வீணான நம்பிக்கைகள்

அல்லாஹ் பலனை ஏற்படுத்தாத பொருட்களில் பலன் இருப்பதாக நம்புதல்

இதுவும் ஷிர்க்காகும். உதாரணமாக சிலர் ஜோதிடர் அல்லது சூனியக்காரனின் ஆலோசனையின் பேரில் அல்லது முன்னோர்களின் வழக்கத்தின் அடிப்படையில் கயிறு, உலோக வளையம், சிப்பி, தாயத்து, தகடு போன்றவற்றில் பலன் இருப்பதாக நம்புகிறார்கள். அதனால் கண் திருஷ்டிக்காகவும், துன்பம் நீங்குவதற்காகவும் அது வராமல் தடுப்பதற்காகவும் அவற்றை தங்களுடைய மற்றும் தங்கள் குழந்தகளுடைய கழுத்துக்களிலோ அல்லது உடலில் வேறு எங்கேனும் கட்டிக் கொள்கிறார்கள். அல்லது தங்கள் வீடுகளில், வாகனங்களில் மாட்டிக் கொள்கிறார்கள். மேலும் இதே நோக்கத்திற்காக பல வகையான கற்கள் பதித்த மோதிரங்களையும் அணிகிறார்கள். இவையனைத்தும் சந்தேகமில்லாமல் அல்லாஹ்வின் மீது தவக்குல் – நம்பிக்கை வைப்பதற்கு எதிரானவையாகும். இவை மனிதனுக்கு பலவீனத்தையே அதிகப்படுத்தும். மட்டுமல்ல ஹராமானவற்றைக் கொண்டு மருத்துவம் செய்வதைச் சார்ந்தவையாகும் இவை.

இத்தகைய தாயத்து, தகடுகளில் பெரும்பாலானவற்றில் வெளிப்படையான ஷிர்க்கான வாசகங்களும் சில ஜின், ஷைத்தான்களிடம் பாதுகாப்புத் தேடும்படியான வாசகங்களுமே உள்ளன. அல்லது புரியாத வரைபடங்கள் அல்லது விளங்க முடியாத எழுத்துக்களே இருக்கின்றன. ஓதிப்பார்க்கின்ற சிலர் தாயத்து தகடுகளில் குர்ஆன் வசனங்களோடு ஷிர்க்கான வாசகங்களையும் சேர்த்து எழுதுகின்றனர். இன்னும் சிலரோ திருக்குர்ஆன் வசனங்களை சிறுநீர், மாதவிடாய் இரத்தம் போன்ற அசுத்தங்களின் மூலம் எழுதுகின்றனர். ஆக மேற்குறிப்பிட்ட அனைத்தையும் தொங்க விட்டுக் கொள்வது அல்லது கட்டிக் கொள்வது ஹராமாகும். ‘யார் தாயத்தைக் கட்டித் தொங்க விட்டுக் கொள்கிறாரோ திண்ணமாக அவர் இணைவைத்து விட்டார்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: அஹ்மத்.

இவ்வாறு செய்பவன் – அல்லாஹ்வை விடுத்து இந்த தாயத்து தகடுகளும் நன்மை, தீமை அளிக்கக் கூடியவை என நம்பினால் அவன் இணை வைத்தவன் ஆவான். மிகப் பெரும் ஷிர்க்கைச் செய்து விட்டவனாவான். நன்மை, தீமை அளிப்பதற்கு இவையும் ஒரு காரணம் என நம்பினால் (அல்லாஹ் அப்படி ஏற்படுத்தவில்லை என்பது தனி விஷயம்) அவன் சிறிய இணைவைப்பைச் செய்து விட்டவனாவான். இது காரண காரியங்களில் இணை வைத்தல் என்பதில் அடங்கும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.