526. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது அஸ்ஸலாத்து ஜாமிஆ என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் அமர்ந்தார்கள். அதன் பிறகு கிரகணம் விலகியது. அன்று செய்த ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை’ என்று ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்கள்.
527. ”எந்த மனிதனின் மரணத்திற்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
528. சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) ‘இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூறவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள்.
529. ”எந்த மனிதனின் மரணத்திற்காகவும் வாழ்வுக்காகவோ சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை. அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். எனவே நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள்.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
530. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களின் மகன்) இப்ராஹீம் (ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ எவருடைய வாழ்வுக்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. எனவே நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று கூறினார்கள்.