1882. உஸாமா இப்னு ஸைத் (ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான் (ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் உங்கள் எதிரில் உங்களுக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒருவர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதானால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், நான் நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லக் கேட்டேன்” என்றார்கள். மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்துவிழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்” என்று கூறுவார்.
1883. என் சமுதாயத்தாரில் (பாவம் செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர்; (தம் பாவங்களைத்) தாமே பகிரங்கப்படுத்துகிறவர்களைத் தவிர ஒருவர் இரவில் ஒரு (பாவச்) செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனுடைய பாவத்தை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்து விட்டிருக்க, ‘இன்னாரே! நேற்றிரவு நான் (பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன்” என்று அவனே கூறுவது பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில் (பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்து விட்டான். (ஆனால்,) இறைவன் மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.