உலக அழிவும், மறுமை நாளின் தோற்றமும்.
மறுமை நாளின் தோற்றம் இவ்வுலகின் அழிவோடு ஆரம்பமாகும் என அல்குர்ஆனும், ஸுன்னாவும் விளக்குகின்றன. அதாவது அது இன்னொரு உலகின் தோற்றம். மனிதனின் இன்னொரு வாழ்வின் ஆரம்பம். அது பிரபஞ்சத்தின் வித்தியாசமான இன்னொரு தோற்றப்பாடு. மனிதனுக்கு அது வித்தியாசமான இன்னொரு வாழ்வு!
இரு கட்டங்களின் பிறகு மனிதனின் அந்த இரண்டாவது வாழ்வு உருவாகும் என அல்குர்ஆனும், ஸுன்னாவும் விளக்குகின்றன. ஒன்று இவ்வுலகின் அழிவு. மற்றொன்று, மஹ்ஷர் வெளியும் அதன் நிகழ்வுகளும்.
அல்குர்ஆனும், ஸுன்னாவும் அலக அழிவு, மஹ்ஷர் பெருவெளி, அதற்குப் பின்னால் உள்ள சுவர்க்க, நரக வாழ்வுகள் குறித்து முழுமையாகவும், மிக விரிவாகவும் விளக்கவில்லை. அவற்றைப்பற்றி பருமட்டான தோற்றமொன்றை உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு மாத்திரமே அவை விளக்கியுள்ளன.
முதலில் அல்குர்ஆன் உலக அழிவு பற்றி விளக்கும் ஒழுங்கை நோக்குவோம். அல்குர்ஆன் பல இடங்களில் சிதறி இக்கருத்தை விளக்கியுள்ளது. அவற்றில் சில வசனங்களைத் திரட்டி அவற்றினூடாக அக்கருத்தை நோக்குவோம். இங்கு ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவெனில் அல்குர்ஆன் இங்கு விவரிக்கும் அனைத்துக் கருத்துக்களும் விஞ்ஞான ஆய்வுகளுக்கு உடன்பாடாக உள்ளன. மிக அண்மைக்கால கண்டுபிடிப்புகளைக் கூட இப்பகுதியில் அல்குர்ஆன் சொல்கிறது. அந்த வகையில் இன்னொரு உலகம் உருவாகும் என்பதற்கு அல்குர்ஆனின் இந்த விளக்க ஒழுங்கே ஆதாரமாக அமைகிறது எனக் கூற முடியும்.
அல்குர்ஆனின் கீழ்வரும் வசனம் உலக அழிவு பற்றி முழுமையாக விளக்கும் வசனம் எனலாம் :
“அந்நாளில் வானத்தை நாம் எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவது போன்று சுருட்டுவோம். ஆரம்பத்தில் நாம் படைத்தது போன்றே மீட்டுகிறோம். இது நம் பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் அதனை நிறைவேற்றுவோம்” (ஸூரா அன்பியா : 104)
அரபிகள் தமது உடன்படிக்கைகளை தோல்களிலோ வேறு தமக்கு வசதியான பொருட்களிலோ எழுதுவர். பின்னர் அதனை சுருட்டிக் கொள்வர். இதனையே, ‘எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவது போன்று’ என இங்கு அல்குர்ஆன் உதாரணமாகச் சொல்கிறது. ‘பரந்து விரிந்திருக்கும் இப்பிரபஞ்சம் சுருட்டிவிடப்படும் அதுவே இப்பிரபஞ்சத்தின் அழிவாகிறது’ என இங்கு அல்குர்ஆன் கூறுகிறது. இச்செயற்பாடு ஆரம்பத்தில் இப்பிரபஞ்சம் உருவானதை – படைக்கப்பட்டதை ஒத்ததாக உள்ளது எனவும் இங்கு அல்குர்ஆன் கூறுகிறது. அதாவது எவ்வாறு இப்பிரபஞ்சம் உருவாகியதோ அந்த அமைப்பிலேயே அழிந்தும் போகும் என இந்த வசனம் சொல்கிறது.
இப்பின்னணியில் இப்பிரபஞ்சம் ஆரம்பத்தில் உருவான அமைப்பை அல்குர்ஆன் எவ்வாறு கூறுகிறது என்பதை நோக்குவதும் அவசியமாகிறது. அதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது :
“வானங்களும், பூமியும் ஒன்றாக இருந்தன. அவற்றை நாம் பிரித்தமைத்தோம் என்பதனை நிராகரிப்பாளர்கள் அவதானிக்கவில்லையா?” (ஸூரா அன்பியா : 30)
இவ்வசனம் கூறும் கருத்தை நவீன அறிவியல் விளக்குகிறது. இப்பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு கூறப்படும் கொள்கைகளில் மிகவும் செல்வாக்குப் பெற்ற கொள்கை – THE BIG BANG THEORY – “பெரு வெடிப்புக் கொள்கை” என்பதாகும். அதாவது இப்பிரபஞ்சத்தை உருவாக்கிய பொருட்கள் ஆரம்பத்தில் ஒரு கோளாய் இருந்து, அது மிகப்பெரிய சக்தியும், உயர்ந்த அடர்த்தியும் கொண்டதாய் இருந்தது. அது பின்னர் பெரிய வெடிப்புக்குட்பட்டது. அந்த வெடிப்பிலிருந்து சிதறியே இப்பிரபஞ்சம் உருவாகியது.
அப்பெரிய வெடிப்பின் விளைவாக சிதறிய பொருட்கள் விலகி, விரிவுபட்டு ஓடத்துவங்கியது. அவ்வாறு அன்றிலிருந்து தொடர்ந்து இப்பிரபஞ்சம் இன்றுவரை விரிவுபட்டுக் கொண்டே செல்கிறது. வானவியல் ஆய்வாளர்கள் 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரபஞ்சம் விரிவுபட்டுச் செல்கிறது என்ற இந்த உண்மையை கண்டு பிடித்தனர். இந்த உண்மையை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது :
“வானத்தை நாம் பலத்தின் மூலம் நிர்மாணித்தோம். நிச்சயமாக நாம் அதனை விரிவு படுத்திக் கொண்டே இருக்கிறோம்” (ஸூரா தாரியாத் : 47)
இவ்வாறு விரிவுபட்டுச் செல்லும் பிரபஞ்சம் முடிவின்றி விரிவுபட்டுச் செல்ல முடியாது. அப்பெரிய வெடிப்பின் போது விரிவுபடத் துவங்கிய வேகத்தை விட இப்போது விரிவு படும் வேகம் குறைந்திருக்கிறது என்பதை அவதானிக்கும் விஞ்ஞானிகள் வெடிப்பின் காரணமாக உருவாகிய வெளியே தள்ளி விடும் சக்தியும், ஈர்ப்புச் சக்தியால் உள்ளே இழுக்கும் சக்தியும் சமப்படும் காலமொன்று வரும். அந்நிலையில் ஈர்ப்புச் சக்தி பிரபஞ்சப் பொருட்களை உள்ளே இழுக்கத் துவங்கும், ஒன்று சேர்க்கத் துவங்கும். அவ்வாறு ஒன்றிணைந்து ஆரம்பத்தில் போன்றே முழுப்பிரபஞ்சமும் மிகப்பெரிய அடர்த்தியும் அதி உயர்ந்த சக்தியும் படைத்த ஒரு தனிக் கோள் வடிவுக்கு வரும். இச்செயல்பாட்டை விஞ்ஞானிகள் -THE BIG CRUNCH THEORY- என்கின்றனர். இக்கருத்தையே ஆரம்பத்தில் அல்குர்ஆன், “எழுதப்பட்ட ஏட்டை சுருட்டுவது போன்று வானத்தை சுருட்டுவோம்” எனக் கூறியது.
இவ்வாறு அழியும் பிரபஞ்சம் மீண்டும் புதிய ஒழுங்கில் உருவாகும். அவ்வாறு புதிய ஒழுங்கில் வருவதே மறு உலக வாழ்வாகும். இதனை அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது :
“பூமியும், வானங்களும் இந்நாளில் வேறு அமைப்புக்கு மாற்றப்பட்டு விடும்” (ஸூரா இப்றாஹீம் : 48)
இதனை விளக்குவது மிக இலகுவானது. முழுப்பிரபஞ்சமும் சுருங்கி, அதி உயர்ந்த சக்தி வாய்ந்த அடர்த்தி மிக்க ஒரு கோள் வடிவில் அமைந்து, பின்னர் அதுவும் பெரிய வெடிப்புக்கு உட்படும். அதனூடாக இரண்டாவது பிரபஞ்ச ஒழுங்கு உருவாக முடியும். இக்கருத்தையே ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட வசனத்தின் இறுதிப்பகுதி சொல்கிறது.
“ஆரம்பத்தில் நாம் படைத்தது போன்று மீட்டுகிறோம்”
இந்த வகையில் அல்குர்ஆன் பிரபஞ்ச அழிவுக் குறித்தும், மறு உலகத் தோற்றம் குறித்தும் மொத்தமாக விளக்கிய வசனம் நவீன அறிவியலோடு ஒத்துப் போவதைக் காண்கிறோம். இப்பிரபஞ்சம் அழிவதும், மீண்டும் அது உருவாவதும் விஞ்ஞான பூர்வமானதுவே என்பதையும் இதனூடாகப் புரிய முடிகிறது.
இப்பிரபஞ்சம் எவ்வாறு அழியும், மறுமை வாழ்வு என்ற புதிய உலகம் எவ்வாறு உருவாகும் என்பதன் பூரண விளக்கம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியதாகும். எனினும் அல்குர்ஆன் தரும் சில வசனங்கள் ஊடாக அந்த உண்மையின் ஒரு பகுதியை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்ற விஷயத்தை இங்கு விளக்க முற்பட்டோம்.
பிரபஞ்ச அழிவுக் குறித்து விளக்கும் இன்னும் சில அல்குர்ஆன் வசனங்களையும் கீழே தருகிறோம் :
“வானம் பிளந்து எண்ணையை ஒத்த ரோஜா போன்று ஆகிவிடும் போது” (ஸூரா ரஹ்மான் : 37)
வானம் பிளந்து போகும் அதாவது வானத்து நட்சத்திரங்கள் வெடித்துப் பிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் ரோஜாப்பூ போன்றிருக்கும். அந்த ரோஜாப்பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் எண்பது அல்லாஹ்வே அறிந்த விஷயமாகும். எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின் மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம் சொல்வதே போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன. விஞ்ஞானிகள் எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின் அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.
அல்குர்ஆனின் இன்னொரு வசனத்தையும் உதாரணமாகத் தருகிறோம்:
“சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும்போது” (ஸூரா கியாமா : 9)
சூரியனும், சந்திரனும் எப்போது, எவ்வாறு ஒன்றிணையும் என்பது அல்லாஹ் மாத்திரமே அறிந்த விஷயமாகும். எனினும் இந்த உண்மையைப் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் அல்லாஹ் இப்பிரபஞ்சத்தை அமைத்துள்ளான். சூரியனும், சந்திரனும் ஒன்றிணைந்து விடும் என்பது தற்பொழுது ஒரு விஞ்ஞான உண்மையாக உள்ளது. சந்திரன் பூமியை விட்டு வருடத்திற்கு மூன்று சென்டிமீட்டர் அளவு தூரமாகிச் செல்கிறது என்பதனை விஞ்ஞானிகள் மிக நுண்ணிய அளவுகோள்களைப் பயன்படுத்தி கண்டு பிடித்துள்ளனர். இவ்வாறு சந்திரன் பூமியை விட்டுத் தொடர்ந்து விலகிச் சென்றால் சூரியனின் ஈர்ப்பு சக்தியின் எல்லையினுள் ஒருநாள் வரும். அப்போது சூரியன் அதனை ஈர்த்து விழுங்கி விடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது விஞ்ஞானிகள் அதி நுணுக்கமான விண்வெளி ஆய்வுகள் ஊடாகக் கண்ட உண்மையாகும். உலக அழிவின் ஆரம்ப நிகழ்வு இதுவாக இருக்க முடியும். அல்குர்ஆன் இந்த உண்மையை இவ்வாறு சொல்வது உண்மையிலேயே அதன் அற்புதத் தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
(இங்கு விளக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் அனைத்தும் கலாநிதி ஜக்லூல் அந்நஜ்ஜார் அவர்களின் ‘அல்குர்ஆனின் அறிவியல் அற்புதங்களைக் காட்டும் சில வசனங்கள் – பாகம் (1)’ என்ற நூலிலிருந்து பெறப்பட்டன.)
அல்குர்ஆனின் இன்னும் பல வசனங்கள் பகுத்தறிவு ரீதியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும் உலக அழிவை விளக்குவதை அவதானிக்க முடியும். இந்நிலையில் மறுமை நாள் தோன்ற முடியும் என்பதற்கான ஆதாரங்கள் ஒரு புறமிருக்க, உலக அழிவு மறுமையின் தோற்றம் பற்றி அல்குர்ஆன் விளக்கும் ஒழுங்கு அவ்வுலக வாழ்வை மனிதன் நம்புமாறு தூண்டுகின்றன.
அல்குர்ஆன் உலக அழிவின் பயங்கரத்தைப் பல ஸூராக்களில் விளக்குகிறது. மனிதன் இவ்வுலகு நிலையானது என்ற மயக்கத்தில் இருந்து விடக்கூடாது என்பதற்காக மனித உள்ளத்தை உலுப்பி விடும் வகையில் பிரபஞ்ச அழிவை அல்குர்ஆன் காட்சிப் படுத்துகிறது. குறிப்பாக ஜுஸ்உ அம்ம(30 வது பாகம்)வில் இதனை சிறப்பாக அவதானிக்க முடியும். அல்குர்ஆனின் வசனங்களின் ஊடாக அவற்றை மனதிற் கொள்ளும் போதுதான் அது உரிய பயனைத்தரும் என்றாலும் ஓரிரு வசனங்களை மட்டும் மொழிபெயர்ப்பின் ஊடாக இங்கு தந்து இக்கருத்தை விளக்க முனைகிறோம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘யார் மறுமை நாளை கண்கூடாகப் பார்க்க விரும்புகிறாரோ அவர், இதஷ்ஷம்ஸ் குவ்விரத், இதஸ் ஸமாவுன் பதரத், இதஸ் ஸமாவுன் ஷக்கத், என்ற ஸூராக்களை ஓதட்டும்’ (ஆதார நூற்கள் : முஸ்னத் அஹ்மத், ஸுனன் திர்மிதி மற்றும் தப்ஸீர் இப்னு கஸீரிலிருந்து – 4ம் பாகம் – பக்கம் – 610 – 611)
இந்த வகையில் ஸூரா தக்வீரின் வசனங்களின் மொழியாக்கத்தைக் கீழே தருகிறோம் :
1. சூரியன் சுருண்டு விடும் போது…
2. நட்சத்திரங்கள் ஒளி மங்கி விடும் போது…
3. மலைகள் பெயர்க்கப்பட்டு தூள் தூளாக சென்று விடும் போது…
4. பத்து மாத நிறை கர்ப்ப ஒட்டகைகள் கவனிப்பாரற்று விடப்படும் போது…
5. வன விலங்குகள் ஒன்று திரண்டு விடும் போது…
6. கடல்கள் எரித்து விடப்படும் போது…
7. ஆன்மாக்கள் ஒன்றிணைக்கப்படும் போது…
8,9. உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தைகள் நீ எப்பாவத்திற்காகக் கொலை செய்யப்பட்டாய் என விசாரிக்கப்படும் போது…
10. செயல் பதிவேடுகள் விரிக்கப்படும் போது…
11. வானத்திரை அகற்றப்படும் போது…
12. நரகம் எரிக்கப்படும் போது…
13. சுவர்க்கம் அருகாமையில் கொண்டு வரப்படும் போது…
14. அப்போது ஒவ்வொரு மனிதனும் தான் என்ன கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்துக் கொள்வான்.
பல இலட்சக்கணக்கான மைல்கள் தூரம் எட்டும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுருங்கிப் போகும். சூரியன் ஒளியிழந்து விடும். ஏனைய நட்சத்திரங்களும் ஒளியிழக்கும். அவற்றின் வாழ்வின் இறுதிக் காலப்பிரிவுக்கு வந்து விடும். எனவே, அதி பயங்கர இருள் எங்கும் வியாபிக்கும்.
சூரியனின் பிடிமானம் அற்றுப்போகும். கோள்கள் மோதி நொறுங்கும். அதன் ஆரம்பமாக பூமியின் மீதுள்ள மலைகள் வேரோடு பெயர்ந்து மோதிச் சிதறி தூள் தூளாகிப் பறக்கும்.
கடல்கள் எரியும், எமது கண்களை மறைத்திருந்த வானத்தின் அந்த நீலத்திரை அற்றுப் போகும். அப்போது நரகம் அதன் பயங்கரத் தீ நாக்குகளோடு எம் கண்களுக்குத் தெரியும். சுவர்க்கமும் அதன் கவர்ச்சிகளோடு அருகில் நிற்கும்.
இதுவே அந்த மறுமை நாளின் தோற்றம்! அப்போது ஜீவராசிகளின் நிலை எவ்வாறிருக்கும்? மறுமை நாளின் ஆரம்ப நிலைகளிலேயே பயந்து போகும் வன விலங்குகள் தம்மையறியாமலேயே ஒன்று திரண்டு பிரமித்துப் போய், செய்வதறியாது நிற்கும். மனிதன் தன்னிடமுள்ள மிகப்பெறுமதியான பொருட்களைக் கூட கவனிக்க முற்படாது திகைத்துப் பிரமித்து செய்வதென்னவென்று தெரியாது நிற்பான். இவ்வாறு தான் நிலைத்து வாழ்ந்த உலகம் தன் கண் முன்னாலேயே அழிவுறுவதை அவன் காண்பான்.
பின்னர் அவன் மீண்டும் தன் உடம்போடு ஒன்றிணைந்து எழுவான். இப்போது புதிய உலகமொன்று அவன் கண் முன்பு விரியும். வானம் என்ற திரை அங்கிருக்காது. நரகம் அதி பயங்கரமாக அவன் முன் எரியும். சுவர்க்கம் தன் கவர்ச்சிகளோடு அவன் முன் நிற்கும். செயல் பதிவேடுகள் பகிரப்படும். விசாரணைகள் ஆரம்பமாகும். உயிருடன் புதைக்கப்பட்ட அக்குழந்தைக்கு அழைக்கப்பட்ட அநியாயம் முதல் விசாரணைக்கு வரும். இப்பயங்கர சூழலில் அகப்பட்டுக் கொள்ளும் மனிதன் இந்தப் புதிய உலகுக்கு நான் என்ன எடுத்து வந்தேன் என்பதை அப்போது உணர்வான், அறிவான்…!
இவ்வாறு அல்குர்ஆன் உலக அழிவின் பயங்கரத் தோற்றத்தை பல ஸூராக்களிலும் சிதறிச் சொல்லியிருக்கிறது. முழு உலக அழிவையும் ஒவ்வொன்றாக முழுமையாக விளக்குவதை அல்குர்ஆன் நோக்கமாகக் கொள்ளவில்லை. அந்த நிகழ்ச்சியின் உண்மையை உணர்த்துவதும் அதன் பயங்கரத்தைக் காட்சிபடுத்தி மனிதனை எச்சரிப்பதுமே அல்குர்ஆனின் நோக்கம். எனவே, உலக அழிவின் பல்வேறு நிகழ்வுகளைத் துண்டு துண்டாக உடைத்துப் பல ஸூராக்களிலும் சிதறி அல்குர்ஆன் விளக்கியுள்ளது.
மறுமை நாள் (Day Of Resurrection)
உஸ்தாத் எம்.ஏ.எம் மன்ஸூர் நழீமீ B.A. (Hon) Cey.