நீ செய்த நன்மை தீமை உனக்கே!

35:15. மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.

35:16. அவன் நாடினால், உங்களைப் போக்கி விட்டு, (வேறொரு) புதிய படைப்பைக் கொண்டு வருவான்.

35:17. இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.

35:18. (மறுமை – நாளில் தன்) சுமையைச் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அழைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் – அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்துக் கொள்ளப்படாது; எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்ல வேண்டியுள்ளது.

35:19. குருடனும், பார்வையுடையவனும் சமமாகமாட்டார்கள்.

35;20. (அவ்வாறே) இருளும், ஒளியும் (சமமாகா).

35:21. (அவ்வாறே) நிழலும், வெயிலும் (சமமாகா).

35:22. அன்றியும், உயிருள்ளவர்களும், இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களைச் செவியேற்கும்படி செய்கிறான், கப்ருகளில் (மண்ணறைகளில்) உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.

35:23. நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.

35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.

35:25. இன்னும் அவர்கள் உம்மை பொய்பித்தார்களானால் (விசனப்படாதீர்), இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே திட்டமாக பொய்ப்பித்தனர். அவர்களுடைய தூதர்கள், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடனும், ஆகமங்களுடனும், ஒளி வீசும் வேதத்துடனும் வந்திருந்தார்கள்.

35:26. பின்னர், நிராகரித்த அவர்களை நான் பிடித்துக் கொண்டேன். ஆகவே (அவர்களுக்குரிய) எனது வேதனை எவ்வாறிருந்தது.

அல் குர்ஆன்: அல் ஃபா(த்)திர் (படைப்பவன்).

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on நீ செய்த நன்மை தீமை உனக்கே!

மூல நூலாசிரியரின் வரலாறு – ஆசிரியர் முகவுரை!

இந்நூலின் மூல ஆசிரியரான ஷைகுல் இஸ்லாம் இமாம் இப்னு தைமிய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு

மாபெரும் மார்க்க மேதையும் சீர்திருத்தவாதியுமான அஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா என்பவர் ஹிஜ்ரி 661-ஆண்டு ரபீவுல் அவ்வல் 10(கி.பி 1263 ஜனவரி 22 ஆம் நாள்)சிரியாவில் ஹர்ரான் என்ற ஊரில் பிறந்தார். தந்தை ஷிஹாபுத்தீன் அப்துல் ஹலீம் இப்னு தைமிய்யா திமிஷ்கிலுள்ள (டமாஸ்கஸ்) ஜாமி வுல் உமவீ மஸ்ஜித் இமாமாகவும், தாருல் ஹதீதுஸ்-ஸகரிய்யா பேராசிரியராகவும் பணியாற்றி வந்தார். இவரின் பாட்டனார் அபுல் பரகாத் மஜ்துத்தீன அப்துஸ்ஸலாம் இப்னு தைமிய்யா (ஹி-652) ஹன்பலி மத்ஹபின் சிறந்த மார்க்க மேதையயாகவும் விளங்கினார். ஆறு ஆண்டுகள் பக்தாதில் கல்விச்சேவை புரிந்த இவர் எழுதிய ஹதீதுத்தொகுப்பாகிய அல்மந்திகிய்யு மின் அஹாதீதுல் அஹ்காம் என்ற நூலும், அல்-வஸிய்யத்துல் ஜாமிஆவும் இவரின் புகழ் வாய்ந்த நூல்களாகும்

இளமை

இப்னு தைமிய்யா சிறு வயதிலேயே குர்ஆனை மனனமிட்டுவிட்டார். இமாம் ஸீபவைஹின் இலக்கண நூலில் தேர்ச்சி பெற்று இலக்கியம், அரபி வடிவெழுத்து, கணிதம் முதலானவற்றில் சிறந்து விளங்கினார். குர்ஆன், ஹதீஸ், பிக்ஹ் ஆகிய கலைகளை தமது தந்தையாரிடமிருந்து கற்றுத்தேறினார். சிறு வயதிலேயே அபார நினைவாற்றலைப் பெற்றிருப்பதை அறிந்த ஓர் அறிஞர் இவரது பலகையில் 13 நபிமொழிகளை எழுதி அதனை ஒரு தடவை படித்ததும் மனனமாகச் சொல்லுமாறு கேட்டார். அடுத்த கணமே ஒப்புவித்த இவரிடம் மீண்டும் ஒருமுறை அதே போல் வேறு சில நபிமொழிகளை எழுதிச் சோதித்தார். முன்புபொலவே இதிலும் சிறுவர் வெற்றியடைந்ததும் இச்சிறுவருக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பின் இவர் உலகில் ஒப்பாரும் மிக்காருமின்றி சிறந்த அறிஞராக விளங்குவார் என்று முன்னறிவுப்புச் செய்தார். Continue reading

Posted in வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | Comments Off on மூல நூலாசிரியரின் வரலாறு – ஆசிரியர் முகவுரை!

அவரவர் தவணைகளை நோக்கி!

35:38. நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைந்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.

35:39. அவன்தான் உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; எனவே எவன் நிராகரித்து விடுகிறானோ அந்நிராகரிப்பு(டைய கேடு) அவனுக்கேயாகும்; காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு அவர்களுடைய இறைவனிடத்தில் கோபத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை; அன்றியும் காஃபிர்களுக்கு அவர்களுடைய நிராகரிப்பு நஷ்டத்தையன்றி (வேறு எதனையும்) அதிகப்படுத்துவதில்லை.

35:40. “அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்தித்து அழைக்கும் உங்கள் இணை தெய்வங்களை நீங்கள் கவனித்தீர்களா? ‘அவர்கள் பூமியில் எதைப் படைத்திருக்கின்றனர்?’ என்பதை எனக்குக் காண்பியுங்கள். அல்லது வானங்களின் (படைப்பில்) அவர்களுக்கு ஏதேனும் கூட்டுண்டா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லது தெளிவான ஆதாரத்தை அளிக்கக் கூடிய வேதத்தை நாம் அவர்களுக்கு அளித்திருக்கிறோமா? எதுவுமில்லை! அநியாயக்காரர்கள், அவர்களில் சிலர் சிலருக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றேயன்றி வேறில்லை” (என்று நபியே! நீர் கூறும்).

35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகி விடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்த முடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்பவன்.

35:42. அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வருவாராயின் நிச்சயமாகத் தாங்கள் மற்றெந்த ஒரு சமுதாயத்தையும் விட மிக நேரான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அவர்கள் அல்லாஹ்வின் மீது பலமான பிரமாணங்களைக் கொண்டு சத்தியம் செய்தார்கள்; ஆயினும் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தபோது, (அது) அவர்களுக்கு வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை.

35:43. (அன்றியும்) அவர்கள் பெருமை அடித்தவர்களாக பூமியில் தீமைகளைச் செய்யவும் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால் தீமைகள் செய்வதற்கான சூழ்ச்சி அ(ச்சூழ்ச்சிசெய்த)வர்களைத் தவிர வேறெவரையும் சூழ்ந்து கொள்ளாது; இவர்களுக்கு முன் சென்றோர் (இறைவனுக்கு மாறு செய்து தண்டனை பெற்ற) வழியைத்தான் இவர்களும் எதிர்பார்க்கின்றனரா? அப்படியாயின் அல்லாஹ்வின் அவ்வழியில் (அதாவது, பாவம் செய்தோர் தண்டனை பெறுவதில்) யாதொரு மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்; அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர்.

35:44. இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? மேலும் அவர்கள் வலிமையில் இவர்களைவிட மிக்கவர்களாக இருந்தனர்; வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதுவும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க முடியாது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவன்; பேராற்றலுடையவன்.

35:45. மனிதர்களை அவர்கள் சம்பாதித்த(தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களை (ப்பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான்.

அல் குர்ஆன்: அல் பா(த்)திர் (படைப்பவன்).

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on அவரவர் தவணைகளை நோக்கி!

பாடம் – 15

ஷிர்க்கை நோக்கி இட்டுச்செல்லும் எல்லா வழிகளையும் முஸ்தபா (ஸல்) தடுத்தார்கள்.

‘(விசுவாசிகளே!) உங்களிடமிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார்; (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும்; உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர்; விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர்; மிகக் கிருபையுடையவர். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மை ஏற்காது) விலகிக் கொண்டால் (அவர்களிடம்) நீர் கூறுவீராக, அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயனில்லை, அவன் மீது என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக நம்பிக்கை வைத்து உள்ளேன், அவனே மகத்தான அர்ஷின் அதிபதி (9:128-129)

‘உங்கள் வீடுகளை மையத் அடக்கும் தலமாக ஆக்க வேண்டாம். என்னுடைய அடக்கத்தலத்தை கொண்டாட்டம் நடத்தும் இடமாக ஆக்க வேண்டாம். என்மீது சலாம் கூறுங்கள். நீங்கள் எங்கிருந்து எனக்கு சலாம் கூறினாலும் அவை எனக்கு அறிவிக்கப்படும்.’ என முஹம்மது நபி (ஸல்) கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: நேர்மையான அறிவிப்பாளர்கள் மூலம் அபுதாவுத்.

நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்திற்குச் சென்று அங்கு துஆ செய்யும் ஒருவரைக் கண்ட அலி பின் ஹுசைன் அவரை அக்காரியத்திலிருந்து தடுத்து அவருக்கு பின்வருமாறு கூறினார். ‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் பாட்டனாரும் (அலி ரலி), அவரிடமிருந்து என் தந்தையும் கேட்டு எனக்கு அறிவித்த ஹதீஸ் ஒன்றை கூறவா? ‘என் அடக்கத்தலத்தை கொண்டாட்டம் நடத்து இடமாக ஆக்காதீர்கள். அதே போன்று உங்கள் வீடுகளையும் மையத் அடக்கும் இடமாக ஆக்காதீர்கள். என் மீது சலாம் கூறுங்கள். நீங்கள் எங்கிருந்து சலாம் கூறினும் அவை எனக்கு அறிவிக்கப்படும்.’ ஆதாரம்: இமாம் அல் மக்தஸ்ஸியின் அல் முஃஹ்தரா என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்.

* ஷிர்க்கின் எல்லையிலிருந்து தன் உம்மாக்களை கூடியவரை தூர விலக்கி வைப்பதற்கு நபி (ஸல்) இயன்ற அளவு முயற்சி செய்தார்கள்.

* எங்களுடைய நல்வாழ்வுக்காகவும், வெற்றிக்காகவும் நபி (ஸல்) காட்டிய அக்கறையும், எங்கள் மீதுள்ள கருணையும்.

* கப்ரு ஸ்தானங்களை தரிசித்தல் நற்கருமங்களில் ஒன்றாக இருப்பினும் தன்னுடைய அடக்க ஸ்தலத்தை குறிப்பிட்ட முறையில் தரிசிப்பதை நபி (ஸல்) முற்றாகத் தடுத்தார்கள்.

* கப்ரு ஸ்தானங்களை அளவுக்கு மீறி தரிசிப்பதையும் நபி (ஸல்) தடுத்தார்கள்.

* வீடுகளில் நஃபிலான வணக்கங்களை செய்யுமாறு நபி (ஸல்) மக்களுக்கு ஊக்கம் கொடுத்தார்கள்.

* மையத் அடக்கும் ஸ்தானங்களில் வணக்கம் புரியக் கூடாது என்ற தடை ஸஹாபாக்களும் அறிந்த விஷயமாகும்.

* நபி (ஸல்) அவர்கள் மீது ஒருவர் எங்கிருந்து சலாம் கூறினாலும் அது அவர்களை சென்றடையும் என்ற விளக்கம். சிலருடைய பிழையான கருத்தின்படி நபி (ஸல்) அவர்களின் கப்ரின் அருகில் நெருங்கி நின்று சலாம் கூற வேண்டிய அவசியமில்லை என்பது தெளிவாகிறது.

* ‘அல்-பர்ஸஹ்’ என்ற நிலையில் இருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கு உம்மத்துக்கள் கூறும் சலவாத்தும் சலாமும் தெரிவிக்கப்படும்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

பாடம் முடிவுற்றது.

Posted in முக்கிய பாடங்கள் | Comments Off on பாடம் – 15

சிபாரிசு பலனளிக்கும் நாள்!

2:48. “நீங்கள் மறுமை நாளை அஞ்சி நடந்துக் கொள்ளுங்கள்! அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்குப் பலனளிக்காது. எந்தவொரு ஆத்மாவும் மற்றவொரு ஆத்மாவுக்காகப் பரிந்து பேசுவதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அதற்காக யாதொரு பரிகாரத்தையும் (ஈடாக) பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்”.

2:123. “எந்த நாளில் ஒரு ஆத்மா மற்றவொரு ஆத்மாவுக்கு எந்தப் பலனையும் அளிக்காதோ அந்நாளைப் பயந்துக் கொள்ளுங்கள். அந்த ஆத்மாவிடமிருந்து எந்தவொரு பரிகாரமும் அங்கீகரிக்கப்பட மாட்டாது. அதற்காக எவர் பரிந்துரைத்தாலும் பலனில்லை. அவர்கள் (எவராலும் எவ்வித) உதவியும் பெற மாட்டார்கள்”.

40:18. “அநீதி செய்பவர்களுக்கு உதவியாளர்கள் அந்நாளில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். அனுமதி பெற்ற சிபாரிசுகாரர்களும் இருக்கமாட்டார்கள்”.

74:48. “அவர்களுக்காகப் பரிந்து பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது”

70:40-48. சுவனத்திலிருப்பவர்கள் நரகவாதிகளைப் பார்த்து உங்களை நரகத்தில் புகுத்தியது எது? என முஷ்ரிக்குகளான குற்றவாளிகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் ‘நாங்கள் தொழக்கூடியவர்களில்லை. ஏழைகளுக்கு நாங்கள் ஆகாரமளிக்கவில்லை. வீணான காரியங்களில் மூழ்கிக் கிடந்தவர்களுடன் சேர்ந்து நாமும் வீணில் மூழ்கிக் கிடந்தோம். கூலிகள் வழங்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்கினோம். நாங்கள் மரணித்து இதை உறுதியாகக் காணும் வரையில் இவ்வாறே இருந்தோம்’ என்று கூறுவார்கள். எனவே அவர்களுக்காகப் பரிந்துரை பேசுவோரின் சிபாரிசும் அன்று யாதொரு பயனும் அளிக்காது”

2:255. “அல்லாஹ்வுடைய அனுமதியின்றி அவனிடத்தில் எவருக்காக யாரால்தான் பரிந்துபேச முடியும்…?”

53:26.”வானத்தில் எத்தனையோ மலக்குகள் இருக்கின்றனர். அவர்கள் (எவருக்காகவும்) ஷபாஅத்துச் செய்தாலும் அது எந்தப் பயனும் அளிக்காது. ஆனால் அல்லாஹ் தான் விரும்பி திருப்திப்பட்டு எவருக்கு ஷபாஅத்துக்கு அனுமதி கொடுக்கின்றானோ (அத்தகையவர் பரிந்துப் பேசுவது பயனளிக்கும்).”

21:28. “அவர்களுக்கு முன்பின் இருப்பவற்றை அவன் நன்றாக அறிகின்றான். அவன் விரும்பியவர்களுக்கன்றி மற்றெவருக்கும் இந்த மலக்குகள் சிபாரிசு செய்ய மாட்டார்கள். அவனுக்கஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பார்கள்”

34:23. “அல்லாஹ்வுடைய அனுமதி பெற்றவர்களைத் தவிர வேறெவருடைய சிபாரிசு செய்வதும் பலனளிக்காது.”

10:18. “முஷ்ரிக்குகள் தமக்கு நன்மையோ தீமையோ எதுவும் செய்யமுடியாதவற்றை வணங்குவதுடன் இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு சிபாரிசு செய்பவை என்றும் கூறுகின்றனர்”.

6:51. “நபியே! எவர்கள் மறுமையில் தங்கள் இரட்சகனிடம் ஒன்று சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்படுவோம் என்று பயப்படுகிறார்களோ அவர்கள் பாவத்திலிருந்து விலகி பரிசுத்தவான்களாகுவதற்காக நீர் எச்சரிக்கை செய்யும். அவர்களுக்கு (அந்நாளில்) உதவியாளனும், பரிந்து பேசுபவனும் அந்த அல்லாஹ்வையன்றி வேறு ஒருவருமில்லை”

32:4. “அல்லாஹ் தான் வானங்கள் பூமி இவற்றுக்கிடையிலுள்ளவை அனைத்தையும் ஆறு நாட்களில் படைத்து பிறகு அர்ஷின் மீது ஸ்திரப்பட்டான். உங்களை இரட்சிப்பதற்கும், உங்களுக்காகப் பரிந்து பேசுவதற்கும் அவனை தவிர வேறு ஒருவருமில்லை. இதனை நீங்கள் சிந்திக்கவேண்டாமா?”.

39:43-44. “இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குச் சிபாரிசு செய்பவை என்று எண்ணி எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? அவை எத்தகைய சக்தியுமில்லாமலும் எதையும் அறியாமலும் இருந்தாலுமா அவற்றை உங்களுக்கு சிபாரிசு செய்பவையாக எடுக்கின்றீர்கள் என நபியே! நீர் கேளும். மேலும் நபியே! நீர் சொல்லும் ‘சிபாரிசுகள் யாவும் அல்லாஹ்வுக்கே உரியன. (ஆகவே அவனுடைய அனுமதியின்றி அவனிடத்தில் யாரும் சிபாரிசு செய்ய முடியாது). வானங்கள், பூமியின் ஆட்சி முழுவதும் அவனுக்குரியதே! (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்”.

20:109. “அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து அவர்களின் பேச்சைக் கேட்க விரும்பினானோ அவர்களைத் தவிர மற்றெவருடைய சிபாரிசும் பயனளிக்காது.”

36:22-23. “என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) இறைவானாகிஅ நான் எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு ஏதேனும் தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதில் ஒன்றையுமே என்னை வ்ட்டுத் தடுத்துவிடாது. அதிலிருந்து என்னை இவற்றால் விடுவிக்கவும் முடியாது”.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on சிபாரிசு பலனளிக்கும் நாள்!

பாடம் – 14

ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் செய்யும் செயல் எல்லை மீறும் போது அது மரித்தவரை விக்கிரகத்திற்கு சமமாக்கும்.

‘யா அல்லாஹ்! என்னுடைய அடக்கத்தலத்தை காஃபிர்களின் விக்கிரகத்தைப் போன்று செய்து விடாதே. தங்கள் நபிமார்களின் அடக்கத்தலத்தை மஸ்ஜிதுகளாக மாற்றியமைத்த மக்கள் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானது.’ என நபி முஹம்மத் (ஸல்) கூறியதாக இமாம் மாலிக் தன் முவத்தா என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்கள்.

‘நீங்கள் (வணங்கும்) லாத்தையும், உஜ்ஜாவையும் கண்டீர்களா?’ (53:19) என்ற வசனத்திற்கு முஜாஹித். மன்சூர். சுபியான் மூலம் இப்னு ஜரீர் (அத்-தப்பாரி) பின்வரும் விளக்கம் கொடுக்கிறார்.

‘லாத் என்ற மனிதர் கோதுமை அல்லது பார்லி மாவும் நெய்யும், தண்ணீரும் கலந்து சவிக் என்ற உணவை செய்து மக்காவுக்கு யாத்திரை செய்யும் மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பார். லாத் இறந்த பிறகு அவரை அடக்கிய இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவருடைய ஆசிவாதம் தேடி உட்கார்ந்து இருப்பார்கள்.’

இதே கருத்தை இப்னு அப்பாஸ் (ரலி) இடமிருந்து அபுல் ஜவ்ஸா (ரலி) அறிவிக்கிறார்கள்.

‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கப்ர் ஸ்தானங்களை தரிசிக்கும் பெண்களை சபித்தார்கள். அதோடு கப்ர் ஸ்தானங்களில் மஸ்ஜிதுகள் கட்டுபவர்களையும், விளக்குகள் எரித்து அவற்றை பிரகாசமாக வைப்பவர்களையும் சபித்தார்கள்.’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்கிறார்கள். அபு தாவுத், அத்-திர்மிதி, இப்னு மாஜா, அன் நஸாய் ஆகிய அனைவரும் இந்த ஹதீஸை உறுதிப் படுத்துகிறார்கள்.

இப்பாடத்தின் முக்கிய் அம்சங்கள்:

* விக்கிரகங்களைப் பற்றிய விளக்கம்.

* வணக்கங்களைப் பற்றிய விளக்கம்.

* பிற்காலத்தில் ஏற்படக்கூடும் என்ன அஞ்சிய தீங்குகளைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடினார்கள்.

* ‘யா அல்லாஹ்! என்னுடைய அடக்கத்தலத்தை விக்கிரகத்தைப் போன்று ஆக்கி விடாதே…’ என்ற துஆவுடன் சவக்குழிகளை தம் வணக்கத்தலமாக அமைத்துக் கொண்டமக்களையும் குறிப்பிட்டார்கள்.

* சவக்குழிகளின் மீது வணக்கம் புரியும் மக்கள் மேல் ஏற்படும் அல்லாஹ்வின் கடுமையான கோபம்.

* இஸ்லாத்திற்கு முன்பு மக்கள் மத்தியில் லாத் என்ற விக்கிரக ஆராதனை மக்காவில் எப்படி தொடங்கியது என்ற விளக்கம்.

* லாத் என்பவர் ஒரு நல்ல மனிதர். அவர் இறந்த பின் அவரை அடக்கிய இடத்தில் ஏற்பட்ட விளைவுகளும், லாத் என்ற பெயரில் விக்கிரக ஆராதனை ஏற்பட்ட காரணமும்.

* கப்ர் ஸ்தானங்களை தரிசிக்கும் பெண்களையும், கப்ருகளை விளக்குகள் போட்டு அலங்கரிப்பவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சாபம் செய்த முறை.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்னும் வரும்.

Posted in முக்கிய பாடங்கள் | Comments Off on பாடம் – 14

பாடம் – 13

மரித்த ஒரு நல்ல மனிதரின் அடக்கத்தலத்தில் அல்லாஹ்வை வணங்குவது தடையாகும். அச்செயல் மரித்தவனை வணங்கும் செயலாகும்.

உம் சலாமா (ரலி) ஒருமுறை அபிசீனியாவில் கிறிஸ்தவக்கோவிலில் சிலைகளும், சித்திரங்களும் நிறைந்து இருப்பதைத்தான் கண்டதாக நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) ‘அவர்களில் ஒரு நல்ல மனிதர் அல்லது இறைபக்தர் இறந்தால் அவரை அடக்கிய ஸ்தலத்தின் (கப்ரின்) மீது வணக்கத்தலமொன்றை கட்டி, அதில் சிலைகளையும், சித்திரங்களையும் வைப்பார்கள். அல்லாஹ்வின் சன்னிதானத்தில் எல்லாப் படைப்பினங்களையும் விட அவர்கள் மிகவும் கீழ்த்தரமானவர்கள்.அவர்கள் இரண்டு தீமைகளை செய்கிறார்கள். ஒன்று பிணக்குழியில் வணங்குவது, மற்றது சிலைகளும், சிற்பங்களும் வடிப்பதுமாகும்.’ என பதிலளித்ததாக ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மரணம் நெருங்கிய போது ஒரு (போர்த்தும்) புடவையை தன் முகத்தில் போட்டுக் கொள்வார்கள். சில சமயங்களில் வேதனையின் காரணமாக அதனை நீக்குவார்கள். அப்படியான வேதனையில் இருக்கையில் ஒருமுறை ‘தங்கள் நபிகளுடைய பிணக்குழிகளை வணக்கத்தலமாக எடுத்துக் கொண்ட கிறிஸ்தவர்கள் மீதும் யூதர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்’ எனக்கூறி அத்தகைய செயல்களை விட்டும் மக்களை எச்சரிக்கை செய்தார்கள்.முஹம்மத் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை சிலர் வணக்கத்தலமாக மாற்றுவார்கள் என்ற பயம் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தலமும் ஏனைய சஹாபாக்களுடைய (ரலி) அடக்கத்தலத்தைப் போன்று திறந்த நிலையில் இருந்திருக்கும்.

‘உங்களில் எவரையும் ஹஃலீலாக (நெருங்கிய நண்பனாக) எடுத்துக் கொள்வதில் நின்றும் நான் அல்லாஹ்விடம் தெளிவாக மீள்கின்றேன். நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் ஹஃலீலாக எடுத்துக் கொண்டது போல் என்னையும் தன் ஹஃலீலாக எடுத்துக்கொண்டான். நானும் அபுபக்கர் (ரலி)வை ஹஃலீலாக எடுத்திருக்கலாம். உங்களுக்கு முன்சென்ற சமூகத்தைப்பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் தம் நபிமார்கள் அடக்கப்பட்ட ஸ்தானங்களை வணக்கஸ்தலங்களாக அமைத்துக் கொண்டார்கள். அத்தகைய செயலிலிருந்தும் உங்களை தடுக்கிறேன்.’ என தன் மரணத்திற்கு ஐந்து தினங்களுக்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டதாக ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்வின் கடைசி நேரத்திலும் இத்தகைய செயலை தடுத்தார்கள். அடக்க ஸ்தானங்களை (பிணக்குழிகளை) வணக்கத் ஸ்தலமாக அமைத்துக் கொள்ளும் செயலில் ஈடுபடும் அனைவரையும் அதன் பின் சபித்தார்கள். அடக்க ஸ்தலங்களில் மஸ்ஜித் இருப்பினும் இல்லாவிடினும் அதன் அருகில் வணக்கம் புரிவது மேற்குறிப்பிட்ட ஒரு செயலாகும். தன் அடக்கஸ்தலம் ஒரு மஸ்ஜிதாக மாற்றப்படும் என நபி (ஸல்) பயந்தார்கள் என்ற கூற்றின் பொருள் இதுவாகும். நபி (ஸல்) அவர்களுடைய அடக்கஸ்தலத்தின் அருகில் எந்த ஒரு கட்டிடத்தையும் சஹாபாக்கள் அமைக்கவில்லை. ஒரு இடத்தில் வணக்கம் புரிந்தால் அல்லது வணக்கம் புரிய நாடினால் அந்த இடம் மஸ்ஜிதாக கருதப்பட்டதாக பொருள்படும். ‘முழு உலகமும் எனக்கு மஸ்ஜிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.’ என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றை கவனிக்கவும்.

‘எந்த மக்கள் உயிருடன் இருக்கையிலேயே அவர்கள் மத்தியில் மறுமை நாளின் அடையாளம் இறங்குகிறதோ அவர்களும், பிணக்குழிகளை வணக்க ஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டவர்களும் மிகக் கேடு கெட்டவர்கள்.’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) மர்பு ஹதீஸ் ஒன்றை அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அஹ்மத். அபு ஹாதிம் ஸஹீஹான ஹதீஸில் இதே கருத்தை அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அஹ்மத்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

* ஒரு நல்ல மனிதரின் அடக்க ஸ்தலத்தின் அருகில் உன்னத நோக்கத்துடன் மஸ்ஜித் கட்டும் மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்த எச்சரிக்கை.

* சிலைகள், சிற்பங்கள் செதுக்கும் செயலுக்குத் தெரிவித்த தடையும், அவற்றின் விளைவுகளும்.

* இந்த விஷயம் பற்றி நபி (ஸல்) அவர்கள் ஆணித்தரமாக தெரிவித்த முறை. ஆரம்பத்தில் அன்போடு மக்களுக்கு இவற்றின் விளைவுகளை விளக்கினார்கள். தன் மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், முதலில் விளக்கியவற்றை மறுபடியும் திருப்பிச் சொன்னார்கள். தன் கடைசி மூச்சு நெருங்கும் போது முன் சொன்னவை போதாது என உணர்ந்து, மரண வேதனையின் மத்தியிலும் இவ்விஷயம் பற்றி ஆணித்தரமாக உறைத்தார்கள்.

* தன் அடக்கஸ்தலம் மஸ்ஜிதாக மாற்றப்படுவதை மரணத்திற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்தார்கள்.

* தங்கள் நபிமார்களின் அடக்க ஸ்தலங்களை வணக்கத்தலமாக மாற்றியமைத்துக் கொள்வது கிறிஸ்தவர்களதும், யூதர்களதும் வழக்கமாகும்.

* இத்தகைய வணக்கங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் சபித்தார்கள்.

* இதன் மூலம் தன்னுடைய அடக்க ஸ்தலத்தைப் பற்றியும் நபி (ஸல்) எங்களுக்கு எச்சரிக்கை செய்தார்கள்.

* இக்காரணத்தால் நபி (ஸல்) அவர்களின் அடக்க ஸ்தலம் உயர்த்திக் கட்டப்படவில்லை.

* அடக்க ஸ்தலங்களை மஸ்ஜிதுகளாக அமைப்பதன் விளக்கம்.

* அடக்க ஸ்தலங்களை வணக்கத்தலமாக அமைக்கும் மக்களையும், உயிருடன் இருக்கையிலேயே மறுமை நாளின் அடையாளம் தம் மத்தியில் இறங்கும் மக்களையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். இதன் மூலம் ஷிர்க்கான காரியம் நடைபெறுவதற்கு முன்பே அதற்கு இட்டுச் செல்லும் வழிகளையும், அவற்றின் பயங்கர விளைவுகளையும் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

* இஸ்லாத்தில் பித்ஆக்களை தீவிரமாகத் திணிக்கும் ராபிதா மற்றும் ஜஹ்மியா என்ற இரு கூட்டத்தாரும் நபி (சல்) அவர்களின் கூற்றின் காரணமாக நிராகரிக்கப்பட்டு விட்டார்கள். இவ்விரு கூட்டங்களும் ஏற்கனவே இஸ்லாத்திலிருந்து நீங்கி விட்டார்கள் என்று கூறி இஸ்லாத்தில் வழிகெட்ட 72 கூட்டங்களில் இவ்விரு கூட்டங்களையும் மார்க்க அறிஞர்கள் சேர்க்கவில்லை. இஸ்லாத்தில் ஷிர்க்கான காரியங்கள் புகுத்தப்படவும், அடக்க ஸ்தலங்களில் வணக்கம் புரியவும் ராபிதா என்ற கூட்டமே காரணம். பிணக்குழியின் மீது முதலில் மஸ்ஜித் எழுப்பியது இக்கூட்டமே.

* அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூட சகராத் என்னும் மரண வேதனைக்கு ஆளானார்கள்.

* முஹம்மத் (ஸல்) அவர்களை ஹஃலீலாக அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்கு கொடுத்த உன்னத அந்தஸ்து, நெருங்கிய சினேகம் அன்பைவிட உயர்ந்தது எனக்காட்டுகிறது.

* அபு பக்கர் அஸ் ஸித்தீக் (ரலி) நபி (ஸல்) அவர்களுக்கு ஸஹாபாக்களில் மிக நெருங்கியவர் எனக்காட்டுகிறது.

* நபி (ஸல்) அவர்கள் தனக்குப்பின் அடுத்தகலீபா அபு பக்கர் (ரலி) என சுட்டிக் காட்டிய முறை.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.
தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்னும் வரும்.

Posted in முக்கிய பாடங்கள் | Comments Off on பாடம் – 13

மூதாதையர்கள்?

2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

5:104. “அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)

7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக் கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிட மாட்டான் – நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல!) நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை எதில் கண்டோமோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

43:22. அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்,”

43:23. இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை.

43:24. (அப்பொழுது அத்தூதர்,) “உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதைவிட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

37:69. நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழிகேட்டிலேயே கண்டார்கள்.

37:70. ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.

37:71. இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.

37:72. மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

37:73. பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on மூதாதையர்கள்?

பாடம் – 12

அல்லாஹ்வைத் தவிர ஏனையவைகளிடம் உதவி தேடுவதும் (இஸ்திகாதா), துஆ கேட்பதும் ஷிர்க்கான செயலாகும்.

“இன்னும் அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்வீராயின் நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக) நீர் ஆகிவிடுவீர். அல்லாஹ் உமக்கு ஒரு இடரை அடையச் செய்தால் அதனை நீக்குகிறவன் அவனைத் தவிர (வேறு) எவரும் இல்லை. மேலும் அவன் உமக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனது பேரருளை தடுப்பவர் எவருமில்லை. தன் அடியார்களில் அவன் நாடியவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ளுமாறு செய்கின்றான். அவனே மிக்க மன்னிப்போன். மிகக் கிருபையுடையோன்.” என அல்லாஹ் கூறுகிறான். (10:106-107)

“(தவிர) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் விக்கிரகங்களைத்தான். நீங்கள் பொய்யாக (உங்கள் கைகளால் அவைகளை) படைத்துக் கொண்டீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவை உங்களுக்கு உணவளிக்கச் சக்திபெறமாட்டா. ஆகவே (உங்களுக்கு வேண்டிய) உணவை அல்லாஹ்விடம் தேடுங்கள். அவன் பக்கமே நீங்கள் மீட்டப்படுவீர்கள். (29:17)

“மேலும் அல்லாஹ்வை விடுத்து மறுமை நாள் வரை (அழைத்த போதிலும்) தனக்கு பதில் கொடுக்காதவர்களை அழைப்பவனை விட மிக வழிகெட்டவன் யார்? அவர்களோ இவனுடைய அழைப்பை மறந்தவர்களாக உள்ளனர். மேலும் மனிதர்கள் (மறுமை நாளுக்காக) ஒன்று திரட்டப்பட்டால் (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவனுக்கு விரோதிகளாக இருப்பர். இவன் (தங்களை) வணங்கிக்கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரிப்பார்கள். (46:5-6)

“(உங்களுடைய தெய்வங்கள் சிறந்தவையா?) அல்லது கடுந் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவன் அழைத்தால் (அவனுக்குப்) பதில் அளித்து மேலும் (அவனுடைய) துன்பங்களை நீக்கி இப்புவியில் (உங்களைத் தன்னுடைய) பிரதிநிதிகளாகவும் ஆக்கியவன் (சிறந்தவனா?) இத்தகைய அல்லாஹ்வுடன் வேறு வணக்கத்துக்கு உரியவன் இருக்கின்றானா? நீங்கள் சிந்திப்பது மிகக் குறைவாகும்.” (27:62)

முஹம்மத் (ஸல்) அவர்களுடைய காலத்தில் விசுவாசிகளுக்கு துன்பமிழைத்துக் கொண்டிருந்த முனாபிக் ஒருவன் இருந்தான். அவனுக்கு எதிராக அல்லாஹ்வின் தூதரிடம் உதவி கோருவோம் என விசுவாசிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அந்த மக்களுக்கு ‘யாரும் உதவிக் கோரி என்னைத் தேடக் கூடாது. நிச்சயமாக அனைவரும் அல்லாஹ்விடமே உதவியும், ஒத்தாசையும் தேடவேண்டும்’ என நபி (ஸல்) பதிலளித்ததாக அத்-தப்ரானி ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.

இப்பாடத்தின் முக்கிய அம்சங்கள்:

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவது பெரும் ஷிர்க்கான ஒரு செயலாகும்.

அல்லாஹ்விடம் அளவற்ற பற்றுள்ள மனிதராயினும், பிறருடைய தேவையின் பொருட்டு அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடினால் அவர் பெரும் அநியாயக்காரர் ஆகிவிடுவார்.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவதால் இவ்வுலக வாழ்வில் எவ்விதப் பயனும் ஏற்படாதது மாத்திரமின்றி அச்செயல் மனிதரை குஃப்ருடைய வழிக்கு இட்டுச்செல்லும்.

சுவர்க்கத்தை நாடும் யாரும் அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி கோருவதில்லை. அதே போன்று உணவுகளையும், செல்வங்களையும் அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் கோரக்கூடாது.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுபவனைவிட வழிகெட்டவன் யாருமில்லை.

அல்லாஹ்வையன்றி வணங்கப்படும் ஏனையவைகள் தங்களை மனிதன் வணங்குவதையோ, தங்களிடம் உதவி தேடுவதையோ, ஒரு போதும் அறிய மாட்டார்கள். அவைகளுக்கு அவற்றை அறிவதற்குரிய சக்தியுமில்லை.

அல்லாஹ்வையன்றி ஏனையவைகளிடம் உதவி தேடுவதனால் வணங்குபவனுக்கும், வணங்கப்படுபவைகளுக்கும் இடையில் கோபமும், பகையும் தான் வளரும்.

உதவிக்கோரி ஒன்றை அழைக்கும் போது, அச்செயல் அதற்கு செய்யப்படும் வணக்கமாகக் கருதப்படுகிறது.

மறுமை நாளுக்காக அனைவரும் ஒன்று திரட்டப்படும் போது வணங்கப்பட்டவைகளான அவைகள், மனிதன் தங்களை வணங்கிக் கொண்டிருந்ததையும் நிராகரிப்பார்கள்.

இப்படிப்பட்டவர்களை அழைப்பவன் மனிதர்களில் மிகவும் வழிகெட்டவன்.

துன்பங்கள் ஏற்படும் போது அவற்றை நீக்கி அருள் புரிபவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று விக்கிரகங்களை வணங்குபவர்கள் கூட அறிவார்கள். அதனால் தான் அவர்களும் தாங்கமுடியாத துன்பங்கள் ஏற்படும் போது அல்லாஹ்விடமே உதவிக் கோரி ஏகமனதோடு பிரார்த்தனை புரிகிறார்கள்.

“ஒவ்வொரு முஸ்லிமும் அறிய வேண்டிய 32 முக்கிய பாடங்கள்” என்ற நூலில் இருந்து.

அரபி மூலம்: அப்துல் அஸீஸ் அல் ஸோமர்.

தமிழ் மொழி பெயர்ப்பு: ஜாஸிம் பின் தய்யான்.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்.

Posted in முக்கிய பாடங்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | Comments Off on பாடம் – 12

இறை சோதனை!

7:163. (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப் பற்றி நீர் அவர்களைக் கேளும் – அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு (த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன – ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாகி) வருவதில்லை – அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கினோம்.

7:164. (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், “அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்தக் கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்): “உங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகி விடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்.

7:165. அவர்கள் எது குறித்து உபதேசிக்கப்பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையை விட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.

7:166. தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, ‘நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்’ என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.

அல் குர்ஆன்: அல் அஃராஃப் (சிகரங்கள்)

Posted in இறுதி இறை வேதம் | Comments Off on இறை சோதனை!