பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5475
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார். இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடாதீர்கள்)’ என்று பதிலளித்தார்கள்.
நான் அவர்களிடம் (பயிற்சியளிக்கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உங்களுக்காக அது கவ்விக்கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும் ‘உங்களின் நாயுடன்’ அல்லது ‘உங்கள் நாய்களுடன்’ வேறோரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களின் நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களின் நாயை அனுப்பிய போதுதான் வேறொரு நாய்க்காக அல்ல’ என்று பதிலளித்தார்கள்.
பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5476
அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (‘மிஅராள்’ மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்’ என்று கூறினார்கள். நான், ‘என்னுடைய நாயை (வேட்டைக்காக) அவிழ்த்து விட்டேன். (அது வேட்டையாடியக் கொண்டு வருவதை நான் சாப்பிடலாமா)?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாளை அவிழ்த்து விட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.
நான், ‘அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்…?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது’ என்று பதிலளித்தார்கள்.
‘நான் என்னுடைய நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்… (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி வந்த பிராணியை நான் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களின் நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை’ என்று பதிலளித்தார்கள். Continue reading →