அபுதாவூத்.

எனவே கஃபா, அடைக்கலப் பொருள், உதவி, கண்ணியம், இன்னாருடைய பரகத், இன்னாருடைய வாழ்வு, நபியின் அந்தஸ்து, அவ்லியாக்களுடைய அந்தஸ்து, தாய், தந்தை, குழந்தைகள் இன்னும் இது போன்றவற்றின் மீது சத்தியம் செய்வது ஹராமாகும். யாரேனும் இவ்வாறு செய்து விட்டால் அதற்கான பரிகாரம் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் வந்துள்ளது போல ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுவதாகும். ‘உங்களில் ஒருவர் சத்தியம் செய்யும் போது லாத், உஸ்ஸாவின் மீது சத்தியமாக (நமது நாடுகளில் முஹ்யுத்தீன் ஆண்டவர், ஷாஹுல் ஹமீது ஆண்டவர் மீது சத்தியமாக என்று கூறுவது போல) என்று கூறினால் அவர் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) (புகாரி).

இதே அடிப்படையில் இன்னும் பல ஹராமான, ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன. சில முஸ்லிம்கள் அவற்றைக் கூறி வருகின்றனர். உதாரணமாக அல்லாஹ்வைக் கொண்டும் உன்னைக் கொண்டும் பாதுகாப்புத் தேடுகிறேன், அல்லாஹ்வின் மீது உன் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளேன், இது அல்லாஹ்வினாலும் உன்னாலும் தான் கிடைத்தது, அல்லாஹ்வையும் உன்னையும் தவிர எனக்கு வேறு யார் இருக்கிறார், எனக்காக வானத்தில் அல்லாஹ்வும் பூமியில் நீயும் இருக்கிறாய், அல்லாஹ்வும் இன்னாரும் இல்லையென்றால் இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, காலத்தின் கோலமே! – இன்னும் இதுபோன்ற காலத்தைத் திட்டும்படியான வாசகங்கள். உதாரணமாக கெட்டகாலம், நேரம் கெட்ட நேரம், காலத்தின் சூழ்ச்சி போன்ற வாசகங்கள். ஏனெனில் காலத்தைத் திட்டுவது அதனை படைத்த இறைவனைத் திட்டுவது போலாகும் – இயற்கையின் நாட்டம், படைப்பினங்களின் பெயருடன் ‘அப்து’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கூறப்பட்ட பெயர்கள் – உதாரணமாக அப்துல் மஸீஹ், அப்துன் நபி, அப்துர் ரஸூல், அப்துல் ஹுஸைன். (அப்து என்பதன் பொருள் அடிமை ஆகும். அப்து என்பதை அல்லாஹ்வின் பெயர்களுடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.)

இதுபோல தவ்ஹீதுக்கு எதிரான நவீன சில வாசகங்களும், சொல் வழக்குகளும் உள்ளன. இஸ்லாமிய சோஸலிஸம், இஸ்லாமிய ஜனநாயகம், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, மதம் இறைவனுக்குரியது நாடு மக்களுக்கு உரியது, மொழி, இனவாதம், புரட்சி வாதம்.

மலிகுல் முலூக் (அரசர்களுக்கெல்லாம் அரசர்), காழியுல் குழாத் (நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதி) என்ற வார்த்தைகளையும் இந்த அர்த்தத்திலுள்ள வார்த்தைகளையும் ஒரு மனிதருக்குச் சொல்வதும், அதுபோல ஸய்யித் (தலைவர், எஜமான்) என்ற வார்த்தையையும் அதே அர்த்தத்திலுள்ள வேறு வார்த்தைகளையும் – அது எந்த மொழியிலிருந்தாலும் சரி நயவஞ்சகனுக்கும் காஃபிருக்கும் சொல்வதும், இப்படியாகி விட்டதே! அப்படியாகி விட்டதே! இப்படி இருந்திருக்கக் கூடாதா! அப்படி இருந்திருக்கக் கூடாதா! இவ்வாறு இருந்திருந்தால், அப்படி இருந்திருந்தால், இப்படி நடந்திருந்தால், அப்படி நடந்திருந்தால் என்பன போன்ற அதிருப்தி, வருத்தம், கை சேதம் போன்ற அர்த்தங்களைத் தரக்கூடிய – ஷைத்தானிய செயலுக்கு வழி திறந்து விடக்கூடிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதும், இறைவா! நீ விரும்பினால் என்னை மன்னிப்பாயாக! என்று கூறுவதும் விலக்கப்பட்டவையாகும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on சத்தியம் செய்தல்

ஓதிப் பார்த்தல்

ஷிர்க் இடம்பெற வில்லையானால் ஓதி பார்ப்பதில் குற்றமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இணை வைத்தலின் ஏதாவதொரு அம்சம் கலந்து விட்டால் கூட அத்தகைய ஓதிப்பார்த்தல் தடுக்கப்பட்டுள்ளது. ஜின்களைக் கொண்டு காவல் தேடி ஓதிப்பார்த்தலும் விலக்கப்பட்டுள்ளது. Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on ஓதிப் பார்த்தல்

என் அருமை மகனே!


31:12. இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். “அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகின்றானோ அவன் தன(து நன்மை)க்காகவே நன்றி செலுத்துகின்றான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) – நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்”.

31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவு படுத்துவீராக).

31:14. நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே, “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”

31:15. ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக – பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.

31:16. (லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும், அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.

31:17. “என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஸ்டங்களைப் பொருத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.

31:18. (பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைகாரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

31:19. “உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலாகும்.

அல் குர்ஆன்: லுஃக்மான்.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on என் அருமை மகனே!

துற்குறி

துற்குறி என்பது அபசகுனமாகும். அல்லாஹ் கூறுகிறான்: “அவர்களுக்கு ஒரு நன்மை வந்து விட்டால் இது எங்களுக்கு வரவேண்டியதுதான் என்று கூறுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டாலோ மூஸாவையும் அவர்களுடன் உள்ளவர்களையும் (தமக்கு நேர்ந்த) அபசகுனமாகக் கருதுவார்கள்” (7:131)

அரபுகள் பயணம் மேற்கொள்ள அல்லது வேறு ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்ய நாடினால் ஒரு பறவையைப் பிடித்து பறக்க விடுவார்கள். அது வலது பக்கமாகப் பறந்தால் அதை நற்குறியாகக் கருதி அந்த காரியத்தைச் செய்ய ஆரம்பிப்பார்கள். அது இடது பக்கமாகப் பறந்தால் அதைத் துற்குறியாக – அபசகுனமாகக் கருதி செய்ய நினைத்த காரியத்தை விட்டு விடுவார்கள். இவ்வாறு செய்வதின் சட்ட நிலையை நபி (ஸல்) அவர்கள் பின்வரும் நபிமொழியில் தெளிவு படுத்தியுள்ளார்கள். ‘சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும்’ அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: திர்மிதி, அபுதாவூத்

தடுக்கப்பட்டதும் தவ்ஹீதின் நிறைநிலைக்கு எதிரானதுமான இத்தகைய நம்பிக்கையில் பின்வருபவையும் அடங்கும்: சில மாதங்களையும் சில நாட்களையும் பீடையாகக் கருதுவது. உதாரணமாக ஸபர் மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்களைத் தவிர்த்தல், ஒவ்வொரு மாதத்திலும் கடைசிப் புதன் நீடித்த துர்ப்பாக்கியத்திற்குரிய நாள் என்று நம்புதல். அதுபோல சில எண்களை (உதாரணமாக 9,13, 103), சில பெயர்களை அல்லது சில நபர்களை அபசகுனமாகக் கருதுவது. உதாரணமாக ஒருவர் தன் கடையைத் திறக்கச் செல்லும்போது வழியில் ஒரு குருடரைக் கண்டால் அவரைத் துற்குறியாகக் கருதி திரும்பி விடுதல். ஆக இப்படிப்பட்ட அனைத்து நம்பிக்கைகளும் ஹராமான, ஷிர்க்கான காரியங்களாகும். இவ்வாறு செய்வோரை விட்டும் நபி (ஸல்) அவர்கள் விலகிக் கொண்டனர்.

இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘ஒருவர் சகுனம் பார்ப்பாரெனில் அல்லது அவருக்காக சகுனம் பார்க்கப்படுகிறதெனில் , ஒருவர் ஜோசியம் பார்ப்பாரெனில் அல்லது அவருக்காக ஜோசியம் பார்க்கப்படுகிறதெனில், ஒருவர் சூனியம் செய்தாரெனில் அல்லது அவருக்காக சூனியம் செய்யப்படுகிறதெனில் இப்படிப்பட்டவர்கள் நம்மைச் சேர்ந்தோர் அல்லர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தப்ரானி)

இந்தச் செயல்களில் ஒன்றை யாரேனும் செய்து விட்டால் பின்வரும் ஹதீஸில் வந்துள்ளது போல அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்.

‘ஒருவர் சகுனம் பார்த்து தான் நாடிய காரியத்தைச் செய்யாது பின்வாங்கினால் அவர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதும் அல்லாஹ்வின் தூதரே! அதற்குப் பரிகாரம் என்ன? எனத் தோழர்கள் வினவினர். “அல்லாஹும்ம லா கைர இல்லா கைருக வலா தைர இல்லா தைருக வலா இலாஹ கைருக” என்று கூறுவதாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி), (அஹ்மத்)

(பொருள்: இறைவா! நீ வழங்கும் நன்மையைத் தவிர வேறு எதுவும் நன்மையாக இருக்க முடியாது. நீ ஏற்படுத்தும் சகுனத்தைத் தவிர வேறு எதுவும் தீய சகுனமாக இருக்க முடியாது. வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது)

துற்சகுனம் பார்ப்பது மனிதர்களின் இயல்பாகும். அது அதிகரிக்கவும் செய்யும், குறையவும் செய்யும். இதற்குரிய முக்கியமான சிகிச்சையாவது தவக்குல் – அல்லாஹ்வையே முழுவதுமாகச் சார்ந்திருத்தல் எனும் பண்பாகும். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியது போல: ‘நம்மில் எவருக்கும் இத்தகைய எண்ணம் ஏற்படாமலில்லை. எனினும் தவக்குல் – அல்லாஹ்வையே முழுவதுமாகச் சார்ந்திருப்பதன் மூலம் அல்லாஹ் அதனைப் போக்கி விடுகிறான்’ (அபுதாவூத்)

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on துற்குறி

வழிபாடுகளில் முகஸ்துதி

நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் தொழுவதைப் போல.

அல்லாஹ் கூறுகிறான்: “இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டவர்களாகவே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவு கூறுகிறார்கள்” (4:142)

இதுபோலவே ஒருவன் மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு நற்செயலைச் செய்தால் அவன் ஷிர்க்கில் வீழ்வான். இப்படிச் செய்பவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. நபி (ஸல்) கூறினார்கள்: ‘மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை (அவர்கள்) கேட்கும்படிச் செய்து விடுவான். மாக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை (அவர்கள்) பார்க்கும்படிச் செய்திடுவான். (மறுமையில் அதற்கு கூலி கிடைக்காது’
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்

அல்லாஹ்வையும் மக்களையும் நாடி ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அவனது செயல் அழிந்து விடும். ஹதீஸ் குத்ஸியில் வந்துள்ளதாவது: ‘இணையாளர்களின் இணைவைப்பை விட்டும் நான் தேவையற்றவன். என்னுடன் மற்றவர்களை இணையாக்கி ஒருவன் ஒரு செயலைச் செய்தால் (அதற்காக கூலி ஏதும் வழங்காமல்) அவனையும் அவனது இணைவைப்புச் செயலையும் நான் விட்டு விடுவேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

ஒருவன் அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடன் ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பிறகு திடீரென அவனுள் முகஸ்துதி தோன்றி விடுகிறது எனில் அவன் அந்த முகஸ்துதியை வெறுத்து அது நீங்க கடுமையாகப் போராடினால் அவனது செயல் சரியானதாக ஆகிவிடும். ஆனால் அவனுள் ஏற்பட்ட அந்த முகஸ்துதியை அவன் திருப்தி கொண்டால் அதிலே அவனது உள்ளம் சாந்தியடைந்தால் பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி அவனுடைய செயல் வீணாகி விடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on வழிபாடுகளில் முகஸ்துதி