வழிபாடுகளில் முகஸ்துதி

நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் தொழுவதைப் போல.

அல்லாஹ் கூறுகிறான்: “இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள். (உண்மையில்) அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான். இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டவர்களாகவே நிற்கிறார்கள். மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள். இன்னும் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவு கூறுகிறார்கள்” (4:142)

இதுபோலவே ஒருவன் மக்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஒரு நற்செயலைச் செய்தால் அவன் ஷிர்க்கில் வீழ்வான். இப்படிச் செய்பவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. நபி (ஸல்) கூறினார்கள்: ‘மக்கள் கேட்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை (அவர்கள்) கேட்கும்படிச் செய்து விடுவான். மாக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அல்லாஹ் அதனை (அவர்கள்) பார்க்கும்படிச் செய்திடுவான். (மறுமையில் அதற்கு கூலி கிடைக்காது’
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம்

அல்லாஹ்வையும் மக்களையும் நாடி ஒருவன் ஒரு செயலைச் செய்தால் அவனது செயல் அழிந்து விடும். ஹதீஸ் குத்ஸியில் வந்துள்ளதாவது: ‘இணையாளர்களின் இணைவைப்பை விட்டும் நான் தேவையற்றவன். என்னுடன் மற்றவர்களை இணையாக்கி ஒருவன் ஒரு செயலைச் செய்தால் (அதற்காக கூலி ஏதும் வழங்காமல்) அவனையும் அவனது இணைவைப்புச் செயலையும் நான் விட்டு விடுவேன் என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்

ஒருவன் அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடன் ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பிறகு திடீரென அவனுள் முகஸ்துதி தோன்றி விடுகிறது எனில் அவன் அந்த முகஸ்துதியை வெறுத்து அது நீங்க கடுமையாகப் போராடினால் அவனது செயல் சரியானதாக ஆகிவிடும். ஆனால் அவனுள் ஏற்பட்ட அந்த முகஸ்துதியை அவன் திருப்தி கொண்டால் அதிலே அவனது உள்ளம் சாந்தியடைந்தால் பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி அவனுடைய செயல் வீணாகி விடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.