அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்வதை நம்மீது கட்டாயப்படுத்தி சட்டமாக்கியுள்ளான். இதுபற்றித் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
“நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கின்றார்கள். (ஆகவே) மூமின்களே! நீங்களும் அவர் மீது ஸலவாத்துச் சொல்லி ஸலாமும் கூறிக் கொண்டிருங்கள்” (33:56)
மேற்காட்டிய வசனத்தில் உள்ளவாறு, அல்லாஹ் சொல்லும்
“ஸலவாத்” யாதெனில், மலக்குகளின் முன்னிலையில் நபி (ஸல்) அவர்களைப் புகழ்வதாகும். மலக்குகள் ஸலவாத் சொல்வதென்றால் நபியவர்களுக்காக துஆச் செய்வதாகும். என்பதாக அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
‘அல்லாஹ் தனது மலக்குகளிடத்தில் தனது அடியார் முஹம்மத் (ஸல்) அவர்களது அந்தஸ்தைப் பற்றிப் புகழ்ந்துரைக்கிறான்; அதனைத் தொடர்ந்து மலக்குகள் நபியவர்களுக்காக துஆச் செய்கிறார்கள். பின்பு உலகத்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்’ என்பதாக இப்னுகதீர் (ரஹ்) அவர்கள் மேற்காட்டிய வசனத்துக்கு விளக்கமளிக்கின்றார்கள்.
அல்லாஹ் மேற்காட்டிய வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்காக துஆ செய்து, அவர்கள் மீது ஸலவாத் சொல்லுமாறு கட்டளையிடுகிறான். இக்கால மனிதர்கள் செய்கின்றவாறு அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்யுமாறோ, அவர்களுக்காக பாத்திஹா ஸூராவையும், வேறு சில ஸூராக்களையும் ஓதுமாறோ கட்டளையிடவில்லை.
ஸலவாத்துக்களில் சிறப்பு மிக்கவை, நபியவர்கள் தனது தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஸலவாத்துக்களாகும். அதில் மிக உன்னதமானது பின்வரும் ஸலவாத்தாகும்.
‘அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத் கமா ஸல்லைத அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மத் கமா பாரக்த அலா இப்றாஹீம வஅலா ஆலி இப்றாஹீம இன்னக ஹமீதும் மஜீத்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
(அல்லாஹ்வே! நீ இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும்ஸலவாத்துச் சொன்னது போல், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் ஸலவாத் சொல்வாயாக! அல்லாஹ்வே! நீ இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்கள் குடும்பத்தார் மீதும் ‘பரக்கத்’ (அபிவிருத்தி) செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் பரக்கத் செய்வாயாக!’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
ஹதீஸ் கிதாபுகளிலும், பிக்ஹ் கிதாபுகளிலும் கூறப்பட்டுள்ள இந்த ஸலவாத்திலும், ஹதீஸ்களில் வந்துள்ள இவையல்லாத ஏனைய ஸலவாத்துக்களிலும் இன்று மக்கள் தமது விருப்பப்படி அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் ‘ஸய்யிதினா’ (எங்கள் தலைவரே!) என்ற சொல் கூறப்படவில்லை. நபியவர்கள் எமது தலைவர் என்பதில் சந்தேகமெதுவுமில்லை. ஆனால் நபியவர்கள் கற்றுத் தந்த வாசகங்களில் கூட்டல் குறைத்தலின்றி அவ்விதமே சொல்லிக் கொள்வது நம்மீது வாஜிபாகும். ‘இபாதத்’ (வணக்கம்) என்றால், நபியவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதைப் பின்பற்றுவதாகுமேயன்றி ஒவ்வொருவரும் தத்தமது புத்திக்கேற்ற வகையில் அமைத்துக் கொள்வதல்ல.
‘முஅத்தின் பாங்கு சொல்லுவதைக் கேட்டால் அவர் சொல்லுவது போன்று நீங்களும் சொல்லுங்கள்; பின்னர் என்மீது ஸலவாத்துச் சொல்லுங்கள். எவர் என்மீது ஒரு விடுத்தம் ஸலவாத்துச் சொல்கிறாரோ, அதனைக் கொண்டு அவர்மீது அல்லாஹ் பத்து விடுத்தம் ஸலவாத் சொல்லுகிறான். பின்னர் எனக்கு அல்லாஹ்விடம் வஸீலாவைத் தருமாறு கேளுங்கள். ‘வஸீலா’ என்பது சுவர்கத்திலுள்ள ஓர் இடம். அல்லாஹ்வுடைய அடியார்களில் ஒருவருக்கன்றி, வேறெவருக்கும் அது கிடைக்காது. அந்த அடியான் நானாக இருக்க விரும்புகிறேன். எனக்கு எவர் வஸீலாவைத் தருமாறு (அல்லாஹ்விடம்) கேட்கிறாரோ அவருக்கு ஷபாஅத் செய்வது (என்மீது) கடமையாகின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
பாங்குக்குப் பின்னர் ஸலவாத் கூறி முடிந்ததும் மேலே கூறப்பட்ட வஸீலாவைக் கேட்கும் துஆ பின்வருமாறு அமைந்துள்ளது.
‘அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம; வஸ்ஸலாதில் காஇமா; ஆத்தி முஹம்மதனில் வஸீலத வல்-பளீலத வப்அஸ்ஹு மகாமன் மஹ்மூதனில்லதி வஅத்தஹூ’
(பூர்த்தியான இந்த துஆவுக்கும், நிலையான தொழுகைக்கும் உரிய அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வஸீலாவையும், சிறப்பையும் கொடுப்பாயாக! மேலும் வாக்களித்த புகழப்பட்ட இடத்துக்கு அன்னாரை உயர்த்துவாயாக!) ஆதாரம்: புகாரி
பின்வரும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துவதற்கமைவாக நாம் அல்லாஹ்விடம் துஆ கேட்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் ஸலவாத்தையும் சேர்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும்.
‘நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லப்படும்வரை துஆக்கள் அனைத்தும் (அல்லாஹ்விடம் செல்ல முடியாமல்) தடுக்கப்பட்டதாக இருக்கும்’ ஆதாரம் பைஹகீ (ஹஸன்)‘பூமியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வுடைய சில மலக்குகள் இருக்கின்றனர். என்னுடைய உம்மத்துகளில் என்மீது ஸலாம் சொல்லுகின்றவர்களின் ஸலாமை, அவர்கள் என்மீது எத்தி வைக்கின்றனர்’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லுவது முக்கியமான ஒரு ‘இபாதத்’ ஆகும். வெள்ளிக்கிழமை தினங்களில் அதனை அதிகப்படுத்துவது மிக மிக அவசியமானதாகும். இது அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துவதில் மிக மேன்மையான ஒரு வணக்கம். துஆ கேட்கின்றபோது ஸலவாத்தைக் கொண்டு வஸீலா (நெருக்கத்தை)த் தேடுதல் மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஸலவாத் ‘ஸாலிஹான அமலில்’ அடங்குகின்றது.
எனவே ‘அல்லாஹ்வே! முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது நான் சொல்லும் ஸலவாத்தைக் கொண்டு எனது துன்பத்தைத் துடைப்பாயாக! கஷ்டத்தை அகற்றுவாயாக! என்று நாம் ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் கேட்போமாக! அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தினர் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் சொல்வானாக!
இன்ஷா அல்லாஹ் தொடரும்.