வக்ஃப் செய்வது பற்றி..

1056. (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) கையில் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றிருந்தார்கள். அதன் விஷயத்தில் ஆலோசனை பெறுவதற்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நான் கைபரில் ஒரு நிலத்தைப் பெற்றுள்ளேன். அதைவிடச் சிறந்த ஒரு செல்வத்தை (இதுவரை) நான் அடைந்ததேயில்லை. எனவே, அதை நான் என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் அந்த நிலத்தை நீங்களே வைத்துக் கொண்டு அதன் விளைச்சலை தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்களும் ‘அதை (எவருக்கும்) விற்கக் கூடாது அன்பளிப்பாக வழங்கக் கூடாது வாரிசுச் சொத்தாகவும் எவருக்கும் அதை வழங்கக் கூடாது’ என்ற நிபந்தனைகளை விதித்து அறக்கொடையாக (வக்ஃபாக) வழங்கினார்கள். அ(தன் வருமானத்)தை ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், அல்லாஹ்வின் பாதையிலும், வழிப் போக்கர்களுக்கும், விருந்தினர்களுக்கும் தர்மம் செய்தார்கள். அதைப் பராமரிக்கப் பொறுப்பேற்றிருப்பவர், அதிலிருந்து நியாயமான அளவில் உண்பதிலும் (அதிலிருந்து எடுத்துத் தனக்கென்று) சேகரித்து வைக்காமல், படாடோபமாகச் செலவிடாமல் பிறருக்கு உணவளிப்பதிலும் குற்றமில்லை (என்றும் எழுதி வைத்தார்கள்.)

புஹாரி :2737 இப்னு உமர் (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , . Bookmark the permalink.