இறந்தவருக்காக அழுதல்.

531.தம் மகன் மரணத் தருவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களின் மகள் (ஜைனப் (ரலி) நபியவர்களுக்குச் செய்தியனுப்பினார். நபி (ஸல்) அவர்கள், தம் மகளுக்கு ஸலாம் கூறி அனுப்பியதோடு, ‘எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. எனவே பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பாரும்!” என்றும் கூறி அனுப்பினார்கள். அப்போது அவர்களின் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு, கண்டிப்பாக வரவேண்டும் எனக் கூறியனுப்பினார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் ஸஅத் இப்னு உபாதா, முஆத் இப்னு ஜபல், உபை இப்னு கஅபு, ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோரும் மற்றும் பலரும் எழுந்தனர். (வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினார்கள். இற்றுப்போன பழைய தோற் துருத்தி போல் குழந்தையின் மார்பு ஏறி இறங்கியது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீர் சொரிந்தன. ‘இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்கள்) என ஸஅத் (ரலி) கேட்டதற்கு நபி (ஸல்), ‘இது அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள்.

புஹாரி :1284 உஸாமா பின் ஜைது (ரலி)

532.ஸஅத் இப்னு உபாதா (ரலி) நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (ஸஅத் இப்னு உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், ‘என்ன? இறந்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். ‘இல்லை இறைத்தூதர் அவர்களே!’ என்றனர். நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத் தொடங்கினர். பின் நபி (ஸல்) அவர்கள், ‘(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்லை – பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான். நிச்சயமாகக் குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மய்யித் வேதனை செய்யப்படுகிறது” என்று கூறினார்கள்.

புஹாரி :1304 இப்னு உமர் (ரலி)
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.