நம்மை (அல்லாஹ்வை) எவரும் மிகைக்க முடியாது!

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கிறோமா?

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).

முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள். எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?

(பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?

அதனை நீங்கள் முளைக்க செய்கிறீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கிறோமா?

நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாக்கி விடுவோம்-அப்பால் நீங்கள் ஆச்சர்யப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.

“நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.

மேலும் (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரை கவனித்தீர்களா?

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?

நாம் நாடினால், அதை கைப்புள்ளதாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?

அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?

ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் (அல்லாஹ்) திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹ் (புகழ்தல்) செய்வீராக.

அல் குர்ஆன்: 56 – 58 லிருந்து 74 வரை.
Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நம்மை (அல்லாஹ்வை) எவரும் மிகைக்க முடியாது!

சுயமதிப்பு!

மனிதன் வெறும் தசைகளாலும் எலும்புகளாலும் பின்னப்பட்ட விலங்கல்ல. மாறாக ஒவ்வொரு மனிதனும் உயிரோட்ட உணர்வுகளாலும் சிந்தனை பிணைப்புகளாலும் இணைக்கப்பட்டுள்ளான். ஒருவனின் புறவாழ்வில் நடைபெறும் செயல் முறைகள் அனைத்தும் அவனது சிந்தனையின் பிரதிபலிப்புகள் மாத்திரம் அல்ல. அவற்றில் உள ரீதியான காரணிகளும் தாக்கம் செலுத்துகின்றன. அந்த வகையில் சுய மதிப்பு என்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது. உள நோக்கில் கூறுவதாயின் ” நான் நல்லவன் அல்லது நல்லவள்” என்ற மனோபாவமே சுயமதிப்பு எனப்படுகிறது. இன்றைய சமூகவியலில் சுயமதிப்பு “மனிதனுக்குக் கண்ணியத்தை வழங்கும் மூலபொருள்” எனக் கருதப்படுகிறது. நான் நல்லவன் என்பதை சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது, சுயமதிப்பு எனப்படும் போது தான், தனது கெளரவத்தையும், ஆற்றலையும் உணரும் அதேவேளை, ஏனையோரது கெளரவத்தை மாசுபடுத்த அல்லது களங்கப்படுத்த தான் உரிமையற்றவன் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சுய மதிப்பு மானிடனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் அவசியமாய் அமையும் போது, மனிதன் தனது ஆற்றல்கள் சுயத்தின் வரம்புகள் என்பவற்றை அறிந்துக் கொள்ளவும், தன்னைப் பற்றி நல்ல சுய உருவத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. ஏனெனில் சுய மதிப்பு ஒரு மனிதனின் சிந்தனையில் இரண்டரக் கலந்து விடும்போது அவன் தன்னைப் பற்றிய நல்லெண்ணத்தை வளர்த்து எனக்கும் சில ஆற்றல்கள் உண்டு என உணர்ந்து அவற்றை வெளிக் கொணர முன் வருகின்றான். அதே போன்று சமூகத்தில் பிறரைக் கண்ணியப்படுத்தவும், அவனது உணர்வுகளை மதிக்கவும், கருத்துக்கள், அபிலாஷைகள், அபிப்ராயங்கள் என்பவற்றை பொருட்படுத்தவும், சுயமதிப்பு சிறந்ததோர் தூண்டற் காரணியாக அமைகின்றது. இத்தகைய சுயமதிப்பைப் பெற்றவர்களே வரலாறு நெடுகிலும் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருக்கிறார்கள். ஏனெனில், தன்னை அளந்து பார்க்க மனிதனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றபோது மனிதன் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்கின்றான். மேலும், சுயமதிப்பு மிகைத்து காணப்படும் ஒருவனில் தீய பண்புகள், கயமைத்தனம், மட்டகரமான உணர்வுகளின் வெளிபாடு என்பன மறைந்து உயர்ந்த மதிக்கத்தக்க செயற்பாடுகளை மேற்கொள்ளும் உணர்வு வளர்கின்றது, சிலர் சுயமதிப்பை மிகையாக கொண்டிருக்கின்றனர். இத்தகையோரின், தானே உயர்ந்தவன், அந்தஸ்த்துடையவன் என்ற எண்ணம் ஏனையோர்களை மதிப்பதை விட்டும், பொருட்படுத்துவதை விட்டும் தூரமாக்குகின்றது.

உண்மையில் சுயமதிப்பு என்பது தன்னைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட எண்ணம் அல்ல. இவ்வாறான எண்ணம் மனிதனைப் பிடிக்கும் போது அவனது உள்ளத்தில் கர்வம், அகம்பாவம்,மமதை போன்ற சமூக நோய்கள் வேரூன்றுகின்றன. சுயமதிப்புள்ளவர்கள் எப்போதும் சுய கட்டுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். ஏனெனில் தன்னை மதிக்கும் ஒருவர் கீழ்த்தரமான நெறிபிறழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார். தன்னைப்பற்றிய உயர்வான எண்ணம் உள்ளமையால் தாழ் மட்ட செயல்பாடுகளில் அவற்றைப் பாழாக்க முனையமாட்டார். தனது பலவீனங்களை பொருத்தமான முறையில் கையாளவும் பிறரின் நன்மதிப்பைப் பேணவும் முயல்வார். இவர் இவ்வாறு செயல்படக் காரணம் அவரது உள்ளத்தில் உருவான சுய கட்டுப்பாடும் அக்கட்டுப்பாட்டைக் கொண்டு வந்த சுயமதிப்புமாகும்.
சுயமதிப்பினை அழிப்பதில் வாழ்க்கைச் சூழலுக்கு பெரும் பங்குண்டு. சமூக ஒழுங்குகள் பேணப்படாத வாழ்விடங்கள், சேரிப்புறங்கள் போன்ற இடங்களில் வாழ்பவர்கள் சுயமதிப்பு அற்றவர்களாகவே உருவாக்கப்படுகிறார்கள்.

சுயதிறனில் அடைவின்மையும் சுயமதிப்பினை அழிக்கின்ற காரணியாக அமைகின்றது. எப்போதும் தோல்வியைத் தழுவுவதும், சுயமாகத்தேடிப் பெற்ற கணிப்பின்மையும் ஒருவர் தம்மில் மதிப்பினை எற்படுத்தாது தாழ்வான எண்ணத்தை வளர்த்துக் கொள்ளக் காரணமாக அமைகின்றது. எம்மில் அதிகமானோர் பல்வேறு ஆற்றல்களும் திறமையும் கொண்டிருந்தும் அடிப்படையில் அவரது உள்ளத்தில் வளர்ந்துள்ள தன்னைப்பற்றிய தாழ்வான எண்ணத்தாலும் தாழ்வுச் சிக்கலாலும் அவற்றை வெளிக்கொணராமல் தடுத்து விடுகின்றது. இதற்கு மூலகாரணம் உடனிருப்பவர்களின் எதிமாறான விமர்சனங்களும், அளவு கடந்த நகைப்புமாகும். இத்தகைய சுயத்துவப் பண்புகள் த்னி மனிதனில் அடிப்படையில் அமைந்திருக்கும் ஒழுக்க விழுமியங்கள், பண்பாட்டுப் பெறுமானங்கள் என்பவற்றைச் சிதைத்து சிதிலமாக்கி விடுகின்றது.ஏனெனில், இவை உளப்பாதிப்பினை ஏற்படுத்தி ஒருவன் சுயமதிப்பினை இழப்பதற்கு காரணமாக அமைகின்றது. மனித நாவுகளில் பிறக்கும் மோசமான வார்த்தைகள் ஆயுதங்களை விட கூர்மையானவை.

இத்தகைய வார்த்தைகள் தனிமனித உள்ளத்தைக் காயப்படுத்தி அவனை சமூக எதிரியாக மாற்றி விடுவதற்கு வழி செய்கின்றது. ஹிட்லர், லெனின் போன்றவர்களை வரலாறு கண்டு கொண்டதற்கு இதுவும் ஒரு மறைமுகமான காரணமாகும்.

சுயமதிப்பை தன்னில் வளர்த்துக் கொள்ள ஒரு மனிதன் அவசியம் பெற வேண்டிய ஆலோசனைகள்…….

தன்னைப்பற்றியதொரு உயர்வான எண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு தன்னைத்தானே பலம்- பலவீனம்- குறை நிறைகளோடு ஏற்றுக் கொள்ளப் பழகுதல்.

சுய ஆற்றல்கள் திறன்களை இனங்கண்டு என்னாலும் சில விசயங்களைச் செய்ய முடியும் என நம்பிக்கை கொண்டு செயலாற்றல்.

தனக்குள்ள நற்குணங்களையும், சிறந்த பழக்க வழக்கங்களையும் எண்ணிப் பார்த்து தனது உயர்வை மதித்தல்.

பிறரது தயவை அதிகம் எதிர்பாராது சுயதிறனில் நம்பிக்கை கொண்டு சுயமாகச் செயல்படல்.

அடையக்கூடிய இலக்குகளை மாத்திரம் கருத்திற்க்கொண்டு செயற்படல்.

Posted in ஈமான் (நம்பிக்கை) | Comments Off on சுயமதிப்பு!

வெற்றிபெற்ற பிரிவினரின் வழி

1. வெற்றிபெற்ற கூட்டத்தினர், தமது வாழ்க்கையில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும், அவர்களுக்குப் பின்னால் அவர்களது தோழர்களது வழிமுறையையும் பின்பற்றக்கூடியவர்களாக இருப்பர். இது அல்லாஹ் தனது ரஸுலின் மீது அருளிய அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் தனது தோழர்களுக்குத் தெளிவுப்படுத்திக் காட்டியதுமாகும். இவ்விரண்டையும் உறுதியாகப் பற்றிப்பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார்கள்.

‘உங்களிடத்தில் நான் இரணடை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப்பிடித்துப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். அவையாவன அல்குர்ஆனும் எனது ஸுன்னாவுமாகும். எனக்கு ‘ஹவுளுல் கவுதர்’ என்னும் தடாகத்தில் அவ்விரண்டும் நீர் புகட்டும் வரை, அவை ஒன்றை விட்டு மற்றொன்று பிரியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: ஹாகிம் ஸஹீஹ்.

2. வெற்றிபெற்ற கூட்டத்தினர் தம்மிடம் பிணக்குகளோ, அபிப்பிராயப் பேதங்களோ ஏற்படும் போது பின்வரும் மறைவசனத்துக்கு அமைவாக அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனின் பக்கமும், அவனது ரஸுலுடைய ஸுன்னாவின் பக்கமும் திரும்பி விடுவார்கள்.

“நீங்கள் ஏதேனுமொரு விவகாரத்தில் பிணங்கிக் கொண்டால், அதனை அல்லாஹ்வின் பாலும் அவனுடைய ரஸுலின் பாலும் மீட்டி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றவர்களாக இருந்தால் (அவ்வாறு செய்யத் தவற மாட்டீர்கள்) இதுவே மிகச் சிறந்ததும், மிக்க அழகான முடிவுமாகும்” (4:59).

“(நபியே!) உமது இறைவனின் மீது சத்தியமாக (மூமின்களாகிய) அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாத வரையில் அவர்கள் (உண்மை) மூமின்களாக ஆக மாட்டார்கள்” (4:65).

3. வெற்றிபெற்ற கூட்டத்தினர், பின்வரும் மறை வசனத்துக்கமைவாக அல்லாஹ்வுடைய சொல்லையும், அவனது ரஸுலுடைய சொல்லையும் விட மேலாக வேறெவருடைய சொல்லுக்கும் முக்கியத்துமளிக்க மாட்டார்கள்.

“மூமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸுலுக்கும் முன்பாக (பேசுவதில்) முந்திக் கொள்ளாதீர்கள். (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும், நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்” (49:01).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள்.

‘உங்களுக்கு வானத்திலிருந்து கல்மாரி பொழியுமோ என நான் அஞ்சுகிறேன். நானோ உங்களிடத்தில் (ஏதேனும் மார்க்க விவகாரம் பற்றி) ‘அல்லாஹ்வுடைய ரஸுல் (ஸல்) அவர்கள் இன்ன விதமாகச் சொன்னார்கள்’ என்று கூறுகிறேன். நீங்களோ, (அதுபற்றி) ‘அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்’ என்று கூறுகிறீர்கள்’. (நபி அவர்களுடைய சொல்லுக்கு மாறாக வேறெவருடைய சொல்லுக்கேனும் முக்கியத்துவம் அளிப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை மேற்காட்டிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் எச்சரிக்கையைக் கொண்டு உணரலாம். இங்கு நபியவர்களின் சொல்லுக்குப் பொருந்துகின்ற நிலையில் கருத்து வெளியிடுவதைக் குறிக்காது என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். (மொழிபெயர்ப்பாளர்)

வெற்றிபெற்ற கூட்டத்தினர், தௌஹீதுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அது எவ்வாறெனில், இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றுபோல் வணக்கம் செலுத்தி அல்லாஹ்வுக்கு வழிபடல், துஆக்கேட்டல், உதவிகோரல், பாதுகாப்புக்கோரல், ஆபத்துக்கு அபயமிட்டழைத்தல், நேர்ச்சை செய்தல், தவக்குல் வைத்தல், (பாரம் சாட்டுதல்) அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளித்தல் முதலான வற்றிலும் இவையல்லாத இதுபோன்ற ஏனைய வணக்கங்களிலும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்பதன் மூலம் அவனை ஒருமைப் படுத்துதலாகும். இதுதான் சரியான இஸ்லாமிய ஆட்சியொன்றை நிறுவுவதின் அடிப்படையாகும்.

அதிகமான இஸ்லாமிய நாடுகளில் இடம் பெற்றிருக்கின்ற வெளிப்படையான ஷிர்க்குகளிலிருந்து முற்றாக விலகி இருப்பது அவசியமாகும். இதுதான் தௌஹீதின் நிலைபாடுமாகும். தௌஹீதை அலட்சியம் செய்யக்கூடிய எந்த ஒரு கூட்டத்துக்கும் (அல்லாஹ்வின்) உதவி கிட்டாது. அவர்கள் ரஸுல்மார்களையும், குறிப்பாக எங்களுக்காக அனுப்பப்பட்ட ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களையும் முன்மாதிரியாகக் கொண்டு ஷிர்க்கின் வகைகளை எதிர்த்துப் போராட மாட்டார்கள்.

5. வெற்றிபெற்ற கூட்டத்தினர், தமது வணக்கங்களிலும், நடைமுறைகளிலும், வாழ்க்கையின் ஏனைய விவகாரங்களிலும் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவை உயிர்ப்பிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதற்கமைவாக அவர்கள் மக்களுக்கு மத்தியில் அபூர்வமானவர்களாகவே இருப்பார்கள்.

‘இஸ்லாம் அபூர்வமாகவே ஆரம்பித்தது. எவ்வாறு ஆரம்பித்ததோ, அதே நிலைக்கு அது மீளும். அவ்வாறான காலத்திலுள்ள அபூர்வமான அம்மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் உண்டாகட்டும்’ ஆதாரம்: முஸ்லிம்.

மற்றொரு ஹதீஸில்

‘அபூர்வமான மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் உண்டாகட்டும். இவர்கள் மக்கள் வழி தவறியிருக்கும் காலத்தில் அவர்களை நெறிப்படுத்துவார்கள்
ஆதாரம்: அபூஅம்ருத்-தானீ-ஸஹீஹ்.

6. வெற்றிபெற்ற கூட்டத்தினர் அல்லாஹ்வுடைய சொல்லையும், அவனுடைய வஹியின்றி மார்க்கத்தைப் பற்றி சுயமாக எதனையும் பேசாத அவனது ரஸுலின் சொல்லையும் தவிர வேறெவருடைய சொல்லையும் கொண்டு பிடிவாதமாக இருக்க மாட்டார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களைத் தவிர வேறெந்த மனிதரும் பிழைவிடும் இயல்புடையவர்களாகவே இருக்கின்றனர். அவர் மக்களுடைய கணிப்பைப் பொறுத்தமட்டில் அந்தஸ்தில் எவ்வளவு உயர்ந்து விட்ட போதிலும் சரியே! இதுபற்றிய நபி வாக்கு எவ்வாறு அமைந்துள்ளதென்று பாருங்கள்.

‘ஆதமுடைய மக்கள் (மனிதர்கள்) அனைவருமே தவறிழைக்கும் சுபாவமுடையவர்கள். தவறிழைப்போரில் மிகச் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரு(தவ்பாச் செய்)பவர்கள்’
ஆதாரம்: அஹ்மத் (ஹஸன்).

நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் எந்த ஒரு மனிதருடைய சொல்லையும் ஏற்கவும் முடியும், மறுக்கவும் முடியும். ஆனால் நபி அவர்களுடைய சொல்லைத் தவிர. (அதனை ஏற்றேயாக வேண்டும்) என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

7. வெற்றிபெற்ற கூட்டத்தினர் எப்பொழுதும் ஹதீஸுக்கு முக்கியத்தும் அளிப்பவர்களாக இருப்பர். அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

‘எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தினர் உண்மையின் மீது இருந்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு எவரேனும் சதி செய்தாலும் அல்லாஹ்வுடைய தீர்ப்பென்னும் மௌத்து வரும்வரையில் அவர்களுக்கு எந்தவிதத் தீங்கும் எவரும் செய்து விட முடியாது’
ஆதாரம்: முஸ்லிம்.

8. வெற்றிபெற்றோர், முஜ்தஹிதுகளான இமாம்களுக்கு (குறிப்பாக சில இமாம்களுக்கன்றி எல்லா இமாம்களுக்கும்) மதிப்பளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களில் எந்த ஒரு தனி மனிதருடைய சொல்லை மட்டும் சரியெனக் கண்டு, அதில் பிடிவாதமாயிருக்க மாட்டார்கள். ஸஹீஹான ஹதீஸ்களின் ஆதாரத்தைக் கொண்டே இவர்கள் மார்க்கச் சட்டங்களை எடுப்பார்கள். இமாம்களின் இஜ்திஹாதுகளில், ஸஹீஹான ஹதீஸ்களுக்குப் பொருத்தமாக அமைகின்ற அனைத்தையும் எடுப்பார்கள்.

தமது இஜ்திஹாதுகளில், ஸஹீஹான ஹதீஸ்களுக்குப் பொருத்தமானவற்றை மட்டுமே எடுக்குமாறும், அதற்கு முரணாக அமைகின்றவற்றை விட்டு விடுமாறும் தம்மைத் துயர்ந்தோர்களுக்கு மேற்கூறப்பட்ட இமாம்கள் வஸிய்யத்துச் செய்துள்ளனர்.

9. வெற்றிபெற்ற கூட்டம் நன்மையைக் கொண்டு ஏவி, தீமையை விட்டும் தடுக்கும். பித்அத்தான வழிகளையும், (முஸ்லிம்) சமுதாயத்தைக் கூறுபோட்டு, மார்க்கத்திலே புதுமைகளை ஏற்படுத்தி, நபிவழியையும், ஸஹாபாக்களின் வழியையும் விட்டுத் தூரமான நாசக்கார இயக்கங்களையும் அது வெறுக்கும்.

10. வெற்றிபெற்றோர், வெற்றி கிட்டுவதற்காகவும், அல்லாஹ்வின் அருளைக் கொண்டும், நபி (ஸல்) அவர்களது ஸபாஅத்தைக் கொண்டும், சுவர்க்கம் பிரவேசிக்கவும், நபியவர்களது ஸுன்னாவையும், ஸஹாபாக்களின் நடைமுறையையும் உறுதியாகப் பற்றிப் பிடிப்பதற்காக முஸ்லிம்களை அழைக்கும்.

11. இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணாக, மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் அமைந்துள்ளதால், வெற்றிபெற்ற கூட்டம் அவற்றை நிராகரிக்கும். இம்மையிலும், மறுமையிலும் மனிதன் விமோசனம் பெறுவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்குமாறு மக்களை அழைக்கும். (அல்லாஹ்வாகிய) அவன் மக்களை நல்வழி படுத்துவதற்கு மிகவும் அறிந்தவன். (அவனால் அருளப்பட்ட) வேதம் நிலையானது. அதிலுள்ள சட்டங்கள், எந்த ஒரு காலத்திலும் மாற்றமடையாதது. காலத்துக்குத் தக்கவாறு அது மாற்றப்பட மாட்டாது.

பொதுவாக உலகின் துர்பாக்கிய நிலைக்கும், குறிப்பாக இஸ்லாமிய உலகின் துர்பாக்கிய நிலைக்கும், அவை அடிக்கடி சந்திக்கும் சோதனைகள், கஷ்டங்கள், இழிவுகள் போன்றவற்றுக்கும் காரணம் யாதெனில், அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டும், அவனது ரஸுலுடைய ஸுன்னாவைக் கொண்டும் தீர்ப்பு வழங்குவதை விட்டதாகும்.

“மனிதர்கள் (தங்களது தீய நடத்தையைக் கொண்டு) தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை” (13:11) என்ற அல்குர்ஆன் வசனத்துக்கமைவான செயல்பாட்டின் பிரகாரம் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் இஸ்லாம் காட்டுகின்ற வழியின்பால் திரும்புவதைக் கொண்டன்றி முஸ்லிம்களுக்கு கௌரவம் ஏற்பட முடியாது.

12. வெற்றிபெற்ற கூட்டம், முஸ்லிம்கள் அனைவரையும், அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதற்காக அழைக்கின்றது. இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும், அவர்களின் வசதிக்கும், சக்திக்கும் ஏற்றவாறு கடமையாகும். ஜிஹாத் என்பது பின்வருமாறு அமைகின்றது.

I. நாவையும் பேனாவையும் கொண்டு ஜிஹாத் செய்தல்:-

சரியான இஸ்லாத்தைப் பற்றிப் பிடிப்பது கொண்டும், அதிகமான இஸ்லாமிய நாடுகளில் பரவியிருக்கும் ஷிர்க்கை விட்டு முற்றாக நீங்கி தௌஹீதைப் பற்றிப் பிடிப்பது கொண்டும், முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதோரையும் நாவினாலும் பேனாவினாலும் அழைப்பு விடுத்தல் ஜிஹாதின் ஒரு வகையாகும். முஸ்லிம்களுக்கு மத்தியில் ஷிர்க் ஊடுருவுவது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

‘எனது உம்மத்திலுள்ள பல கூட்டத்தினர் இணை வைப்பவர்களுடன் சேரும்வரை, (அவர்களுடன் சேர்ந்து) சிலைகளை வணங்கும் வரை மறுமைநாள் ஏற்பட மாட்டாது’
ஆதாரம்: அபூதாவூத் (ஸஹீஹ்) இதே கருத்தில் முஸ்லிமிலும் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.

II. பொருளைக் கொண்டு ஜிஹாத் செய்தல்:-

இஸ்லாத்தைப் பரப்புவதற்காக பணத்தைச் செலவு செய்தலும், சரியான ஆதாரங்களுடன் அப்பணியில் புத்தகங்களை அச்சிட்டு வினியோகித்தலும், இஸ்லாத்தைத் தழுவியவர்களில் வறியவர்களான முஸ்லிம்களை அதில் நிலைப்படுத்துவதற்காக அவர்களுக்குப் பணத்தைப் பங்கிட்டுக் கொடுத்தலும், ஆயுதங்கள் செய்தலும், செய்ய வசதியற்றவர்கள் பணம் கொடுத்து வாங்குவதும், முஜாஹிதீன்களுக்கு யுத்தக் கருவிகளை ஏற்பாடு செய்து கொடுத்தலும், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை போன்றவற்றைத் தயார் செய்து கொடுப்பதும் பொருளைக் கொண்டு ஜிஹாத் செய்தலாகும்.

III. உயிரைக் கொண்டு ஜிஹாத் செய்தல்:-

இஸ்லாத்துக்கு உதவுவதற்காகவும், அல்லாஹ்வுடைய கலிமா “லாஇலாஹ இல்லல்லாஹ்” உயர்வடைவதற்காகவும், காஃபிர் (நிராகரிப்பவர்) களின் (கலிமாவுக்கெதிரான) வாக்கு தாழ்ந்து விடுவதற்காகவும் யுத்தக்களங்களில் போராடுவது உயிரைக் கொண்டு ஜிஹாத் செய்வதாகும். இந்தப் பிரிவுகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

‘நீங்கள் உங்களுடைய பொருள்களைக் கொண்டும், உயிர்களைக் கொண்டும், நாவுகளைக் கொண்டும் இணை வைப்பவர்களுடன் ஜிஹாத் செய்யுங்கள்’
ஆதாரம்: அபூதாவூத் (ஸஹீஹ்)

அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாதுடைய சட்டத்துக்கு சில பிரிவுகள் உண்டு.

1. ‘பர்ளு ஐன்’ (கட்டாயக் கடமை) : கொடுமைக்காரர்களான யூதர்கள் பலஸ்தீனை அபகரித்துக் கொண்டது போல, சில முஸ்லிம் நாடுகளில் பகைவர்களின் எதிர்ப் போராட்டம் இருந்து கொண்டிருக்கின்றது. சக்தி பெற்ற முஸ்லிம்கள் தங்களுடைய பொருள்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் போராட்டம் செய்து, யூதர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றி ‘மஸ்ஜிதுல் அக்ஸாவைக்’ கைப்பற்றும் வரை அவர்கள் பாவிகளாகவே இருக்கின்றனர்.

2. பர்ளு கிபாயா : சில முஸ்லிம்களேனும் செய்தால் எஞ்சியுள்ளவர்கள் மீதுள்ள கடமை நீங்கி விடுகின்றது என்பதே பர்ளு கிபாயாவாகும். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதும், எல்லா நாடுகளிலும், இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக அந்தத் தப்லீகைப் (பிரச்சாரம்) பரவலாக்குவதுமாக அந்தப்பணி இருக்க வேண்டும். அந்த வழியில் உறுதியாக நிற்பவர்கள், அப்பாதையில் இஸ்லாம் நடைமுறைக்கு வரும்வரை, கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இன்ஷா அல்லாஹ் வெற்றிபெற்ற கூட்டம் வந்து கொண்டே இருக்கும்.
Posted in வெற்றியாளர்கள் | Comments Off on வெற்றிபெற்ற பிரிவினரின் வழி

அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்

ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்டவைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்சரிக்கிறான்: “நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்” (24:21). மனிதனின் இரத்தம் ஓடும் நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். மனிதர்களை மானக்கேடானவற்றில் வீழ்த்துவதற்கு ஷைத்தான் கையாளும் வழிகளில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பதாகும். இதனால் தான் இறைமார்க்கம் இப்பாதையை அடைத்து விட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்த ஆணும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்’ அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதி

பனூ ஹாஷிம்களில் சிலர் அஸ்மா பின் உமைஸ் (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது அஸ்மா (ரலி) அபூபக்கர் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அபூபக்கர் (ரலி) வந்ததும் அவர்களைக் கண்டார்கள். கணவன் இல்லாத வீட்டிற்கு அவர்கள் வந்ததை அபூபக்கர் (ரலி) விரும்பவில்லை. அதனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். மேலும் நான் இதை (தவறாக அல்லாமல்) நல்லதாகவே கருதுகிறேன் என்றும் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திண்ணமாக அல்லாஹ் அவளைக் குற்றமற்றவளாக ஆக்கியிருக்கின்றான் எனக் கூறிவிட்டு மிம்பரில் ஏறி, ‘இதற்குப் பிறகு எந்த ஆணும் கணவன் வீட்டில் இல்லாத போது ஒரு பெண்ணிடம் செல்லக் கூடாது. அவருடன் ஒருவரோ இருவரோ சேர்ந்து சென்றாலே தவிர’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம்.

எனவே எந்த ஆணும் தம் சகோதரரின் மனைவி அல்லது வேலைக்காரி போன்ற அந்நியப் பெண்ணுடன் அல்லது பெண் மருத்துவருடனும் வீட்டிலோ அறையிலோ அல்லது காரிலோ தனித்திருப்பது கூடாது. ஆயினும் பெரும்பாலோர் இதில் அலட்சியமாகவே இருக்கின்றனர். தம் மீதோ பிறர் மீதோ நம்பிக்கை வைத்து இப்படி நடந்து கொள்கின்றனர். இதனால் மானக்கேடான காரியங்களில் அல்லது அதற்கான தூண்டுதல்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். மட்டுமல்ல குழந்தைகள் தவறான வழியில் பிறத்தல், சந்ததிக் கலப்பு ஏற்படுதல் எனும் வருந்தத்தக்க நிலையும் அதிகரித்து விடும்.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
Posted in எச்சரிக்கை | Comments Off on அந்நியப் பெண்ணுடன் தனித்திருத்தல்

ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல்

விசுவாசிகளில் ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல். இவ்வகையில் எமன் தேசத்து மக்களின் சிறப்பு பற்றி

31- நபி(ஸல்)அவர்கள்தமது கரத்தால் யமன் நாட்டுசத் திசையை நோக்கி சைகை காட்டி இறைநம்பிக்கை அதோ அங்கிருக்கும் யமன் நாட்டைச் சார்ந்ததாகும். அறிந்து கொள்ளுங்கள் கல் மனமும்,(இறக்கமற்ற)கடின சுபாவமும், ஒட்டகங்களின் வால்களை பிடித்தபடி அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாக)சென்று கொண்டிருக்கும்(பாளைவன)ஒட்டக மேய்ப்பவர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும் குழப்பங்கள் தலை தூக்கும்(அதாவது)ரபிஆ மற்றும் முளர் குலத்தவர் இடையே அவை தோன்றும் என்று சொன்னார்கள்.
புகாரி-3302: உக்பா பின் அம்ர் அபூ மஸ்வூது(ரலி)

32- யமன்வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள். மென்மைளான நெஞ்சம் உடையவர்கள். மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சார்ந்ததாகும், விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புகாரி – 4390: அபூஹூரைரா(ரலி)

33. இறை மறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (நெருப்பை வணங்கும் மஜூஸிகள் வசிக்கும் பாரசீகத்தில்)உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடி) பாலைவன வாசிகளான ஒட்டகம் மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெறுமையும் அகம்பாவமும் காணப்படுகிறது. ஆடுகளின் உரிமையாளர்களிடம்(அடக்கமும் கம்பீரமும் கலந்த)அமைதிக் காணப்படுகிறது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-3301: அபூஹூரைரா(ரலி)

34- பெருமையும் கர்வமும் கிராமவாசிகளான நாடோடிகளிடையே காணப்படும். ஆடு மேய்ப்பவர்களிடையே அமைதியும் பணிவும் காணப்படும். இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். மதி நுட்பமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-3499: அபூ ஹூரைரா(ரலி).

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஒருவர் மற்றவரை விட சிறந்தவராகயிருத்தல்

அண்டை வீட்டாருக்கு உதவுவது..

அண்டை வீட்டாருக்கு உதவுவது விருந்தினரை உபசரிப்பது நல்லதை பேசுவது அல்லது மௌனமாய் இருப்பது ஈமானின் ஒரு கிளையாகக் கருதுதல்

29- அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக் கைக் கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-6018: அபூஹூரைரா(ரலி)

30- நபி(ஸல்)அவர்கள் பேசிய போது என் காதுகளால் கேட்டேன். என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப் படுத்தட்டும். அல்லாஹவையும் மறுமை நாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் விருந்தாளிக்கு தமது கொடையை கண்ணியமாக வழங்கட்டும் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன? என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள்(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு(உபசரிப்பது)ஆகும். விருந்து உபசாரம் மூன்று தினங்ளாகும் அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்)அவருக்கு தர்மமாக அமையும். மேலும் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் (ஒன்று)நல்லதைப்பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் என்று கூறினார்கள்.
புகாரி-6019: அபூஷூரைஹ் அல் அதவீ(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அண்டை வீட்டாருக்கு உதவுவது..

இந்த நண்பன் மிகவும் கெட்டவன்

43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் (அருளாளன் அல்லாஹ்வின்) நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.

43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.

43:38. எதுவரை என்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும் போது (ஷைத்தானிடம்): “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்த நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.

43:39. (அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).

43:40. ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இந்த நண்பன் மிகவும் கெட்டவன்

தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்..

தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்புவது ஈமானின் அடையாளம்

28- அல்லாஹ்வின் தூதர் அவர்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான)ஈமான் கொண்டவர் ஆகமாட்டார் எனக்கூறினார்கள்.
புகாரி-13: அனஸ்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும்..

அல்லாஹ்வின் திருத்தூதரை நேசிப்பது

அல்லாஹ்வின் திருத்தூதரை ஒருவரின் குடும்பம் பிள்ளைகள், தந்தை பிற மனிதர்கள் ஆகியோரைக் காட்டிலும் அதிகம் நேசிப்பது

27- நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை அவரது குழந்தைகள் ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மிக அன்பானவராக ஆகும் வரை அவர்(உண்மையான)ஈமான் கொண்டவர் ஆகமாட்டார்.
புகாரி-15: அனஸ்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on அல்லாஹ்வின் திருத்தூதரை நேசிப்பது

ஈமான் கொண்டவர் அதன் சுவையை..

ஈமான் கொண்டவர் அதன் சுவையை உணர்தல்

26- எவரிடம் மூன்று தன்மைகளக் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுமையை உணர்ந்தவராவார்(அவை)அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
புகாரி-16: அனஸ்(ரலி)

Posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் | Tagged | Comments Off on ஈமான் கொண்டவர் அதன் சுவையை..