பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776
ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் சூட்டினான். (பஸராவில்) நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் (வந்து) சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் அன்சாரிகளின் சிறப்புகளையும் அவர்களின் (தியாக) நிகழ்ச்சிகளையும் எங்களுக்கு எடுத்துரைப்பார்கள். என்னை அல்லது ‘அஸ்த்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை நோக்கி, ‘உன் குலத்தார் இன்னின்ன நாளில் இன்னின்னவாறு செய்தார்கள்” என்று சொல்வார்கள்.
பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3777
ஆயிஷா(ரலி) அறிவித்தார் ‘புஆஸ்’ போர் நாள், தன் தூதருக்காக அல்லாஹ் (சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையில்) முன்கூட்டியே நிகழச் செய்த நாளாக அமைந்தது. (அந்தப் போரின் காரணத்தால்) மதீனாவாசிகளின் கூட்டமைப்பு (குலைந்து) பிளவுபட்டிருந்த நிலையிலும் அவர்களில் முக்கியப் பிரமுகர்கள் கொல்லப்பட்டும் காயமுற்றும் இருந்த நிலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அங்கு) வந்தார்கள். எனவே, மக்கள் இஸ்லாத்தை ஏற்க (ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதற்காக) அல்லாஹ்தான், தன் தூதர்(ஸல்) அவர்களுக்குச் சாதகமாக அந்த நாளை முன் கூட்டியே நிகழச் செய்தான். Continue reading