மூதாதையர்கள்?

2:170. மேலும், “அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் “அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்” என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

5:104. “அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின்பாலும், இத்தூதரின்பாலும் வாருங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்கள்) ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழியில் நடக்காதவர்களாகவும் இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்.)

7:28. (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக் கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிட மாட்டான் – நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக.

31:21. “அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் “(அப்படியல்ல!) நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை எதில் கண்டோமோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)

43:22. அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்,”

43:23. இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை.

43:24. (அப்பொழுது அத்தூதர்,) “உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதைவிட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

37:69. நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழிகேட்டிலேயே கண்டார்கள்.

37:70. ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.

37:71. இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.

37:72. மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.

37:73. பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.

This entry was posted in இறுதி இறை வேதம். Bookmark the permalink.