1056. (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) கையில் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்களும் ‘அதை (எவருக்கும்) விற்கக் கூடாது அன்பளிப்பாக வழங்கக் கூடாது வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது’ என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.)
வக்ஃப் செய்வது பற்றி..
மரணித்தவருக்காக செய்யும் தர்மங்கள் பலனளிப்பது பற்றி..
மொத்த சொத்தில் முன்றில் ஒரு பங்கு வசிய்யத் செய்
1053. இறுதி ஹஜ்ஜின்போது கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த என்னை விசாரிக்க வரும் வழக்கமுடையவர்களாக நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நான் மரணத் தருவாயை அடைந்து விட்டேன். நான் செல்வந்தன்; என்னுடைய ஒரு மகளைத் தவிர வேறு வாரிசுக்காரர்களில்லை: எனவே, என்னுடைய பொருளில் மூன்றில் இரண்டு பங்கை நான் தர்மம் செய்து விடட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்” என்றார்கள். பின்னர் நான் ‘பாதியைக் கொடுக்கட்டுமா?’ எனக் கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘வேண்டாம்; மூன்றில் ஒரு பங்கை வேண்டுமானால் தர்மம் செய்துவிடும். அதுவும் அதிகம்தான்; ஏனெனில், உம்முடைய வாரிசுக்காரர்களை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாகவிட்டுச் செல்வதைவிட பிறரிடம் தேவையற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. இறை உவப்பையே நோக்கமாகக் கொண்டு நீர் செய்கிற எந்த ஒரு செலவானாலும் சரி. அதற்காக உமக்கு நன்மை கொடுக்கப்படும்; நீர் உம் மனைவியின் வாயில் இடுகிற உணவுக் கவளத்திற்கும் கூட உமக்கு நண்மையுண்டு” என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! (என்னுடைய தோழர்களெல்லாம் மதீனாவுக்குச் செல்வார்கள்) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின் தங்கியவனாக ஆகிவிடுவேனே!’ எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நீர் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உம்முடைய அந்தஸ்தும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்’ எனக் கூறிவிட்டு, ‘உம்மை வைத்துச் சில கூட்டத்தினர் நன்மையடைவதற்காகவும் மற்ற சிலர் துன்பம் அடைவதற்காகவும் நீர் இங்கேயே தங்க வைக்கப்படலாம்” என்று கூறிவிட்டு, ‘யாஅல்லாஹ்! என்னுடைய தோழர்களின் ஹிஜ்ரத்தைப் பூரணமாக்குவாயாக! அவர்களைத் தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்திய இணைவைக்கும் மார்க்கத்திற்கே) திரும்பிச் செல்லும்படி செய்துவிடாதே.” எனப் பிரார்த்தித்தார்கள். நோயாளியிருந்த ஸஅத் இப்னு கவ்லா (ரலி) மக்காவிலேயே இறந்துவிட்டதற்காக ‘பாவம் ஸஃது இப்னு கவ்லா (அவர் நினைத்து நடக்கவில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் இரங்கல் தெரிவித்தார்கள்.
மரண சாசனம்
1052. (மரண சாசனம் செய்ய) ஏதேனும் ஒரு பொருளைப் பெற்றிருக்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் அவர் தன்னுடைய மரண சாசனத்தை எழுதித் தன்னிடம் வைத்திருக்காமல் இரண்டு இரவுகள் கூட கழிப்பதற்கு அனுமதியில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆயுட்கால அன்பளிப்பு பற்றி….
1050. உம்ராவாக (ஆயுட்கால அன்பளிப்பாக) வழங்கப்பட்ட பொருளைக் குறித்து நபி (ஸல்) அவர்கள், ‘அது எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியது” என்று தீர்ப்பளித்தார்கள்.
1051. ஆயுட்கால அன்பளிப்பு அனுமதிக்கப்பட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தன் பிள்ளைகளிடம் பாகுபாடு காட்டலாகாது.
1048. என்னை என் தந்தையர் (பஷீர் பின் ஸஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கிறேன்.என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
1049. நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாய் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக்கொள்ளமாட்டேன், என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக,எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதேப்போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்துச் செய்தார்கள்.
அன்பளிப்பைத் திரும்ப பெறுபவன் நிலை.
1047. தன் அன்பளிப்பைத் திரும்பப்பெறுபவன் வாந்தியெடுத்தப் பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மறுமையில் சபிக்கப்பட்ட இரு சப்தங்கள் யாவை?
கேள்வி எண்: 57. எந்த ‘இரு சப்தங்கள் மறுமையில் சபிக்கப்பட்டதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்? Continue reading
அன்பளிப்புச் செய்த பொருளைத் திரும்ப வாங்காதே.
1045. இறைவழியில் சவாரி செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கிவிட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதை வாங்காதீர்! உம்முடைய தர்மத்தை நீர் திரும்பப் பெறாதீர்! அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான்” என்றார்கள்.
1046. உமர் இப்னு கத்தாப் (ரலி) ஒருவரை இறைவழியில் (போர் புரிய) ஒரு குதிரையின் மீதேற்றி அனுப்பி வைத்தார்கள். பிறகு, அந்தக் குதிரை சந்தையில் விற்கப்படுவதைக் கண்டு அதை வாங்க விரும்பி (அது பற்றி) அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்” என்று கூறிவிட்டார்கள்.
மரணித்தவர் விட்டுச் செல்லும் சொத்து வாரிசுகளுக்கே.
1044. கடன்பட்டு இறந்தவர் நபி (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார்; அப்போது ‘இவர் கடனை அடைக்க ஏதேனும்விட்டுச் சென்றிருக்கிறாரா?’ என்று கேட்பார்கள். ‘கடனை அடைப்பதற்குப் போதுமானதைவிட்டுச் சென்றிருக்கிறார்’ என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால் ‘நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!” என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஏராளமான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்), ‘இறைநம்பிக்கையாளர்களைப் பொறுத்தவரை அவர்களின் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! இறைநம்பிக்கையாளர்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும்! யாரேனும் செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும்!” என்று கூறினார்கள்.