பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4701
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் ஒரு விஷயத்தை வானத்தில் தீர்மானித்துவிட்டால், வானவர்கள் தம் சிறகுகளை இறைக்கட்டளைக்குப் பணிந்தவர்களாக அடித்துக் கொள்வார்கள். (அல்லாஹ்வின் அந்தக் கட்டளையை) பாறையின் மீது சங்கிலியை அடிப்பதால் எழும் ஓசையைப் போல் (வானவர்கள் கேட்பார்கள்.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அலீ இப்னு அப்தில்லாஹ் அல்மதீனி(ரஹ்) கூறினார்: (சுஃப்யான்(ரஹ்) அல்லாத) மற்றவர்களின் அறிவிப்பில், ‘(அந்த ஓசையின் மூலம்) அல்லாஹ் தன் கட்டளையை வானவர்களுக்கு எட்டச்செய்வான்’ என்று (கூடுதலாகக்) காணப்படுகிறது.
(இறைக் கட்டளையைச் செவியுறும் வானவர்கள் பீதிக்குள்ளாகிறார்கள். பின்னர்) அவர்களின் இதயத்தை விட்டு பீதி அகற்றப்படும் போது அவ்வானவர்கள், (அல்லாஹ்விற்கு நெருக்கமாயிருக்கும்) வானவர்களிடம், ‘நம் இறைவன் என்ன சொன்னான்?’ என்று வினவுகின்றனர். அவர்கள் வினவியோரிடம், ‘(நம் இறைவன் இன்னின்ன) உண்மை(யான கட்டளை)யைச் சொன்னான். அவன் உயர்ந்தவன்; பெரியவன்’ என்று பதிலளிப்பர். உடனே, (இறைவனின் கட்டளை குறித்த) அந்த உரையாடலை ஒட்டுக் கேட்பவர்கள் செவியேற்று விடுகின்றனர். ஒருவர் மற்றவர் மேலே இருந்து கொண்டு இவ்வாறாக (கடைசி ஆள்வரை) ஒட்டுக் கேட்கின்றனர்.
சுஃப்யான்(ரஹ்) (தம் அறிவிப்பில், அவர்களில் ஒருவர் மற்றவர் மேல் இருக்கும் விதத்தை) தம் வலக் கையின் விரல்களை விரித்துவைத்து அவற்றில் ஒன்றை மற்றொன்றின் மீது அடுக்கி வைத்து (சைகையால்) விளக்கிக் காட்டினார்கள்.
அந்த உரையாடலை ஒட்டுக்கேட்கும் ஒருவர் அதைத் தன் சகாவிடம் தெரிவிப்பதற்கு முன்பாகவே சில சமயங்களில் அவரைத் தீச்சுவாலை தாக்கிக் கரித்து விடுவதுண்டு. இன்னும் சில நேரங்களில் (தீச்சுவாலை) அவரைச் சென்றடைவதற்குள்ளாகவே (அந்த உரையாடலை) அவர் தமக்கு அடுத்துள்ளவரிடமும், அவர் தமக்குக் கீழுள்ளவரிடமும் தெரிவித்து இறுதியாக பூமிவரை அதைச் சேர்த்து விடுகிறார்கள்.
சுஃப்யான்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘கடைசியில் அது பூமிக்கு வந்து சேர்ந்து சூனியக்காரனின் வாயில் இடப்படுகிறது. உடனே அவன் அதனுடன் நூறு பொய்களைக் கலந்து சில உண்மைகளை (மட்டும்) கூறுகிறான். (இதைக் கேட்கும்) மக்கள், ‘இன்னின்ன நாளில் இன்னின்னவாறு நடக்குமென சூனியக்காரர்கள் நம்மிடம் கூற, அதை நாம் உண்மையானதாகவே காணவில்லையா?’ என்று கூறுவார்கள். வானிலிருந்து ஒட்டுக் கேட்கப்பட்ட தகவலினாலேயே இவ்வாறு அவர்கள் கூறுகிறார்கள்’ என்று இடம் பெற்றுள்ளது. அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில், ‘சூனியக்காரன் மற்றும் சோதிடனின் வாயில் இடப்படுகிறது’ எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ இப்னு அப்தில்லாஹ் அல் மதீனி(ரஹ்) கூறினார்: நான் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், ‘நீங்கள் இந்த ஹதீஸை அம்ர் இப்னு தீனாரிடம் கேட்டபோது, அன்னார் இக்ரிமாவிடமும், இக்ரிமா அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமும் கேட்டதாகத் தெரிவித்தாரா?’ என வினவினேன். அதற்கு சுஃப்யான் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மேலும், நான் சுஃப்யான் அவர்களிடம் ‘இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ‘ஃபுஸ்ஸிஅ’ (பீதி அகற்றப்படும் போது) எனும் சொல்லை நபி(ஸல்) அவர்கள் அவ்வாறுதான் (‘ஃபுஸ்ஸிஅ’ என்று) ஓதினார்கள் என நீங்கள் குறிப்பிட்டதாக ஒருவர் அறிவித்தாரே! (அது சரிதானா?)’ என்று வினவினேன். அதற்கு அன்னார் ‘அம்ர் இப்னு தீனார் அவர்கள் இவ்வாறுதான் ஓதினார்கள். ஆனால், அம்ர் (இக்ரிமாவிடமிருந்து) இவ்வாறுதான் செவிமடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது. இதுவே, எங்களின் ஓதல் முறையாகும்’ என்று பதிலளித்தார்கள்.
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4702
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘ஹிஜ்ர்’ வாசிகளைக் குறித்து, ‘இந்தச் சமுதாயத்தாரின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லும்போது அழுதுகொண்டே செல்லுங்கள். நீங்கள் அழுதபடி செல்லப் போவதில்லையென்றால், அவர்களைத் தீண்டிய வேதனை உங்களையும் தீண்டி விடாமலிருக்க அவர்(களின் வசிப்பிடங்)களைக் கடந்து செல்லாதீர்கள்’ என்று கூறினார்கள். Continue reading →