அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அரேபிய தீபகற்பத்தில் அறியாமை எனும் இருள் சூழ்திருந்த ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த மக்கள் தம் மனம்போன போக்கில் வாழ்ந்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையுமே தம்முடைய வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டு எதற்கெடுத்தாலும் நல்ல நேரம், சகுனம் பார்த்து தம் அன்றாட வாழ்க்கையை நடத்தியவர்களாகயிருந்தனர். அதே நேரத்தில் உலகம் முழுவதிலும் கூட அறிவீனமும் மௌட்டீகமுமே ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஆனால் மனிதர்களின் மீது பேரன்பு மிக்கவனான அல்லாஹ் திருக்குர்ஆன் என்னும் ஒளியை நபி (ஸல்) அவர்களுக்கு அருளி அதன் மூலம் உலகை ஆட்சி செய்து கொண்டிருந்த அறிவீனம் என்னும் இருளை அகற்றி அறிவீனத்தையும் மூட நம்பிக்கையையும் ஒழித்திட பேருதவி புரிந்தான்.
இன்றைக்கு நமக்கு கிடைப்பது போல திருமறைக் குர்ஆனின் மொழி பெயர்ப்புகளும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களும் தூய தமிழில் கிடைக்காததால் ஜைத்தூன் கிஸ்ஸா, நூறு மசாலா போன்ற கற்பனைக் கதைகளையே மார்க்கம் என்றெண்ணி பக்தி பரவசத்துடன் அவற்றைக் கேட்டு வாழ்ந்து வந்த, நம் முன்னோர்கள் செய்த மார்க்கத்திற்கு முரணாக செயல்களை, முன்னோர்களின் வழிமுறை என்ற பெயரில் இன்றளவும் பின்பற்றி வாழ்வது என்பது அல்லாஹ்வின் வேதத்தையும் அவனது தூதரின் வழிமுறையையும் மடடுமே பின்பற்றி வாழவேண்டும் என்ற இறைக் கட்டளைக்கு மாற்றமானதாகும்.
மடமையையும், மௌட்டீகத்தையும் ஒழிக்க வந்த இஸ்லாமிய மார்க்கத்திலே அதே இஸ்லாத்தின் பெயராலேயே நாம் இன்னும் அத்தீய செயல்களை, ‘முன்னோர்களின் வழிமுறை’ என செய்து கொண்டிருக்கிறோம் என்றால் இதை என்னவென்று கூறுவது?
→ சனிக் கிழமை அன்று வீட்டில் யாராவது இறந்து விட்டால், ‘சனி போனால் தனியே போகாது’ என்ற மாற்றுமதக் கொள்கைகளுக்கேற்ப ஜனாஸாவுடன், ஆண் ஜனாஸாவாக இருந்தால் சேவல் கோழியும் பெண் ஜனாஸாவாக இருந்தால் பெட்டைக் கோழியும் சேர்த்து அனுப்புதல்.
→ வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோயான அம்மை நோய் (chickenpox) ஏற்படும் போது நோயுற்றவரின் மீது மாற்று மதத்தவர்கள் வழிபடும் பெண் கடவுள் வந்திருப்பதாகக் கூறி வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டி தொங்கவிட்டு அந்தப் பெண் கடவுளின் கோயிலுக்குச் சென்று வேப்பிலையை மந்திரித்து அதன் மூலம் நோயுற்றவரின் உடலில் தடவுதல்.
→ இறந்தவர்களுக்கு மாற்று மதத்தவர்கள் 8, 16 ஆம் நாள் மற்றும் வருடாந்திரம் செய்கின்ற திவசங்களைப் போல நம்மில் இறந்தவர்களுக்கு 3, 7, 40 நாள் மற்றும் 6 மாத, வருடாந்திர ஃபாத்திஹாக்கள் ஓதுதல், அவ்வாறு ஃபாத்திஹா ஓதும் போது இறந்தவர் உயிருடன் இருக்கும் போது விரும்பி சாப்பிட்ட உணவுப்பொருட்களை படையல் பொருள்களாகப் பரத்தி வைத்து ஃபாத்திஹா ஓதுதல். இறந்தவர் பீடி புகைப்பவராக இருந்தால் பீடிக்கட்டுகளைக் கூட படையல் பொருளாக வைத்தல்.
→ வணக்கங்களை அல்லாஹ்வுக்கு தவிர வேறு யாருக்காகவும் செய்தால் அது ‘ஷிர்க்’ என்னும் மன்னிப்பில்லாத மாபெரும் பாவம் என்ற எச்சரிக்கையையும் மீறி, விறகு வெட்டியாருக்காக தொடர்ச்சியாக 16 மாதங்கள் ஒவ்வொரு மாதமும் பிறை 16 அன்று நோன்பு வைத்தல்.
→ ஷியாக்களின் பன்னிரு இமாம்களில் ஒருவரான இமாம் ஜாஃபர் சாதிக் – ன் பெயரால் ‘பூரியான் ஃபாத்திஹா’ ஓதுதல், அதற்காக அறையை அலங்கரித்து, மேலே வெள்ளைத் துணி மற்றும் பூக்களைக் கட்டி தொங்கவிட்டு அந்த அறையைப் புனிதப்படுத்துவது, ஃபாத்திஹா ஓதி முடித்ததும் பூஜைப் பொருட்களான (தபரூக்) பூரியான் மற்றும் கஞ்சியை மிகுந்த பயபக்தியுடன் சாப்பிடுவது.
→ புதிய வீடு கட்டும் போது தமது சொந்த வீட்டின் அஸ்திவாரத்தில் மாற்று மதததவர்களை, அவர்களின் கடவுள்களுக்கு பூஜை செய்ய அனுமதித்தல்; இவ்வாறு மாற்றுமதக் கடவுள்களை வழிபடுவதற்குத் தேவையான பூஜைப் பொருட்களை தமது பொருட்செலவில் வாங்குவது, இதன் மூலம் மாற்று மதத்தவர்களின் செயல்களுக்கு, வழிபாடுகளுக்கு உறுதுணையாக இருப்பது.
→ இறந்தவர்களுக்கும் இவ்வுலகில் உள்ளவர்களுக்கும் இடையே ஃபர்ஸக் என்னும் திரை இருக்கிறது என்று இறைவன் தன் திருமறையில் கூறியிருக்க, அதற்கு மாற்றமாக இறந்தவர்களின் ‘ஆத்மா’ பேயாக வந்து உயிருள்ளவர்களை பிடித்தாட்டுகின்றது என்று நம்புதல், அந்த பேய்களை விரட்டுவதற்காக சாமியார்களிடமும், சமாதிகளை கட்டி வைத்து பிழைப்பு நடத்தும் தர்ஹாவாதிகளிடமும் சென்று தம் பொருளாதாரத்தை செலவழித்து அதற்கு பரிகாரம் தேடுதல்.
→ ‘காலத்தை ஏசாதீர்கள்! ஏனெனில் நானே காலமாக இருக்கிறேன்’ என்ற நபிமொழிக்கு மாற்றமாக மாற்று மதத்தவர்கள் நல்ல நேரம், இராகு காலம் பார்ப்பது போன்று திருமணம், புது வீடு குடிபுகுதல் போன்ற நற் காரியங்களுக்காக நல்ல நேரம் பார்த்து அக்காரியங்களை நிறைவேற்றுதல்.
→ மாற்று மதத்தவர்கள் மிகுந்த பயபக்தியுடன் வழிபடும் ‘தாலிக் கயிற்றை’, ‘கருகமணி’ என்ற பெயரிலே முஸ்லிம் பெண்கள் தம் கழுத்தில் அணிந்து கொள்வது, மாற்று மதத்தவர்கள் முக்கியத்துவம் தருகின்ற பூஜைப் பொருள்களான வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் ஆகியவற்றுக்கு நாமும் அதி முக்கியத்துவம் கொடுத்து திருமணத்தன்று அவற்றைத் தாம்பூலத்தில் வைத்து அத்துடன் தாலிக் கயிற்றையும் (கருகமணி) மணமகளின் வீட்டிற்கு எடுத்துச் செல்வது.
இப்படியாக பற்பல மௌட்டீகளும், மூட நம்பிக்கைகளும் நமது சமூகத்திலே இன்னமும் மலிந்து கிடக்கின்றன. இது குறித்து மேலும் அறிய எனது மற்றொரு ஆக்கம் “நமது குடும்பத்தவர்கள் செய்கின்ற சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து கொள்ளலாமா?<http://suvanathendral.com/portal/?p=487>”என்பதைப் படிக்குமாறு வேண்டுகிறேன்.
அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! நாம் சற்று நடுநிலையுடன் சிந்திக்க வேண்டும். நாம் அனைவரும் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுகின்ற ‘சுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று பெருமிதத்துடன் கூறிக்கொள்கிறோம்.
ஆனால் நாம் செய்வதென்னவோ நபி (ஸல்) அவர்களின் சுன்னத்துக்கு முற்றிலும் புறம்பானதாக இருக்கிறது. நாம் செய்கின்ற இந்தச் செயல்கள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாவுக்கு உட்பட்டதுதானா என்று எப்போதாவது சிந்தித்திருக்கின்றோமா?
இவைகளுக்குரிய ஆதாரங்கள் குர்ஆனிலோ அல்லது ஹதீது கிரதங்களிலோ இருக்கின்றனவா? சிந்தியுங்கள் சகோதர, சகோதரிகளே!
நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அல்லது தாபியீன்கனோ அல்லது தபஅ தாபியீன்களோ இத்தகைய செயல்களைச் செய்தார்களா? அவ்வாறில்லையெனில் அவர்களுக்கு மாற்றமான செயல்களைச் செய்கின்ற நாம் எவ்வாறு நம்மை ‘சுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவர்கள்’ என்று கூறிக்கொள்ள முடியும்?
சிலர், “நம் மக்கள் செய்கின்ற மௌட்டீகமான, மூடத்தனமான இச்செயல்களில் எங்களுக்கும் நம்பிக்கையில்லை! ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? இத்தகைய செயல்களை செய்வது நம் பெற்றோர்களும் நெருங்கிய உறவினர்களும் ஆயிற்றே! அவர்களை நாங்கள் எவ்வாறு பகைத்துக் கொள்வது?” என்று கேட்கலாம். இந்த சகோதரர்கள் பின்வரும் திருமறையின் வசனத்தை நன்கு சிந்திக்க கடமைப்பட்டுள்ளார்கள். பெற்றோரை மதித்து அவர்களை கண்ணியப்படுத்துவதை ஒவ்வொரு முஃமின் மீதும் கடமையாக்கிய அல்லாஹ், அதே பெற்றோர் இறைவனுக்கு மாறு செய்யத் தூண்டினால் அவர்களுக்கு வழிபட வேண்டாம் எனவும் ஆணையிடுகின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்: – “ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும், ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால், அவர்களை நீங்கள் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் யாரேனும் அவர்களை பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொண்டால், அவர்கள் தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
(நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள். அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை” (அல்-குர்ஆன் 9:23-24)
மேலும் அல்-குர்ஆனையும், நபி (ஸல்) அவர்களின் சுன்னாவையும் பின்பற்றாமல் முன்னோர்களைப் பின்பற்றுவது <http://suvanathendral.com/portal/?p=211> குறித்து திருமறையின் பற்பல இடங்களில் இறைவன் எச்சரித்திருக்கின்றான்.
ஆகவே எனதருமைச் சகோதர சகோதரிகளே! இது நாள்வரை நாம் வாழ்ந்த வாழ்க்கையை, திறந்த மனதுடன் சுயபரிசோதனை செய்து, ‘நம்முடைய செயல்கள் அனைத்தும் குர்ஆன் ஹதீஸ்களுக்கு உட்பட்டது தானா?’ என்று பார்க்வேண்டும். குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இருக்குமானால் அதை நாம் சரிசெய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ‘யார் பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறானோ அவனும் அவர்களைச் சேர்ந்தவனே’.
எனவே, முஸ்லிமாகிய நாம் அனைவரும் நம்முடைய முஸ்லிம் கலாச்சாரமாகிய நபி (ஸல்) அவர்களின் வழிமுறையே நமது வாழ்க்கை நெறியாக ஆக்கிக் கொண்டு அதன்படி செயல்பட முயற்சிப்போமாக!
அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாகவும். ஆமீன்.
ஆக்கம்: புர்ஹான்
கஃப்ஜி, சவூதி அரேபியா.