மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை.
ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10)
காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! (103:1-3)
எனது சமுதாயத்தினர் அனைவருமே சுவர்க்கம் செல்வார் (நிராகரிப்பவரைத் தவிர!) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! நிராகரிப்பவர் என்றால் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், எனக்குக் கீழ்படிந்தவர் சுவர்க்கம் செல்வார். எனக்கு மாறு செய்தவர் நிராகரிப்பவராவார் என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்:புகாரி
மனதைத் தூய்மைப்படுத்தி, பண்படுத்தக்கூடியது ஈமான்தான் என்று நம்புவதைப் போல அதை மாசுபடுத்தி பாழ்படுத்தக்கூடியது நிராகரிப்பை மேற்கொள்வதும் பாவம் செய்வதும்தான் எனவும் நம்ப வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: பகலில் இரு ஒரங்களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! திண்ணமாக நன்மைகள் தீமைகளைக் கழைந்து விடுகின்றன. (11:14) மேலும் அல்லாஹ் கூறுகிறான்: அப்படியல்ல! மாறாக உண்மை யாதெனில் அவர்களின் தீய செயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது. (33:14)
இதனால்தான் முஸ்லிம் எப்போதும் தன் மனதைத் தூய்மைப்படுத்துவதிலும், பண்படுத்துவதிலும் ஈடுபடுவதோடு, நன்மை செய்வதற்கும் தீமையிலிருந்து விலகுவதற்கும் இராப்பகலாக அதனோடு போராடவும் வேண்டும். மேலும் ஒவ்வொரு நேரமும் சுய பரிசோதனை செய்து நற்செயல்கள் புரிவதற்கு மனதைத் தூண்ட வேண்டும். அதுபோல தீமைகளை விட்டும் மனதைத் திருப்பி, வழிபாட்டின் பால் செலுத்த வேண்டும். இதற்காக பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
1. பாவமன்னிப்புத் தேடுதல்
அதாவது அனைத்துப் பாவங்களை விட்டும் தவறுகளை விட்டும் விலகி, நடந்த தவறுகளுக்காக வருந்தி இனிமேல் மீண்டும் அதுபோன்ற பாவங்களைச் செய்யாமலிருக்க உறுதிகொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விடம் தூய்மையான பாவமன்னிப்பைக் கோருங்கள், இறைவன் உங்கள் பாவங்களைப் போக்கி சுவனச்சோலைகளில் உங்களை பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். (66:18)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இரவில் தனது கையை நீட்டுகிறான். பகலில் பாவம் செய்தவர் மன்னிப்புக் கோருவதற்காக. பகலில் தனது கையை நீட்டுகிறான். இரவில் பாவம் செய்தவர் மன்னிப்புக் கேட்பதற்காக. சூரியன் மேற்கிலிருந்து உதையமாகும்வரை இவ்வாறே செய்து கொண்டிருப்பான். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்:முஸ்லிம்
2. இறைவனின் கண்காணிப்பை மனதிற்கொள்ளுதல்.
அதாவது வாழ்கையின் ஒவ்வொரு நொடியும் இறைவன் தன்னைக் கண்காணித்துக் கொண்டிருகின்றான் என்ற அடிப்படையில் செயல்பட வேண்டும். மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். தனது இரகசியங்களையும் பரகசியங்களையும் அறிந்து கொள்கின்றான் என்பதையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும்.
இதனால் அவனது உள்ளம் இறைவனின் கண்காணிப்பை உறுதி கொள்ளக்கூடியதாக, அவனை நினைவு கூறும்போது ஒரு பிரியத்தை உணரக்கூடியதாக, அவனுக்கு கட்டுப்பட்டு நடக்கும்போது ஒரு சுகத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக, அவனை விடுத்து ஏனைய அனைத்தையும் புறக்கணித்துவிட்டு அவன் பக்கமே திரும்பக்கூடியதாக ஆகிவிடுகின்றது. பின்வரும் வசனங்களின் கருத்தும் இதுதான்.
எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு தனது நடத்தையையும் நல்லதாக்கிக் கொண்டு ஒரு மனப்பட்டு இப்ராஹீமின் வழிமுறையையும் பின்பற்றினாரோ அவரை விடச் சிறந்த வாழ்க்கை நெறியுடையவர் யார்? (4:125)
(நபியே!) நீர் எந்த நிலையிலிருந்தாலும் குர்ஆனிலிருந்து எதை நீர் ஒதிக் காண்பித்தாலும் (மக்களே!) நீங்களும் எச்செயலை செய்து கொண்டிருந்தாலும் அதை நீங்கள் செய்து கொண்டிருக்கும்போதே நாம் உங்களைப் பார்த்துக் கொண்டுதானிருக்கின்றோம். (10:61)
நீ அல்லாஹ்வை வணங்கும்போது அவனை நீ பார்த்துக் கொண்டிருப்பதுபோல வணங்க வேண்டும். அவனை நீ பார்க்க முடியாவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர்(ரழி), நூல்:முஸ்லிம்
3. சுய பரிசோதனை
முஸ்லிம் மறுமையில் தனக்கு நற்பேறு கிடைக்க வேண்டுமென்பதற்காகவும் அங்கு கிடைக்கும் நற்கூலிக்கும் இறைவனின் திருப்பொருத்ததிற்கும் தன்னைத் தகுதியாக்கிக் கொள்வதற்காகவும் இவ்வுலகில் (அதுதான் அவன் செயல்படுவதற்குத் தகுந்த களம்) இரவு பகலாகச் செயல்படும்போது ஒரு வியாபாரியைப் போல செயல்பட வேண்டும்.
அதாவது தன் மீதுள்ள கடமையான வணக்கங்களை மூலதனமாகவும் நஃபிலான வணக்கங்களை மூலதனத்திற்கு மேல் கிடைக்கின்ற இலாபங்களாகவும் தவறுகளையும் பாவங்களையும் நஷ்டங்களாகவும் கருதி செயல்பட வேண்டும். பிறகு அவ்வப்போது தனியாக அமர்ந்து இன்றைய தினம் தாம் என்ன செய்தோம் என்று சுய பிரிசோதனை செய்து பார்க்க வேண்டும்
கடமைகளில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால் தன்னைத்தானே பழித்துக் கொண்டு உடனடியாக அக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். அக்குறை களாச் செய்யப்படக் கூடியதாக இருந்தால் அதைக் களாச்செய்து விட வேண்டும். களாச் செய்யப்படக் கூடியதாக இல்லையென்றால் நஃபில்களை அதிகமாகச் செய்து சரிசெய்து விட வேண்டும். நஃபில்களில் ஏதாவது குறை ஏற்பட்டிருந்தால் திரும்பவும் அந்த நஃபில்கலைச் செய்து சரிசெய்து விட வேண்டும். ஹராமான காரியங்களைச் செய்து நஷ்டம் ஏற்பட்டிந்தால் அதற்காக வருந்தி இறைவனிடத்தில் பாவமன்னிப்புத் தேடி அவனிடமே திரும்பிவிட வேண்டும். அத்துடன் தான் செய்த தீமைக்குப் பொருத்தமான நன்மையைச் செய்து கொள்ள வேண்டும். சுய பரிசோதனையின் கருத்து இதுதான்.
அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் ஒவ்வொரு மனிதனும் நாளைய தினத்திற்காக எதைத் தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சிய வண்ணம் இருங்கள். நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் நிச்சயமாக அல்லாஹ் அறிபவனாக இருக்கின்றான். (59:18)
உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் விசாரணை செய்யப்படுவதற்கு முன் உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். (அஹ்மத்)
4. மனதோடு போராடுதல்.
தன்னுடைய விரோதிகளிலேயே கொடிய விரோதி தனது மனம்தான் என்பதை முஸ்லிம் புரிந்துகொள்ள வேண்டும். இயல்பாகவே அது நன்மையை வெறுத்து தீமையை விரும்பக்கூடியதாகவும் தீயவற்றை அதிகம் தூண்டக்கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் மனம் எப்போதும் தனக்கு ஓய்வையும் சுகத்தையுமே விரும்பும். இச்சைகளின் மீதே மோகம் கொள்ளும். அவற்றில் தனக்குக் கெடுதியிருந்தாலும் சரியே!
இதை ஒரு முஸ்லிம் புரிந்து கொண்ட பிறகு நன்மைகளைச் செய்வதற்கும் தீமைகளை விட்டு விலகுவதற்கும் தன் மனதோடு போராட வேண்டும்.
எவர்கள் நமக்காக போரடுகின்றார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம். திண்ணமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களுடன் இருக்கின்றான். (29:69)
இதுதான் நல்லோர்களின் வழிமுறையாகும். முஃமின்கள் மற்றும் வாய்மையாளர்களின் வழிமுறையும் இதுவே.
நபி(ஸல்) அவர்கள் இரவில் தம் கால்கள் வீங்கும் அளவுக்கு தொழுவார்கள். இதுபற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?! எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்:புகாரி,முஸ்லிம்
நூல்: முஸ்லிமின் வழிமுறை