1. வெற்றிபெற்ற கூட்டத்தினர், தமது வாழ்க்கையில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும், அவர்களுக்குப் பின்னால் அவர்களது தோழர்களது வழிமுறையையும் பின்பற்றக்கூடியவர்களாக இருப்பர். இது அல்லாஹ் தனது ரஸுலின் மீது அருளிய அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் தனது தோழர்களுக்குத் தெளிவுப்படுத்திக் காட்டியதுமாகும். இவ்விரண்டையும் உறுதியாகப் பற்றிப்பிடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார்கள்.
‘உங்களிடத்தில் நான் இரணடை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப்பிடித்துப் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். அவையாவன அல்குர்ஆனும் எனது ஸுன்னாவுமாகும். எனக்கு ‘ஹவுளுல் கவுதர்’ என்னும் தடாகத்தில் அவ்விரண்டும் நீர் புகட்டும் வரை, அவை ஒன்றை விட்டு மற்றொன்று பிரியாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: ஹாகிம் ஸஹீஹ்.
2. வெற்றிபெற்ற கூட்டத்தினர் தம்மிடம் பிணக்குகளோ, அபிப்பிராயப் பேதங்களோ ஏற்படும் போது பின்வரும் மறைவசனத்துக்கு அமைவாக அல்லாஹ்வுடைய வேதமான குர்ஆனின் பக்கமும், அவனது ரஸுலுடைய ஸுன்னாவின் பக்கமும் திரும்பி விடுவார்கள்.
“நீங்கள் ஏதேனுமொரு விவகாரத்தில் பிணங்கிக் கொண்டால், அதனை அல்லாஹ்வின் பாலும் அவனுடைய ரஸுலின் பாலும் மீட்டி விடுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றவர்களாக இருந்தால் (அவ்வாறு செய்யத் தவற மாட்டீர்கள்) இதுவே மிகச் சிறந்ததும், மிக்க அழகான முடிவுமாகும்” (4:59).
“(நபியே!) உமது இறைவனின் மீது சத்தியமாக (மூமின்களாகிய) அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக அங்கீகரித்து, நீர் செய்யும் தீர்ப்பைத் தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியுமின்றி அங்கீகரித்து முற்றிலும் வழிபடாத வரையில் அவர்கள் (உண்மை) மூமின்களாக ஆக மாட்டார்கள்” (4:65).
3. வெற்றிபெற்ற கூட்டத்தினர், பின்வரும் மறை வசனத்துக்கமைவாக அல்லாஹ்வுடைய சொல்லையும், அவனது ரஸுலுடைய சொல்லையும் விட மேலாக வேறெவருடைய சொல்லுக்கும் முக்கியத்துமளிக்க மாட்டார்கள்.
“மூமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரஸுலுக்கும் முன்பாக (பேசுவதில்) முந்திக் கொள்ளாதீர்கள். (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும், நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்” (49:01).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு எச்சரிக்கின்றார்கள்.
‘உங்களுக்கு வானத்திலிருந்து கல்மாரி பொழியுமோ என நான் அஞ்சுகிறேன். நானோ உங்களிடத்தில் (ஏதேனும் மார்க்க விவகாரம் பற்றி) ‘அல்லாஹ்வுடைய ரஸுல் (ஸல்) அவர்கள் இன்ன விதமாகச் சொன்னார்கள்’ என்று கூறுகிறேன். நீங்களோ, (அதுபற்றி) ‘அபூபக்கர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்’ என்று கூறுகிறீர்கள்’. (நபி அவர்களுடைய சொல்லுக்கு மாறாக வேறெவருடைய சொல்லுக்கேனும் முக்கியத்துவம் அளிப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை மேற்காட்டிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் எச்சரிக்கையைக் கொண்டு உணரலாம். இங்கு நபியவர்களின் சொல்லுக்குப் பொருந்துகின்ற நிலையில் கருத்து வெளியிடுவதைக் குறிக்காது என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். (மொழிபெயர்ப்பாளர்)
வெற்றிபெற்ற கூட்டத்தினர், தௌஹீதுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். அது எவ்வாறெனில், இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றுபோல் வணக்கம் செலுத்தி அல்லாஹ்வுக்கு வழிபடல், துஆக்கேட்டல், உதவிகோரல், பாதுகாப்புக்கோரல், ஆபத்துக்கு அபயமிட்டழைத்தல், நேர்ச்சை செய்தல், தவக்குல் வைத்தல், (பாரம் சாட்டுதல்) அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளித்தல் முதலான வற்றிலும் இவையல்லாத இதுபோன்ற ஏனைய வணக்கங்களிலும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்பதன் மூலம் அவனை ஒருமைப் படுத்துதலாகும். இதுதான் சரியான இஸ்லாமிய ஆட்சியொன்றை நிறுவுவதின் அடிப்படையாகும்.
அதிகமான இஸ்லாமிய நாடுகளில் இடம் பெற்றிருக்கின்ற வெளிப்படையான ஷிர்க்குகளிலிருந்து முற்றாக விலகி இருப்பது அவசியமாகும். இதுதான் தௌஹீதின் நிலைபாடுமாகும். தௌஹீதை அலட்சியம் செய்யக்கூடிய எந்த ஒரு கூட்டத்துக்கும் (அல்லாஹ்வின்) உதவி கிட்டாது. அவர்கள் ரஸுல்மார்களையும், குறிப்பாக எங்களுக்காக அனுப்பப்பட்ட ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களையும் முன்மாதிரியாகக் கொண்டு ஷிர்க்கின் வகைகளை எதிர்த்துப் போராட மாட்டார்கள்.
5. வெற்றிபெற்ற கூட்டத்தினர், தமது வணக்கங்களிலும், நடைமுறைகளிலும், வாழ்க்கையின் ஏனைய விவகாரங்களிலும் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களுடைய ஸுன்னாவை உயிர்ப்பிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதற்கமைவாக அவர்கள் மக்களுக்கு மத்தியில் அபூர்வமானவர்களாகவே இருப்பார்கள்.
‘இஸ்லாம் அபூர்வமாகவே ஆரம்பித்தது. எவ்வாறு ஆரம்பித்ததோ, அதே நிலைக்கு அது மீளும். அவ்வாறான காலத்திலுள்ள அபூர்வமான அம்மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் உண்டாகட்டும்’ ஆதாரம்: முஸ்லிம்.
மற்றொரு ஹதீஸில்
‘அபூர்வமான மக்களுக்கு நல்வாழ்த்துக்கள் உண்டாகட்டும். இவர்கள் மக்கள் வழி தவறியிருக்கும் காலத்தில் அவர்களை நெறிப்படுத்துவார்கள்
ஆதாரம்: அபூஅம்ருத்-தானீ-ஸஹீஹ்.
6. வெற்றிபெற்ற கூட்டத்தினர் அல்லாஹ்வுடைய சொல்லையும், அவனுடைய வஹியின்றி மார்க்கத்தைப் பற்றி சுயமாக எதனையும் பேசாத அவனது ரஸுலின் சொல்லையும் தவிர வேறெவருடைய சொல்லையும் கொண்டு பிடிவாதமாக இருக்க மாட்டார்கள். ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்களைத் தவிர வேறெந்த மனிதரும் பிழைவிடும் இயல்புடையவர்களாகவே இருக்கின்றனர். அவர் மக்களுடைய கணிப்பைப் பொறுத்தமட்டில் அந்தஸ்தில் எவ்வளவு உயர்ந்து விட்ட போதிலும் சரியே! இதுபற்றிய நபி வாக்கு எவ்வாறு அமைந்துள்ளதென்று பாருங்கள்.
‘ஆதமுடைய மக்கள் (மனிதர்கள்) அனைவருமே தவறிழைக்கும் சுபாவமுடையவர்கள். தவறிழைப்போரில் மிகச் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரு(தவ்பாச் செய்)பவர்கள்’
ஆதாரம்: அஹ்மத் (ஹஸன்).
நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் எந்த ஒரு மனிதருடைய சொல்லையும் ஏற்கவும் முடியும், மறுக்கவும் முடியும். ஆனால் நபி அவர்களுடைய சொல்லைத் தவிர. (அதனை ஏற்றேயாக வேண்டும்) என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
7. வெற்றிபெற்ற கூட்டத்தினர் எப்பொழுதும் ஹதீஸுக்கு முக்கியத்தும் அளிப்பவர்களாக இருப்பர். அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
‘எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தினர் உண்மையின் மீது இருந்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு எவரேனும் சதி செய்தாலும் அல்லாஹ்வுடைய தீர்ப்பென்னும் மௌத்து வரும்வரையில் அவர்களுக்கு எந்தவிதத் தீங்கும் எவரும் செய்து விட முடியாது’
ஆதாரம்: முஸ்லிம்.
8. வெற்றிபெற்றோர், முஜ்தஹிதுகளான இமாம்களுக்கு (குறிப்பாக சில இமாம்களுக்கன்றி எல்லா இமாம்களுக்கும்) மதிப்பளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்களில் எந்த ஒரு தனி மனிதருடைய சொல்லை மட்டும் சரியெனக் கண்டு, அதில் பிடிவாதமாயிருக்க மாட்டார்கள். ஸஹீஹான ஹதீஸ்களின் ஆதாரத்தைக் கொண்டே இவர்கள் மார்க்கச் சட்டங்களை எடுப்பார்கள். இமாம்களின் இஜ்திஹாதுகளில், ஸஹீஹான ஹதீஸ்களுக்குப் பொருத்தமாக அமைகின்ற அனைத்தையும் எடுப்பார்கள்.
தமது இஜ்திஹாதுகளில், ஸஹீஹான ஹதீஸ்களுக்குப் பொருத்தமானவற்றை மட்டுமே எடுக்குமாறும், அதற்கு முரணாக அமைகின்றவற்றை விட்டு விடுமாறும் தம்மைத் துயர்ந்தோர்களுக்கு மேற்கூறப்பட்ட இமாம்கள் வஸிய்யத்துச் செய்துள்ளனர்.
9. வெற்றிபெற்ற கூட்டம் நன்மையைக் கொண்டு ஏவி, தீமையை விட்டும் தடுக்கும். பித்அத்தான வழிகளையும், (முஸ்லிம்) சமுதாயத்தைக் கூறுபோட்டு, மார்க்கத்திலே புதுமைகளை ஏற்படுத்தி, நபிவழியையும், ஸஹாபாக்களின் வழியையும் விட்டுத் தூரமான நாசக்கார இயக்கங்களையும் அது வெறுக்கும்.
10. வெற்றிபெற்றோர், வெற்றி கிட்டுவதற்காகவும், அல்லாஹ்வின் அருளைக் கொண்டும், நபி (ஸல்) அவர்களது ஸபாஅத்தைக் கொண்டும், சுவர்க்கம் பிரவேசிக்கவும், நபியவர்களது ஸுன்னாவையும், ஸஹாபாக்களின் நடைமுறையையும் உறுதியாகப் பற்றிப் பிடிப்பதற்காக முஸ்லிம்களை அழைக்கும்.
11. இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணாக, மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் அமைந்துள்ளதால், வெற்றிபெற்ற கூட்டம் அவற்றை நிராகரிக்கும். இம்மையிலும், மறுமையிலும் மனிதன் விமோசனம் பெறுவதற்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்குமாறு மக்களை அழைக்கும். (அல்லாஹ்வாகிய) அவன் மக்களை நல்வழி படுத்துவதற்கு மிகவும் அறிந்தவன். (அவனால் அருளப்பட்ட) வேதம் நிலையானது. அதிலுள்ள சட்டங்கள், எந்த ஒரு காலத்திலும் மாற்றமடையாதது. காலத்துக்குத் தக்கவாறு அது மாற்றப்பட மாட்டாது.
பொதுவாக உலகின் துர்பாக்கிய நிலைக்கும், குறிப்பாக இஸ்லாமிய உலகின் துர்பாக்கிய நிலைக்கும், அவை அடிக்கடி சந்திக்கும் சோதனைகள், கஷ்டங்கள், இழிவுகள் போன்றவற்றுக்கும் காரணம் யாதெனில், அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டும், அவனது ரஸுலுடைய ஸுன்னாவைக் கொண்டும் தீர்ப்பு வழங்குவதை விட்டதாகும்.
“மனிதர்கள் (தங்களது தீய நடத்தையைக் கொண்டு) தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை” (13:11) என்ற அல்குர்ஆன் வசனத்துக்கமைவான செயல்பாட்டின் பிரகாரம் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் இஸ்லாம் காட்டுகின்ற வழியின்பால் திரும்புவதைக் கொண்டன்றி முஸ்லிம்களுக்கு கௌரவம் ஏற்பட முடியாது.
12. வெற்றிபெற்ற கூட்டம், முஸ்லிம்கள் அனைவரையும், அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாத் செய்வதற்காக அழைக்கின்றது. இது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும், அவர்களின் வசதிக்கும், சக்திக்கும் ஏற்றவாறு கடமையாகும். ஜிஹாத் என்பது பின்வருமாறு அமைகின்றது.
I. நாவையும் பேனாவையும் கொண்டு ஜிஹாத் செய்தல்:-
சரியான இஸ்லாத்தைப் பற்றிப் பிடிப்பது கொண்டும், அதிகமான இஸ்லாமிய நாடுகளில் பரவியிருக்கும் ஷிர்க்கை விட்டு முற்றாக நீங்கி தௌஹீதைப் பற்றிப் பிடிப்பது கொண்டும், முஸ்லிம்களையும், முஸ்லிம் அல்லாதோரையும் நாவினாலும் பேனாவினாலும் அழைப்பு விடுத்தல் ஜிஹாதின் ஒரு வகையாகும். முஸ்லிம்களுக்கு மத்தியில் ஷிர்க் ஊடுருவுவது பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
‘எனது உம்மத்திலுள்ள பல கூட்டத்தினர் இணை வைப்பவர்களுடன் சேரும்வரை, (அவர்களுடன் சேர்ந்து) சிலைகளை வணங்கும் வரை மறுமைநாள் ஏற்பட மாட்டாது’
ஆதாரம்: அபூதாவூத் (ஸஹீஹ்) இதே கருத்தில் முஸ்லிமிலும் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.
II. பொருளைக் கொண்டு ஜிஹாத் செய்தல்:-
இஸ்லாத்தைப் பரப்புவதற்காக பணத்தைச் செலவு செய்தலும், சரியான ஆதாரங்களுடன் அப்பணியில் புத்தகங்களை அச்சிட்டு வினியோகித்தலும், இஸ்லாத்தைத் தழுவியவர்களில் வறியவர்களான முஸ்லிம்களை அதில் நிலைப்படுத்துவதற்காக அவர்களுக்குப் பணத்தைப் பங்கிட்டுக் கொடுத்தலும், ஆயுதங்கள் செய்தலும், செய்ய வசதியற்றவர்கள் பணம் கொடுத்து வாங்குவதும், முஜாஹிதீன்களுக்கு யுத்தக் கருவிகளை ஏற்பாடு செய்து கொடுத்தலும், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை போன்றவற்றைத் தயார் செய்து கொடுப்பதும் பொருளைக் கொண்டு ஜிஹாத் செய்தலாகும்.
III. உயிரைக் கொண்டு ஜிஹாத் செய்தல்:-
இஸ்லாத்துக்கு உதவுவதற்காகவும், அல்லாஹ்வுடைய கலிமா “லாஇலாஹ இல்லல்லாஹ்” உயர்வடைவதற்காகவும், காஃபிர் (நிராகரிப்பவர்) களின் (கலிமாவுக்கெதிரான) வாக்கு தாழ்ந்து விடுவதற்காகவும் யுத்தக்களங்களில் போராடுவது உயிரைக் கொண்டு ஜிஹாத் செய்வதாகும். இந்தப் பிரிவுகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
‘நீங்கள் உங்களுடைய பொருள்களைக் கொண்டும், உயிர்களைக் கொண்டும், நாவுகளைக் கொண்டும் இணை வைப்பவர்களுடன் ஜிஹாத் செய்யுங்கள்’
ஆதாரம்: அபூதாவூத் (ஸஹீஹ்)
அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாதுடைய சட்டத்துக்கு சில பிரிவுகள் உண்டு.
1. ‘பர்ளு ஐன்’ (கட்டாயக் கடமை) : கொடுமைக்காரர்களான யூதர்கள் பலஸ்தீனை அபகரித்துக் கொண்டது போல, சில முஸ்லிம் நாடுகளில் பகைவர்களின் எதிர்ப் போராட்டம் இருந்து கொண்டிருக்கின்றது. சக்தி பெற்ற முஸ்லிம்கள் தங்களுடைய பொருள்களைக் கொண்டும் உயிர்களைக் கொண்டும் போராட்டம் செய்து, யூதர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றி ‘மஸ்ஜிதுல் அக்ஸாவைக்’ கைப்பற்றும் வரை அவர்கள் பாவிகளாகவே இருக்கின்றனர்.
2. பர்ளு கிபாயா : சில முஸ்லிம்களேனும் செய்தால் எஞ்சியுள்ளவர்கள் மீதுள்ள கடமை நீங்கி விடுகின்றது என்பதே பர்ளு கிபாயாவாகும். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதும், எல்லா நாடுகளிலும், இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவதற்காக அந்தத் தப்லீகைப் (பிரச்சாரம்) பரவலாக்குவதுமாக அந்தப்பணி இருக்க வேண்டும். அந்த வழியில் உறுதியாக நிற்பவர்கள், அப்பாதையில் இஸ்லாம் நடைமுறைக்கு வரும்வரை, கொலை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.