1045. இறைவழியில் சவாரி செய்வதற்காக நான் ஒருவருக்கு குதிரையொன்றை (தர்மமாக)க் கொடுத்தேன். ஆனால், அவர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) வீணாக்கிவிட்டார். எனவே நான் அதை விலைக்கு வாங்க நாடினேன். இன்னும் அவர் மிகக் குறைந்த பணத்திற்கே விற்று விடுவார் என்றும் எண்ணினேன். எனவே, இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அதை வாங்காதீர்! உம்முடைய தர்மத்தை நீர் திரும்பப் பெறாதீர்! அவன் அதை ஒரு திர்ஹத்திற்குத் தந்தாலும் சரியே. ஏனெனில் தர்மத்தைத் திரும்பப் பெறுபவன், தான் எடுத்த வாந்தியை உண்பவனைப் போன்றவனாவான்” என்றார்கள்.
1046. உமர் இப்னு கத்தாப் (ரலி) ஒருவரை இறைவழியில் (போர் புரிய) ஒரு குதிரையின் மீதேற்றி அனுப்பி வைத்தார்கள். பிறகு, அந்தக் குதிரை சந்தையில் விற்கப்படுவதைக் கண்டு அதை வாங்க விரும்பி (அது பற்றி) அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அதை வாங்காதீர்கள். உங்கள் தருமத்தைத் திரும்பப் பெறாதீர்கள்” என்று கூறிவிட்டார்கள்.