59.படைப்பின் ஆரம்பம்

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3190

இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவித்தார். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘பனூ தமீம் குலத்தாரே! நற்செய்தி பெற்று மகிழுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி கூறினீர்கள். அவ்வாறே எங்களுக்கு (தருமமும்) கொடுங்கள்” என்று கேட்டார்கள். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் மாறிவிட்டது.

அப்போது யமன் நாட்டினர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! (நான் வழங்கும்) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘நாங்கள் அதை ஏற்றுக் கொண்டோம்” என்று பதிலளித்தார்கள். பிறகு, நபி(ஸல்) அவர்கள் படைப்பின் ஆரம்பத்தைக் குறித்தும் அர்ஷ் (இறைசிம்மாசனம்) குறித்தும் பேசலானார்கள். அப்போது ஒருவர் வந்து (என்னிடம்), ‘இம்ரானே! உன் வாகனம் (ஒட்டகம்) ஓடிவிட்டது” என்று கூறினார். (நான் ஒட்டகத்தைத் தேடச் சென்று விட்டேன்.) நான் எழுந்து செல்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3191

இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். என் ஒட்டகத்தை வாசற்கதவருகே கட்டிப் போட்டேன். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த சிலர் வந்தனர். (அவர்களிடம்) நபி(ஸல்) அவர்கள், ‘(நான் அளிக்கும்) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று கூறினார்கள். அவர்கள், ‘எங்களுக்கு நற்செய்தி அளித்தீர்கள். அவ்வாறே எங்களுக்கும் (தருமம்) கொடுக்கவும் செய்யுங்கள்” என்று (இரண்டு முறை) கூறினார்கள். பிறகு, யமன் நாட்டவர் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வருகை தந்தார்கள். (அவர்களிடமும்) நபி(ஸல்) அவர்கள், ‘யமன் வாசிகளே! (என்னுடைய) நற்செய்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்றுக் கொள்ளவில்லை” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ஏற்றுக் கொண்டோம்” என்று பதில் கூறினார். பிறகு, ‘நாங்கள் தங்களிடம் இந்த (உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்னும்) விஷயம் குறித்துக் கேட்பதற்காக வந்தோம்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(ஆதியில்) அல்லாஹ் (மட்டுமே) இருந்தான். அவனைத் தவிர வேறெந்தப் பொருளும் இருக்கவில்லை. (பிறகு படைக்கப்பட்ட) அவனுடைய அர்ஷ் (சிம்மாசனம்) தண்ணீரின் மீதிருந்தது. பிறகு (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) பாதுகாக்கப்பட்ட பலகையில் அவன் எல்லா விஷயங்களையும் எழுதினான். பின்னர் வானங்கள், பூமியைப் படைத்தான்” என்று கூறினார்கள். அப்போது ஒருவர் (என்னை) அழைத்து, ‘ஹுஸைனின் மகனே! உங்கள் ஒட்டகம் ஓடிப் போய்விட்டது” என்று கூற, நான் (அதைத் தேடிப்பார்க்க எழுந்து) சென்று விட்டேன். சென்று பார்த்தால் ஒட்டகத்தைக் காண முடியாதவாறு கானல் நீர் தடுத்துவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! ‘நான் அதை அப்படியேவிட்டு விட்டிருந்தால் நன்றாயிருக்குமே (படைப்பின் ஆரம்பம் குறித்து நபி(ஸல்) அவர்கள் இன்னும் என்னவெல்லாம் சொன்னார்கள் எனத் தெரிந்து கொண்டிருக்கலாமே)’ என்று நான் ஆசைப்பட்டேன்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3192

உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே மிம்பரில் எழுந்து நின்று, படைப்பின் ஆரம்பத்தைக் குறித்து எங்களுக்குச் செய்தி அறிவித்தார்கள். (எதுவரை என்றால் படைப்பின் தொடக்கம் முதல் மறுமை வாழ்வு ஈறாக) சொர்க்கவாசிகள் (சொர்க்கத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும் வரையும் நரக வாசிகள் (நரகத்தில்) தாம் தங்குமிடங்களில் புகும்வரையும் அறிவித்தார்கள். அதை நினைவில் வைத்தவர் நினைவில் வைத்தார்; அதை மறந்தவர் மறந்துவிட்டார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3193

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உயர்ந்தவனான அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை ஏசுகிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். அவன் என்னை நம்ப மறுக்கிறான். அது அவனுக்குத் தகாத செயலாகும். எனக்குக் குழந்தை இருப்பதாக அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ‘நான் அவனை ஆரம்பமாகப் படைத்ததைப் போன்றே மீண்டும் அவனை என்னால் (உயிராக்கிக்) கொண்டு வர முடியாது’ என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3194

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது” என்று எழுதினான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3195

அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார். எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி), ‘அபூ ஸலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்து கொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக் கொள். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்’ எனக் கூறினார்கள்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3196

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” எவன் ஒரு நிலத்திலிருந்து அதற்கான உரிமையில்லாமல் சிறிதளவை (பலாத்காரமாக) எடுத்துக் கொள்கிறானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகள் வரை அழுந்திப் போகும்படிச் செய்யப்படுவான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3197

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை – துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும். என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3198

ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) அறிவித்தார். ‘அர்வா’ என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறை வைத்துவிட்டதாகக் கருதி (மதீனாவின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின் போது) நான், ‘அவரின் உரிமையில் எதையும் நான் குறைவைப்பேனா?’ ‘ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு பூமிகளாக மறுமை நாளில் அது (வளையமாக) மாட்டப்படும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்” என்று சொன்னேன்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3199

அபூ தர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், ‘அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும், என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (ம்ழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, ‘வந்த வழியே திரும்பி விடு” என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்” என்றார்கள். இதைத் தான், ‘சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்” என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3200

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு (ஒளியிழந்து) விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3201

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” எவருடைய இறப்புக்காகவும், பிறப்புக்காகவும் சூரிய கிரகணமும் சந்திர கிரகணமும் ஏற்படுவதில்லை. ஆயினும், அவ்விரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் ஒரு சான்றாகும். அவ்விரண்டையும் நீங்கள் காண நேர்ந்தால் (இறைவனைத்) தொழுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3202

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் அவற்றிற்கு கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் காணும்போது அல்லாஹ்வை நினைவு கூருங்கள். என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3203

ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் தொழுகைக்காக நின்று தக்பீர் கூறி நீண்ட நேரம் (திருக்குர்ஆனை) ஓதினார்கள். பிறகு, நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி, ‘சமி அல்லாஹு லிமன் ஹமிதஹு” (தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவியுற்றான்) என்று கூறினார்கள். அப்படியே நின்று நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார்கள். அது முதல் ரக்அத்தில் ஓதியதை விடக் குறுகியதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூவு செய்தார்கள். அது முதல் ரக்அத்(தில் செய்த)தை விடக் குறுகியதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ஸஜ்தா செய்தார்கள். பிறகு, கடைசி ரக்அத்திலும் அவ்வாறே செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். அதற்குள் (ம்ரகணம் முடிந்து) சூரியன் வெளிப்பட்டு விட்டிருந்தது. அப்போது அவர்கள் மக்களுக்கு உரையாற்றினார்கள். (அவ்வுரையில்) சூரிய, சந்திர கிரகணங்களைப் பற்றி, ‘அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும், எவருடைய பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் அவற்றைக் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3204

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காகவும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகணம் பிடிப்பதில்லை ஆயினும், அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும். அவற்றை நீங்கள் காணும்போது (இறைவனைத்) தொழுங்கள். என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3205

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் (‘ஸபா’ என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ‘ஆது’ சமூகத்தார் (‘தபூர்’ என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3206

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), ‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்” (திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம் எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3207

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் இறையில்லம் கஅபாவில் இருமனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்தபோது நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்ட தங்கத் தட்டு ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. என்னுடைய நெஞ்சம் காறையெலும்பிலிருந்து அடி வயிறு வரை பிளக்கப்பட்டது. பிறகு ஸம்ஸம் நீரினால் என் வயிறு கழுவப்பட்டது. பிறகு, (என் இதயம்) நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பட்டது. மேலும், கோவேறுக் கழுதையை விடச் சிறியதும் கழுதையை விடப் பெரியதுமான ‘புராக்’ என்னும் (மின்னல் வேக) வாகனம் ஒன்றும் என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான் (அதில் ஏறி) ஜிப்ரீல்(அலை) அவர்களுடன் சென்றேன். நாங்கள் முதல் வானத்தை அடைந்தோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை), ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘முஹம்மது” என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அவர், ‘ஆம்” என்றார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும்! அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான் ஆதம்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், ‘(என்) மகனும் இறைத் தூதருமான உங்கள் வரவு நல்வரவாகுக!” என்றார்கள். பிறகு இரண்டாவது வானத்திற்கு நாங்கள் சென்றோம். ‘யார் அது?’ என்று வினவப்பட்டது. அவர், ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்க, ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மது” என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆம்” என்று பதிலளித்தார். ‘அவரின் அவரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நான், ஈஸா(அலை) அவர்களிடமும் யஹ்யா(அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், ‘சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்” என்றார்கள். பிறகு, நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்” என்று பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” பதிலளித்தார். ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” என்று பதிலளித்தார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு, நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று பதிலளிக்கப்பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” என்று பதிலளித்தார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் இத்ரீஸ்(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார்கள். பிறகு, நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்லவருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. பிறகு நாங்கள் ஹாரூன்(அலை) அவர்களிடம் சென்றோம். நான் அவர்களுக்கு சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று (வாழ்த்து) சொன்னார். பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று கேட்கப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘(அவரை அழைத்து வரச் சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘ஆம்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது. நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்” என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். ‘நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?’ என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், ‘இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்” என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். ‘யார் அது?’ என்று வினவப்பட்டது. ‘ஜிப்ரீல்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘உங்களுடன் இருப்பவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘முஹம்மத்” என்று பதிலளிக்கப்பட்டது. ‘(அவரை அழைத்து வரச்சொல்லி) அவருக்கு ஆளனுப்பப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. ‘அவரின் வரவு நல்வரவாகட்டும். அவரின் வருகை மிக நல்ல வருகை” என்று (வாழ்த்து) சொல்லப்பட்டது… நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று (அவர்களுக்கு) சலாம் உரைத்தேன். அவர்கள், ‘மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும்” என்றார்கள். பிறகு, ‘அல் பைத்துல் மஃமூர்’ எனும் ‘வளமான இறையில்லம்’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், ‘இதுதான் ‘அல் பைத்துல் மஃமூர்’ ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாம் விடும்” என்றார். பிறகு, (வான எல்லையிலுள்ள இலந்தை மரமான) ‘சித்ரத்துல் முன்தஹா’ எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. அதன் பழங்கள் (யமனில் உள்ள) ‘ஹஜ்ர்’ எனுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், ‘உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். பிறகு என் மீது ஐம்பது (நேரத்) தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று இறுதியில் மூஸா(அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்டார்கள். நான், ‘என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளன” என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், ‘எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழம் நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்” என்றார்கள். நான் திரும்பச் சென்று இறைவனிடம் (அவ்வாறே) கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதலில் சொன்னவாறே நடந்தது. மீண்டும் (சென்று நான் கேட்க, இறைவன் அதை) முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) இறைவன் இருபதாக ஆக்கினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை ஐந்தாக ஆக்கினான். பிறகு நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘என்ன செய்தாய்?’ என்று கேட்க, ‘அதை இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்” என்றேன். அதற்கு அவர்கள், ‘முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள். அதற்கு, ‘நான் (இந்த எண்ணிக்கைக்கு) ஒப்புக் கொண்டேன்” என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), ‘நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்” என்று அறிவிக்கப்பட்டது.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3208

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:

உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலி யா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3209

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல்(அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!” என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல்(அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்” என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

வேறோர் அறிவிப்பாளர் அபூ ஆஸிம்(ரஹ்) வழியாகவும் அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்தே இந்த நபிமொழி அறிவிக்கப்படுகிறது.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3210

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள். என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3211

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3212

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), ‘நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, ‘அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), ‘ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3213

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஹஸ்ஸான்(ரலி) அவர்களிடம், ‘எதிரிகளுக்கு (பதிலடியாக) வசைக் கவிதை பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (துணையாக) இருப்பார்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3214

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். (கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகுன்கி கிளையாரின் குறுகலான வீதியில் கிளம்புகிற புழுதியின் பக்கம் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.

அறிவிப்பாளர் மூஸா(ரஹ்), ‘ஜிப்ரீல்(அலை) அவர்கள் தங்களின் படை பரிவாரங்களுடன் கம்பீரமாக பவனி வருவதால் (ம்ளம்புகின்ற)…” என்னும் வாசகத்தை அதிகப்படியாக அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3215

ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘தங்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு) எப்படி வருகிறது?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவையெல்லாம் (இப்படித்தான்:) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று (சத்தம் எழுப்பிய நிலையில்) வருவார். அவர் கூறியதை நான் நினைவில் (பாதுகாத்து) வைத்த நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான சிரமம் தரக் கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3216

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “இரண்டு ஜோடி (பொருள்)களை இறைவழியில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் ‘இன்னாரே! இங்கே வாருங்கள்’ என்று அழைப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூ பக்ர்(ரலி), ‘இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அவர்களில் ஒருவராயிருப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3217

ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்” என்று கூறினார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன்.

ஆயிஷா(ரலி) ‘நீங்கள்’ என்று நபி(ஸல்) அவர்களையே குறிப்பிட்டதாக அறிவிப்பாளர் கூறுகிறார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3218

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம், ‘தாங்கள் (இப்போது) எம்மைச் சந்தித்துக் கொண்டிருப்பதை விட அதிகமாக (அடிக்கடி) சந்திக்க மாட்டீர்களா?’ என்று (ஆர்வமுடன்) கேட்டார்கள். அப்போது, ‘(நபியே!) நாம் உங்களுடைய இறைவனின் உத்தரவின்றி இறங்குவதில்லை. எமக்கு முன்னிருப்பவையும் எமக்குப் பின்னால் இருப்பவையும் அவனுக்கே உரியவை.’ என்னும் (ஜிப்ரீல்(அலை) அவர்கள் சார்பாக பதில் கூறும் (திருக்குர்ஆன் 19:64) இறைவசனம் அருளப்பட்டது.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3219

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒரேயொரு (வட்டார) மொழி வழக்குப்படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல (வட்டார) மொழி வழக்குகளின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு (வட்டார) மொழி வழக்குகள் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3220

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே அதிகமாக வாரி வழங்கக் கூடியவர்களாக இருந்தார்கள்; ரமளான் மாதத்தில் அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கும் வேளையில் (வழக்கத்தை விட) அதிகமாக வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் ரமளான் மாதத்தின் ஒவ்வோர் இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து (அதுவரை அருளப்பட்டிருந்த) குர்ஆனை அவர்களுக்கு (ஓதிக் காடிக்) கற்றுத் தருவார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள், நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மழைக் காற்றை விட அதிகமாக (மக்களுக்கு) நன்மையை வாரி வழங்கும் கொடையாளராகத் திகழ்வார்கள். மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘குர்ஆன் முழுவதையும் ஜிப்ரீல் எனக்கு ஓதிக் காட்டி வந்தார்” என்று கூறினார்கள்.

இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் ஃபாத்திமா(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3221

இப்னு ஷிஹாப்(ரஹ்) அறிவித்தார். உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்) அஸர் தொழுகையைச் சிறிது பிற்படுத்தித் தொழுதார்கள். உடனே உர்வா(ரஹ்), ‘உண்மையில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் (வானிலிருந்து) இறங்கி இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் (அஸரை) இதற்கு முந்திய நேரத்தில்) தொழுதார்கள்” என்றார்கள். அதற்கு உமர் இப்னு அப்தில் அஸீஸ்(ரஹ்), ‘நீங்கள் சொல்வதைச் சிந்தித்துச் சொல்லுங்கள், உர்வா!” என்றார்கள். உடனே உர்வா(ரஹ்), ‘ஜிப்ரீல்(அலை) (வானிலிருந்து) இறங்கி, எனக்குத் தொழுகை நடத்த, நான் அவருடன் தொழுதேன். பிறகு (இரண்டாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (மூன்றாம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (நான்காம் முறையாக) அவருடன் தொழுதேன். பிறகு (ஐந்தாம் முறையாக) அவருடன் தொழுதேன்’ என்று தம் விரல்களால் ஐந்து தொழுகைகளை எண்ணியபடி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்” என்று தம் தந்தை அபூ மஸ்வூத்(ரலி) சொல்லக் கேட்டதாக பஷீர் இப்னு அபீ மஸ்வூத்(ரஹ்) சொல்ல செவியுற்றேன்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3222

அபூ தர்(ரலி) அறிவித்தார். “உங்கள் சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாகக் கருதாமல் இறந்து விடுபவர், சொர்க்கத்தில் நுழைவார்;.. அல்லது நரகம் புக மாட்டார்’… என்று ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், ‘அவன் விபசாரம் புரிந்தாலும், திருடினாலுமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்; அவன் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே!” என்று பதிலளித்தாக்hள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3223

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள். ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும் ஒன்ற சேருகிறார்கள். பிறகு, அல்லாஹ் – அவனோ மிகவும் அறிந்தவன் – அவர்களிடம், ‘(பூமியிலுள்ள) என் அடியார்களை எந்த நிலையில்விட்டு வந்தீர்கள்?’ என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், ‘அவர்களை உன்னைத் தொழுகிற நிலையில்விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் நாங்கள் சென்றோம்” என்று பதிலளிப்பார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3224

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு நான் ஒரு தலையணையை (ஈச்ச நாரை அடைத்துத்) தயாரித்தேன். அதில் உருவப் படங்கள் வரையற்பட்டிருந்தன. அது சிறிய மெத்தை போன்றிருந்தது. நபி(ஸல்) அவர்கள் வந்ததும் (அதைப் பார்த்துவிட்டு) இரண்டு கதவுகளுக்கிடையே நின்றார்கள். அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறத் தொடங்கியது. நான், ‘நாங்கள் என்ன (தவறு) செய்து விட்டோம்? இறைத்தூதர் அவர்களே!” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என்ன இந்தத் தலையணையில்?’ என்று (கோபமாகக்) கேட்டார்கள். நான், ‘இது, நீங்கள் (தலைவைத்துப்) படுத்துக் கொள்வதற்காக தங்களுக்கென நான் தயாரித்த தலையணை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘உருவப் படம் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதும், உருவப் படத்தைச் செய்வதன் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவான் என்பதும் அப்போது அல்லாஹ் (உருவப் படத்தைச் செய்தவர்களை நோக்கி), ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்’ என்று சொல்வான் என்பதும் உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3225

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நாயும் (உயிரினங்களின் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3226

ஸைத் இப்னு காலித் அல் ஜுஹைனீ(ரலி) அறிவித்தார். “(உயிரினங்களின்) உருவப் படமுள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என என்னிடம் அபூ தல்ஹா(ரலி) தெரிவித்தார்கள்.

புஸ்ர் இப்னு ஸயீத்(ரஹ்) அறிவித்தார். (ஒரு முறை ஸைத் இப்னு காலித்(ரலி) நோய் வாய்ப்பட்டார்கள். அவர்களை உடல் நலம் விசாரிக்க நாங்கள் சென்றோம். அப்போது நாங்கள் அவர்களின் வீட்டில் ஒரு திரைக்கு அருகே அமர்ந்திருந்தோம். அந்தத் திரையில் உருவப் படங்கள் (வரையப்பட்டு) இருந்தன. எனவே, நான் (என்னுடன் இருந்த) உபைதுல்லாஹ் அல் கவ்லானீ அவர்களிடம், ‘இவர்கள் (ஸைத்(ரலி)), ‘இவர்கள் (ஸைத்(ரலி)) நமக்கு உருவங்களைப் பற்றிய நபிமொழியை அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம். ஆனால், ஸைத்(ரலி) (அதை அறிவிக்கும் போது) ‘துணியில் பொறிக்கப்பட்ட (உயிரினமல்லாதவற்றின் படத்)தைத் தவிர’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சொன்னார்களே அதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நான், ‘கேட்கவில்லை” என்றேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; அவர்கள் அவ்வாறு சொல்லத் தான் செய்தார்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3227

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். (ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிக் கேட்ட போது) ‘உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை” என்றார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3228

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இமாம் (தொழுகையில்), ‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு – தன்னைப் புகழ்ந்தவனை அல்லாஹ் செவிமடுத்தான்” என்று கூறும்போது நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து – இறைவா! எங்கள் இரட்சகனே! உனக்கே புகழ் அனைத்தும் உரியது” என்று கூறுங்கள். ஏனெனில், (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவருடைய சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகிறதோ அவர், அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3229

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் நேரமெல்லாம் தொழுகையிலேயே அவர் இருக்கிறார். மேலும், அவர் தொழுகை முடிந்து எழாதிருக்கும் வரை அல்லது அவரின் உளூ முறியாமலிருக்கும் வரை, வானவர்கள், ‘இறைவா! இவரை மன்னித்து, இவருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3230

யஃலா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் உரையாற்றியபடி, ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர் மாலிக்கிடம்,) ‘யா மாலிக் – மாலிக்கே! ‘உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்’ என்று (அந்தக் குற்றவாளிகள்) சப்தமிடுவார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 43:77) இறைவசனத்தை ஓத கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), ‘அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதும் முறையில் (‘யா மாலிக்’ என்பதற்கு பதிலாக) ‘யா மாலி’ என்றுள்ளது” எனக் கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3231

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘(தாங்கள் காயமடைந்து) உஹுதுப் போரின் கால கட்டத்தை விடக் கொடுமையான கால கட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்துண்டா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலளிக்கவில்லை. எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வம்க்கும் வானவர் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கன வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்” என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வம்க்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது கலாம் சொல்லி, பிறகு, ‘முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)” என்று கூறினார். உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன் (எனவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)” என்று சொன்னேன்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3232

அபூ இஸ்ஹாக் அஷ் ஷைபானீ(ரஹ்) கூறினார். நான் ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அவர்களிடம், ‘(வஹீ – வேத வெளிப்பாடு நின்று போயிருந்த இடைப்பட்ட காலத்தில் வானவர் ஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களை நெருங்கி வர) அந்நெருககத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலுள்ள நெருக்கத்தை போல், அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது. பிறகு, ‘அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்’ என்னும் (திருக்குர்ஆன் 53:9,10) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) அவரைக் கண்டார்கள்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எங்களிடம் தெரிவித்தார்கள் என்று விளக்கினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3233

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘நிச்சயமாக, அவர் தம் இரட்சகனின் சான்றுகளில் பெரியதைக் கண்டார்’ என்னும் (திருக்குர்ஆன் 53:18) இறைவசனத்தின் பொருள், ‘நபி(ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீலை – அடிவானத்தை அடைத்துக் கொண்ட ஒரு பச்சை விரிப்பின் மீது (அல்லது அவர் தன்னுடைய இறக்கையை விரித்தபடி அதனால் அடிவானத்தை அடைத்து விரித்தபடி நிற்கக்) கண்டார்கள்’ என்பதாகும்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3234

ஆயிஷா(ரலி) அறிவித்தார். “முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள்” என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்துவிட்டான்: எனினும், அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களை, அவர்களின் (அசல்) உருவிலும் (அசல் படைப்பின்) அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3235

மஸ்ரூக்(ரலி) அறிவித்தார். நான் ஆயிஷா(ரலி) அவர்களிடமும், ‘அப்படியென்றால், ‘பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரண்டு முனைகளைப் போல் அல்லது அiதீ விடச் சமீபமாக இருந்தது’ என்னும் (திருக்குர்ஆன் 53:8,9) இறைவசனம் எங்கே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது (குர்ஆனில் ‘அவர் நெருங்கி அருகே வந்தார்” என்பதில் ‘அவர்’ என்பது) ஜிப்ரீல்(அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள்; இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். எனவேதான் அவர் அடிவானத்தையே அடைத்தார்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3236

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் இன்றிரவு இரண்டு பேர்களைக் (கனவில்) கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து கூறினார்கள்: (அந்த இருவர் சார்பாக அவர்களில் ஒருவரான ஜிப்ரீல் என்னிடம் சொன்னார்:) ‘அதோ, அங்கே நெருப்பை மூட்டிக் கொண்டிருப்பவர் நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக் ஆவார். நான் ஜிப்ரீல்; (என்னுடனிருக்கும்) இவர் மீக்காயீல் ஆவார். என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3237

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3238

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “(வானவர் ஜிப்ரீல் அவர்கள் முதன் முதலாக ஹிரா குகையில் எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) கொண்டு வந்தார்.) பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) வருவது நின்று போய்விட்டது. (அந்தக் கால கட்டத்தில் ஒரு முறை) நான் (பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். உடனே, என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன். அங்கே ‘ஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (இருந்த பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாம் விட்டேன். அதன் விளைவாக (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்து விட்டேன். பிறகு, (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, ‘எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள்” என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப்பட்டது. அப்போது அல்லாஹு தஆலா, ‘(போர்வை) போர்த்திக் கொண்டிருப்பவரே! எழுந்திருங்கள். பிறகு (அல்லாஹ்வின் தண்டனை குறித்து, மக்களை) அச்சுறுத்தி எச்சரியுங்கள். மேலும், உங்களுடைய இறைவனின் பெருமையை எடுத்துரையுங்கள். மேலும், உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும், (சிலைகள் எனும்) அசுத்தத்தை வெறுத்து விடுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 74: 1-5) வசனங்களை அருளினான். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3239

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் (மிஅராஜ் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா அவாக்ளை ‘ஷனூஆ’ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு (கோதுமை) நிறமுடைய உயரமான, சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈசா அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த, தொங்கலான தலைமுடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் பெரும் பொய்யனான) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. நீங்கள் அவனை (தஜ்ஜாலை)ச சந்திக்கவிருப்பதில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

“தஜ்ஜால் உள்ளே நுழைந்து விடாமல் மதீனா நகரத்தை வானவர்கள் காவல் காப்பார்கள்” என்று நபி(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3240

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமை வாழ்வில்) அவரின் இருப்பிடம் (எதுவென்று) காலையிலும், மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். அதாவது, அவர் சொர்க்கவாசியாக இருந்தால், சொர்க்கவாசிகளின் இருப்பிடமும், அவர் நரகவாசியாக இருந்தால், நரகவாசியின் இருப்பிடமும் (எடுத்துக் காட்டப்படும்) என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3241

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நான் (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன். என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3242

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தபோது அவர்கள், ‘நான் தூங்கிக் கொண்டிருந்தபோது (கனவில்) என்னை சொர்க்கத்தில் கண்டேன். அப்போது (அங்கிருந்த) அரண்மனை ஒன்றின் பக்கத்தில் ஒரு பெண் (உலகில் இறைவணக்கம் புரிபவளாய் இருந்து வந்ததைக் குறிக்கும் வகையில் தன் அழகையும் பொலிவையும் இன்னும் அதிகரித்துக் கொள்ளவும்) உளூச் செய்து கொண்டிருந்தாள். நான், ‘இந்த அரண்மனை யாருடையது?’ என்று (ஜிப்ரீலிடம்) கேட்டேன். ‘உமர் இப்னு கத்தாப் அவர்களின்து” என்று (ஜிப்ரீல் அவர்களும் மற்றும் அங்கிருந்த வானவர்களும்) பதிலளித்தார்கள். அப்போது எனக்கு உமரின் ரோஷம் நினைவுக்கு வந்தது. உடனே, அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட உமர்(ரலி) அழுதார்கள். பிறகு, ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்?’ என்று கேட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3243

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (சொர்க்கத்திலுள்ள) கூடாரம் என்பது நடுவில் துளையுள்ள ஒரு முத்தாகும். அது வானத்தில் முப்பது மைல் தொலைவுக்கு உயர்ந்திருக்கும். அதன் ஒவ்வொரு மூலையிலும் இறைநம்பிக்கையாளனுக்குத் துணைவியர் இருப்பர். அவர்களை மற்றவர்கள் பார்க்க முடியாது. என (அபூ மூஸா) அப்துல்லாஹ் இப்னு கைஸ் அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

(மற்றோர் அறிவிப்பின்படி) அறிவிப்பாளர் அபூ இம்ரான்(ரஹ்), ‘அறுபது மைல்” என்று கூறுகிறார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3244

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் (கற்பனையிலும்) உதித்திராத இன்பங்களை என் நல்லடியார்களுக்காக நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று அல்லாஹ் கூறினான். நீங்கள் விரும்பினால், ‘மனிதர்கள் எவரும் தமக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண் குளிர்ச்சி (தரும் சொர்க்கத்து இன்பங்)களை அறிய மாட்டார்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 32:17) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3245

இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்: சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகிற அணியினரின் தோற்றம் பௌர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும். சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்; மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள். அங்கு அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலானவையாக இருக்கும். அவர்களின் (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும். (அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும். (அங்கே) அவர்களின் வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும். அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜை (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும். (சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது. அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3246

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சொர்க்கத்தில் நுழைகிற முதல் அணியினர் பௌர்ணமி இரவின் (ஒளிரும்) சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே வருபவர்கள் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களின் எந்த மன வேறுபகுதி இருக்காது; எந்த விதக் குரோதமும் இருக்காது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருத்தியுடைய காலின் எலும்பு மஜ்ஜையும் அவளுடைய (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவளுடைய பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். அவர்கள் காலையும் மாலையும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் நோயுற மாட்டார்கள். அவர்களுக்கு மூக்குச் சளியோ, எச்சிலோ வராது. அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலும், வெள்ளியாலும் ஆனவை. அவர்களின் சீப்புகள் தங்கத்தால் ஆனவை. அவர்களின் தூப கலசங்களின் எரிபொருள் அம்லாக இருக்கும். அவர்களின் வியர்வை (நறுமணத்தில்) கஸ்தூரியாக இருக்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3247

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என் சமுதாயத்தாரிலிருந்து எழுபதாயிரம் பேர் அல்லது எழு நூறாயிரம் பேர் (விசாரணையின்றி சொர்க்கத்தில்) நுழைவார்கள்: அவர்களில் கடைசி நபர் (சொர்க்கம்) புகாத வரை அவர்களில் முதல் நபர் (சொர்க்கம்) புக மாட்டார். அவர்களின் முகங்கள் பௌர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவைப் போலிருக்கும். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3248

அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் பட்டை (அணியக் கூடாது என்று) தடை செய்து வந்தார்கள். மக்களோ, அந்த அங்கி(யின் தரத்தை மற்றும் மென்மை)யைக் கண்டு வியந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (என் தோழர்) ஸஅத் இப்னு முஆதுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக் குட்டைகள் (தரத்திலும் மென்மையிலும்) இதைவிட உயர்ந்தவை” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3249

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் பட்டுத் துணி ஒன்று கொண்டு வரப்பட்டது. மக்கள் அதன் தரத்தையும் மென்மையையும் பார்த்து வியப்படையலானார்கள். (இதைக் கண்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு சொர்க்கத்தில் கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதைவிடச் சிறந்தவை” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3250

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3251

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. என அனஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3252

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர், (அதில்) நூறாண்டுகள் சென்று கொண்டேயிருப்பார். (ஆயினும், அது முடிவடையாமல் நீண்டு கொண்டே செல்லும்.) நீங்கள் விரும்பினால், ‘(சொர்க்கவாசிகள்) நீண்ட நிழலில் இருப்பார்கள்” என்னும் (திருக்குர்ஆன் 56:30) இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3253

உங்களில் ஒருவருக்கு சொர்க்கத்தில் ஒரு வில்லின் அளவிற்கு இடம் கிடைப்பது சூரியன் எந்த அளவு நிலப் பரப்பின் மீது உதிக்கிறதோ, எந்த அளவு நிலப் பரப்பிலிருந்து மறைகிறதோ அந்த அளவு நிலப்பரப்பை விடச் சிறந்ததாகும்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3254

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பௌர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் ‘ஹூருல் ஈன்’ எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3255

பராஉ(ரலி) அறிவித்தார். (தம் மகன்) இப்ராஹீம்(அலை) அவர்கள் மரணமடைந்து பொழுது நபி(ஸல்) அவர்கள், ‘பாலூட்டும் செவிலி ஒருத்தி சொர்க்கத்தில் இவருக்குக் கிடைப்பாள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3256

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். “சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டே) அப்படிப் பார்ப்பார்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றவர்களேயாவர்” என பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3257

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ‘ரய்யான்’ என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3258

அபூ தர்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தார்கள். அப்போது (முஅத்தின் லுஹர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முறபட்ட போது), ‘வெப்பம் தணியட்டும். பிறகு, தொழலாம்” என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும், ‘வெப்பம் தணியட்டும்” என்று – சிறு குன்றுகளின் நிழல் நீண்டு விழும் வரை – கூறினார்கள். பிறகு, ‘தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3259

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சின் காரணமாகவே உண்டாகிறது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3260

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நரகம் தன் இறைவனிடம், ‘என் இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே” என்று முறையிட்டது. எனவே, அல்லாஹ் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர்காலத்திலும் மற்றொரு மூச்சு கோடைக் காலத்திலுமாக இரண்டு மூச்சுகள்விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவை தாம் நீங்கள் கோடைக் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர்காலத்தில் அனுபவிக்கும் கடுங்குளிரும் ஆகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3261

அபூ ஜம்ரா அள்ளுபயீ(ரஹ்) அறிவித்தார். நான் (மார்க்க அறிவு பெறுவதற்காக) மக்காவில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் அமர்வது வழக்கம். (ஒரு முறை) என்னைக் காய்ச்சல் பீடித்தது. அப்போது, இப்னு அப்பாஸ்(ரலி) சொன்னார்கள். ‘ஸம்ஸம்’ தண்ணீரைப் பயன்படுத்தி உன் காய்ச்சலைத் தணித்துக் கொள் ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இந்தக் காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் தான் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள்.. (அறிவிப்பாளர் ஹமமாம்(ரஹ்) சந்தேகத்துடன் கூறுகிறார்கள்:)… அல்லது ஸம்ஸம் தண்ணீரைக் கொண்டு தணித்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3262

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” காய்ச்சல், நரகத்தின் கடுமையான வெப்பத்தால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள். என ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3263

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3264

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாகிறது. எனவே, அதைத் தண்ணீரால் தணித்துக் கொள்ளுங்கள். என இப்னு உமர்(ரலி) அவர் அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3265

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே” என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3266

யஃலா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்ற வண்ணம், ‘(குற்றவாளிகள் நரகத்தின் காவலரை நோக்கி) ‘யா மாலிக்’ – (‘மாலிக்கே!’) என்று அழைப்பார்கள்” என்னும் (திருக்குர்ஆன் 43:77ம்) இறைவசனத்தை ஓதுவதை கேட்டிருக்கிறேன்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3267

அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார். உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம், ‘நீங்கள் இன்னாரிடம் (உஸ்மான்(ரலி) அவர்களிடம்) வந்து பேசியிருக்கக் கூடாதா? (அவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்கள் ஆயிற்றே!)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘நான் உங்கள் எதிரில் உங்களக்குக் கேட்கும்படி (பொதுவான விஷயங்களை)யே தவிர அவர்களிடம் பேசுவதில்லை என்பதை நீங்கள் பார்க்கவே செய்கிறீர்கள். நான் அவர்களிடம் (அரசியல் குழப்பம் குறித்துப் பேசுவதாயிருந்தால் கலகத்திற்குக்) கதவைத் திறந்து விடாமல் இருப்பதற்காக இரகசியமாகவே பேசுகிறேன். (ஏனெனில், குழப்பத்தின்) கதவைத் திறந்த முதல் ஆள் நானாக இருக்க விரும்பவில்லை. மேலும், ஒருவர் எனக்குத் தலைவராக (ஆணையிடும் அதிகாரத்தில்) இருப்பதானால் அவரை மக்களில் சிறந்தவர் என்று நான் சொல்ல மாட்டேன். (அதுவும்) அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ஒரு விஷயத்தை நான் செவியுற்ற பிறகு (அப்படி) ஒருபோதும் நான் சொல்ல மாட்டேன்” என்று கூறினார்கள். மக்கள், ‘நபி(ஸல்) அவர்கள் என்ன சொல்லக் கேட்டீர்கள்?’ என்று வினவினார்கள். அதற்கு அவர்கள், ‘நான் நபி(ஸல்) அவர்கள் இப்படிச் சொல்லக் கேட்டேன்” என்றார்கள்.

மறுமை நாளில் ஒருவர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார். அப்போது அவரின் குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும். கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார். அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்று கூடி, ‘இன்னாரே! உமக்கேன் இந்த நிலை? நீர் (உலக வாழ்வின் போது) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு, தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்க வில்லையா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன்; ஆனால், அந்த நற்செயலை நான் செய்யவில்லை. தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன்; ஆனால், அந்தத் தீமையை நானே செய்து வந்தேன்” என்று கூறுவார்.

இந்த நபிமொழி மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்படுகிறது.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3268

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது. எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஒரு செயலைச் செய்யாமலிருக்க, அதைச் செய்தது போன்று அவர்களுக்கு பிரமையூட்டப்பட்டது. இறுதியில் ஒரு நாள், அவர்கள் பிரார்த்தனை செய்த வண்ணமிருந்தார்கள். பிறகு சொன்னார்கள்; ‘என் (மீது செய்யப்பட்டுள்ள சூனியத்திற்கான) நிவாரணம் எதில் உள்ளதோ அதை எனக்கு அல்லாஹ் அறிவித்துவிட்டதை நீ அறிவாயாக? என்னிடம் (கனவில்) இரண்டு பேர் (இரண்டு வானவர்களான ஜிப்ரீலும், மீக்காயிலும்) வந்தனர். அவர்களில் ஒருவர் (ஜிப்ரீல்) என் தலைமாட்டில் அமர்ந்தார். மற்றொருவர் (மீக்காயில்) என்னுடைய கால்மாட்டில் அமர்ந்தார். ஒருவர் மற்றொருவரிடம் (மீக்hயில் ஜிப்ரீலிடம்), ‘இந்த மனிதரைப் பீடித்துள்ள நோய் என்ன?’ என்று கேட்டார். மற்றொருவர் (ஜிப்ரீல்), ‘இவருக்கு சூனியம் வைக்கப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார். அதற்கு அவர், ‘இவருக்கு சூனியம் வைத்தது யார்?’ என்று கேட்க, (ஜிப்ரீல்) அவர்கள், ‘லபீத் இப்னு அஃஸம் (என்னும் யூதன்)” என்று பதிலளித்தார். ‘(அவன் சூனியம் வைத்தது) எதில்?’ என்று அவர் (மீக்காயில்) கேட்க அதற்கு, ‘சீப்பிலும், (இவரின்) முடியிலும், ஆண் (பேரீச்சம்) பாளையின் உறையிலும்” என்று (ஜிப்ரீல்) பதிலளித்தார். அதற்கு அவர், ‘அது எங்கே இருக்கிறது” என்று கேட்க, ‘(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) ‘தர்வான்’ எனும் கிணற்றில்” என்று பதிலளித்தார்கள்.

(இதைச் சொல்லி முடித்த) பிறகு, நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றை நோக்கிப் புறப்பட்டார்கள்; பிறகு திரும்பி வந்தார்கள். திரும்பி வந்தபோது என்னிடம், ‘அந்தக் கிணற்றிலிருக்கும் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் உள்ளன” என்று கூறினார்கள். நான், ‘அதைத் தாங்கள் வெளியே எடுத்தீர்களா” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இல்லை. என்னை அல்லாஹ் குணப்படுத்திவிட்டான். (அதை வெளியே எடுத்தால்) அது மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பி விடும் என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள். பிறகு, அந்தக் கிணறு தூர்க்கப்பட்டுவிட்டது.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3269

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சிலும், ‘இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது. எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு’ என்ற போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகிறான். அவர் (அவனுடைய போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது. அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3270

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடம் காலை விடியும் வரை (தொழுகைக்கும் எழுந்திருக்காமல்) இரவில் தூங்கிய ஒரு மனிதரைப் பற்றிக் கூறப்பட்டது. அதற்கு அவர்கள், ‘அந்த மனிதரின் இரண்டு காதுகளிலும் – அல்லது அவரின் காதில் – ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3271

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒருவர் தன் வீட்டாரிடம் (உடலுறவு கொள்ள) வந்து, ‘பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால் – இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகியிருக்கச் செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்” என்று பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப்பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்யமாட்டான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3272

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” சூரியனின் தலைப்பகுதி உதயமாம்விட்டால் அது முழுமையாக வெளிப்படும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். சூரியனின் தலைப் பகுதி மறைந்துவிட்டால் அது (முழுமையாக) மறைந்து விடும் வரை தொழுகையைவிட்டு விடுங்கள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3273

நபி(ஸல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள்: மேலும், சூரியன் உதிக்கிற நேரத்திலும் அது மறைகிற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது, ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கிடையே உதிக்கிறது.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3274

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் (விலம்க் கொள்ள) மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் (மீண்டும் விலக) மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவன்தான் ஷைத்தான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3275

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ரமளானுடைய ஸகாத் பொருளைப் பாதுகாத்திடும் பொறுப்பை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது (இரவில்) ஒருவன் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே, நான் அவனைப் பிடித்துக் கொண்டேன்; ‘உன்னை அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்று முறையிடுவேன்” என்று கூறினேன். (அறிவிப்பாளர் முழு நிகழ்ச்சியையும் விபரமாகச் சொல்கிறார்..) இறுதியில் அவன், ‘நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது ஆயத்துல் குர்ஸீயை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால்) உங்களுடன் பாதுகாவலர் (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார். காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான்” என்று என்னிடம் சொன்னான். (இதை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது,) ‘அவன் பொய்யனாயிருந்தும், உங்களிடம் உண்மை பேசியுள்ளான். அவன் ஷைத்தான் தான்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3276

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, ‘இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?’ என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், ‘உன் இறைவனைப் படைத்தவர் யார்?’ என்று கேட்கிறான். இந்தக் (கேள்வி கேட்கும்) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலம்க் கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3277

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3278

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மூஸா(அலை) அவர்க்ள தம் பணியாளரிடம் (யூஷஉபின் நூன் (அலை) அவர்களிடம்) ‘நம்முடைய சிற்றுண்டியைக் கொண்டு வா” என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையின் அருகில் தங்கியிருந்தபோது நான் மீனை மறந்தே போய் விட்டேன். அதை ஷைத்தான் தான் எனக்கு மறந்து போகச் செய்துவிட்டான்” (திருக்குர்ஆன் 18:62, 63) என்று கூறினார். அல்லாஹ் கட்டளையிட்ட (இரண்டு நதிகள் சங்கமிக்கும்) இடத்தைக் கடக்கிற வரை மூஸா(அலை) அவர்கள் களைப்பை உணரவில்லை. என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3279

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கிழக்குத் திசையை நோக்கி சைகை காட்டியபடி, ‘குழப்பம் இங்கு தான். குழப்பம் இங்கு தான். ஷைத்தானின் கொம்பு உதயமாகும். இடத்திலிருந்து… (அது தோன்றும்)” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3280

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) உன் கதவை மூடி விடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) உன்னுடைய விளக்கை அணைத்து விடு. 76ஹ (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன்னுடைய பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3281

ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். -உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது. (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர்77 அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்” என்றார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், ‘அல்லாஹ் தூயவன் இறைத்தூதர் அவர்களே! (தங்களையா நாங்கள் சந்தேம்ப்போம்?)” என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்.. அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்… என்று நான் அஞ்சினேன்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3282

சுலைமான் இப்னு சுரத்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்துவிட்டது. அவரின் தொண்டை நரம்பு புடைத்தது. உடனே, நபி(ஸல்) அவர்கள், ‘எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும், ‘ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் போருகிறேன்” என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய் விடும்” என்று கூறினார்கள். எனவே, மக்கள் அந்த மனிதரிடம், ‘நபி(ஸல்) அவர்கள், ‘ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு” என்று கூறினார்கள்” எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், ‘எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3283

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் (உடலுறவு கொள்ளச்) செல்லும்போது ‘இறைவா! ஷைத்தானை என்னிடமிருந்து விலகியிருக்கச் செய். எனக்கு நீ அளிக்கிற குழந்தைகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்’ என்று பிரார்த்தித்தால் அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்குமாயின் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைக்க முடியாது. மேலும், அதன் மீது ஷைத்தானுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

வேறொரு வழியாகவும் இதே போன்ற நபிமொழி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3284

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஒரு தொழுகையைத் தொழுதார்கள். பிறகு, ‘ஷைத்தான் எனக்கு முன்னால் வந்து என் தொழுகையைத் துண்டிக்கக் கடுமையாக முயன்றான். ஆனால், அவனை நான் வெற்றி கொள்ளும்படி அல்லாஹ் செய்துவிட்டான்” என்று கூறினார்கள்.

தொடர்ந்து முழு ஹதீஸையும் அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3285

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும்போது ஷைத்தான் சத்தத்துடன் காற்றைவிட்டுக் கொண்டு திரும்பி ஓடி விடுகிறான். பாங்கு சொல்லி முடித்து விடும்போது திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் திரும்பி ஒடி விடுகிறான். இகாமத் சொல்லி முடித்து விடும்போது திரும்பி வருகிறான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதனின் உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, ‘இப்படி இப்படியெல்லாம் நினைத்துப் பார்” என்று கூறுகிறான். (அதன் விளைவாக) தொழுகையாளிக்கு நாம் மூன்று ரக்அத்துகள் தொழுதோமா, நான்கு ரக்அத்துகள் தொழுதோமா என்று தெரியாமல் போய் விடுகிறது. மூன்று ரக்அத்துக்கள் தொழுதோமா, நான்கு ரக்அத்துக்கள் தொழுதோமா என்று தொழுகையாளிக்குத் தெரியாமல் போய்விட்டால் அவர் (மறதிக்குப் பரிகாரமாக) சஹ்வுடைய இரண்டு சஜ்தாக்கள் செய்ய வேண்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3286

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவனும் பிறக்கும்போது, அவனுடைய இரண்டு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரண்டு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈஸாவைத் தவிர (அவர் பிறந்தபோது அவரை விலாப் பக்கம்) குத்துச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றியிருந்த மெல்லிய சவ்தை; தான் குத்தினான். (அதுதான் அவனால் முடிந்தது.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3287

அல்கமா இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார். நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள், ‘அபுத் தர்தா(ரலி), (இங்கு) வந்து, அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இருக்கிறாரா?’ என்று கேட்டார்” எனச் சொன்னார்கள்.

முகீரா இப்னு மிக்ஸம்(ரலி), ‘அல்லாஹ் தன் தூதரின் நாவினால் ஷைத்தானிடமிருந்து எவரைக் காப்பாற்றினானோ அவர்” என்று அபுத் தர்தா(ரலி) குறிப்பிட்டது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களைத் தான்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3288

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” வானவர்கள் மேகங்களுக்கிடையே (சஞ்சரித்த வண்ணம்) பூமியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசிக் கொள்கிறார்கள். அப்போது ஷைத்தான்கள் (வானவர்களுடைய) வாக்கை (ஒட்டுக்) கேட்கின்றன. பின்னர், (பாட்டிலைக் கவிழ்த்து தோல் பையின் வாயில் வைத்து நீரை ஊற்றும் போது) பாட்டில் (அதில்) பொருத்தப்படுவதைப் போன்று சோதிடனின் காதில் தன் வாயை வைத்து (தாம் ஒட்டுக் கேட்டவற்றை இரகசியமாகக்) கூறி விடுகின்றனர். (இனி நடைபெறவிருக்கும் ஒரு விஷயத்தை சோதிடர்கள் தெரிந்து கொண்டு) அதனுடன் நூற பொய்களை (புனைந்து) சேர்த்து விடுகிறார்கள். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3289

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவிவிட்டால் தம்மால் முடிந்த வரை அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் ‘ஹா’ என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3290

ஆயிஷா(ரலி) அறிவித்தார். உஹுதுப் போர் நடந்தபோது இணைவைப்பவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். உடனே, இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் பாருங்கள்” என்று கத்தினான். முஸ்லிம்களில் முன்னணிப் படையினர் திரும்பிச் சென்று தம் பின்னணிப் படையினருடன் போரிட்டார்கள். அப்போது அங்கு தமக்கருகேயிருந்த தம் தந்தை யமான்(ரலி) (முன்னணிப் படையினரிடம்) சிக்கியதை ஹுதைஃபா(ரலி) பார்த்துவிட்டு, ‘அல்லாஹ்வின் அடியார்களே! இது என் தந்தை! இது என் தந்தை!” என்று (உரக்கக்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் அவரைவிட்டு வைக்கவில்லை. இறுதியில் அவரை (தாக்கிக்) கொன்றுவிட்டார்கள். ஹுதைஃபா(ரலி), ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று கூறினார்கள்.

“ஹுதைஃபா(ரலி) மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் இறக்கும் வரை நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது” என்று உர்வா(ரஹ்) கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3291

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையில் ஒருவர் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அது (திரும்பிப் பார்க்கும் அந்த நேரம்) உங்கள் தொகையிலிருந்து ஷைத்தான் திருட்டுத்தனமாகப் பறித்துக் கொள்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3292

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (அச்சுறுத்தும்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவனவாகும். உங்களில் எவரேனும் அச்சுறுத்தும் தீய கனவைக் கண்டால் அவர் தன் இடப் பக்கத்தில் எச்சில் துப்பட்டும்; அல்லாஹ்விடம் அக்கனவின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோராட்டும். ஏனெனில், (இப்படிச் செய்தால்) அது அவருக்குத் தீங்கு செய்ய முடியாது. என கதாதா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3293

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் – லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக (முறை இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3294

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களின் மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர்(ரலி) அனுமதி கேட்டபோது அப்பெண்கள் அவரச அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர்(ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மம்ழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவரச அவசரமாகப் பர்தா அணிந்தார்களே” என்றார்கள். உமர்(ரலி), ‘எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள் தாம் தகுதியுடையவர்கள் இறைத்தூதர் அவர்களே!” என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) ‘தமக்குத் தாமே பகைவர்களாம்விட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்காக நீங்கள் அஞ்சுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், ‘ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக் கூடியவராகவும் இருக்கிறீர்கள்” என்று பதிலளித்தார்கள். (அப்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில் தான் அவன் செல்வான்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3295

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3296

அபூ ஸஃஸஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) என்னிடம், ‘ஆட்டையும் பாலைவனத்தையும் விரும்புபவராக உங்களை காண்கிறேன். நீங்கள் ஆட்டை மேய்த்துக் கொண்டோ, பாலைவனத்திலோ இருக்க (தொழுகை நேரம் வந்து) நீங்கள் தொழுகைக்காக அழைப்புக் கொடுப்பீர்களாயின் உங்கள் குரலை உயர்த்தி அழையுங்கள். ஏனெனில், தொழுகைக்காக அழைப்பவரின் குரல் ஒலிக்கும் தொலைவு நெடுகவுள்ள ஜின்களும், மனிதர்களும், பிற பொருள்களும் அதைக் கேட்டு அவருக்காக மறுமை நாளில் சாட்சி சொல்கின்றன” என்று கூறிவிட்டு, ‘இதை நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டேன்” என்றார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3297

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மிம்பரின் மீதிருந்து உரையாற்றியபடி, ‘பாம்புகளைக் கொல்லுங்கள். முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (‘துத் துஃப்யத்தைன்’ என்னும்) பாம்பையும் குட்டையான – அல்லது – சிதைந்த வால் கொண்ட (‘அப்தர்’ எனும்) பாம்பையும் கொல்லுங்கள். ஏனெனில், அவையிரண்டும் (கண்) பார்வையை அவித்து விடும்; கருவைக் கலைத்து விடும்” என்று சொல்ல கேட்டேன்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3298

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார் நான் (ஒரு முறை) ஒரு பாம்பைக் கொல்வதற்காக விரட்டிச் சென்று கொண்டிருந்தபோது அபூ லுபாபா(ரலி) என்னைக் கூப்பிட்டு ‘அதைக் கொல்லாதீர்கள்” என்றார்கள். நான், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பாம்புகளைக் கொல்லும்படி உத்திரவிட்டுள்ளார்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘(ஆமாம், உண்மை தான்.) ஆனால், அதன் பிறகு வீடுகளில் வசிக்கும் பாம்புகளை (பார்த்த உடனே) கொல்லவேண்டாமென்று அவர்கள் தடுத்தார்கள். அவை வீட்டில் வசிக்கும் ஜின்களாகும்” என்று பதிலளித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3299

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். அப்போது (நான் பாம்பைக் கொல்ல அதை விரட்டிச் சென்ற போது) என்னை அபூ லுபாபா(ரலி) அவர்களும் ஸைத் இப்னு கத்தாப்(ரலி) அவர்களும் பார்த்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3300

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (விரைவில்) மனிதன் தன் மார்க்கத்தை (குழப்பங்களின் வடிவில் வரும்) சோதனைகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மலைகளின் உச்சிக்கும், மழைத்துளிகள் விழும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் தன் ஆடுகளை (தன்னுடன்) ஓட்டிக் கொண்டு விரண்டோடுவான். (அப்போது) அந்த ஆடுகள் தான் (அவனுடைய) செல்வங்களில் சிறந்ததாக இருக்கும். என அபூ சயித் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3301

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் (நெருப்பை வணங்கும் மஜூஸிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது. குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பாலைவனவாசிகளான ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களிடம் (அடக்கமும் கம்பீரமும் கலந்த) அமைதி காணப்படுகிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3302

உக்பா இப்னு அம்ர் அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி, ‘இறை நம்பிக்கை, அதோ அங்கேயிருக்கும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். அறிந்து கொள்ளுங்கள். கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங்களின் வால்களைப் பிடித்தபடி அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரண்டு கொம்புகளும் உதயமாகும். குழப்பங்கள் தலை தூக்கும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தினரிடையே அவை தோன்றும்” என்றார்கள். 97

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3303

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவேதான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவேதான் கத்துகிறது.) என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3304

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இரவின் முற்பகுதி வந்துவிட்டால் அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால் உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல)விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க மாட்டான். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அறிவிப்பாளர் இப்னு ஜுரைஜ்(ரஹ்) கூறினார்:அதாவு(ரஹ்) எனக்கு அறிவித்ததைப் போன்ற இதே நபிமொழியை ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடமிருந்து கேட்டதாக அம்ர் இப்னு தீனார்(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். ஆனால், அவர்கள் ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள்’ என்னும் வாக்கியத்தை மட்டும் (தம் அறிவிப்பில்) சொல்லவில்லை.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3305

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பனூஇஸ்ராயீல்களில் ஒரு குழுவினர் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள்  என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. நான் அவர்களை எலிகளாக (உருமாற்றப்பட்டுவிட்டதாக)வே கருதுகிறேன். அவற்றுக்கு (முன்னால்) ஒட்டகத்தின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக்) குடிப்பதில்லை. அவற்றுக்கு (முன்பாக) ஆடுகளின் பால் வைக்கப்பட்டால் அவை (அதைக் குடித்து விடும்” என்று நபி(ஸல்) அவர்கள் அவர்கள் சொன்னார்கள்.

இதை நான் கஅபுல் அஹ்பார்(ரலி) அவர்களுக்கு அறிவித்தேன். உடனே அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் இதைச் சொல்ல நீங்கள் கேட்டீர்களா?’ என்று வினவினார்கள். நான், ‘ஆம் (கேட்டேன்)” என்றேன். அவர்கள் (திரும்பத் திரும்பப்) பலமுறை அதே போன்று கேட்டார்கள். ‘நான் தவ்ராத்தையா ஓதுகிறேன்? (அதிலிருந்து சொல்வதற்கு?)” என்று கேட்டேன்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3306

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள், ‘பல்லி தீங்கிழைக்கக் கூடியது” என்றார்கள். அதைக் கொல்லும்படி அவர்கள் உத்தரவிட்டு நான் செவியுற்றதில்லை. நபி(ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டதாக ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3307

ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பல்லிகளைக் கொல்லும் படி தமக்கு உத்தரவிட்டதாக உம்மு ஷரீக்(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3308

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” முதுகில் இரண்டு வெள்ளைக் கோடுகள் கொண்ட (துத்துஃப்யத்தைன் என்னும்) பாம்பைக் கொல்லுங்கள். ஏனெனில், அது (கண்) பார்வையை அவித்துவிடும்; கர்ப்பத்தைக் கலைத்துவிடும். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஹம்மாத் இப்னு ஸலமா(ரஹ்) இதையே உஸாமா(ரஹ்) வழியாக அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3309

ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட (அப்தர் எனும்) பாம்பைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். மேலும், ‘அது கண் பார்வையைப் போக்கி விடும்; கருவைச் சிதைந்து போகச் செய்து விடும்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3310

இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) பாம்புகளைக் கொன்று வந்தார்கள். பிறகு (அவற்றைக் கொல்வதைத்) தடை செய்தார்கள். (அதற்கு விளக்கம் கூறும் வகையில்) அவர்கள் சொன்னார்கள்: நபி(ஸல்) அவர்கள் தங்களின் (வீட்டுச்) சுவர் ஒன்றை இடித்தார்கள். பாம்புச் சட்டையொன்றை அதில் கண்டார்கள். உடனே, ‘அந்தப் பாம்பு எங்கேயிருக்கிறது என்று பாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள். மக்கள் (தேடிப் பார்த்து அதைக்) கண்டு பிடித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அதைக் கொன்று விடுங்கள்” என்றார்கள். எனவேதான் நான் அவற்றைக் கொன்று வந்தேன்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3311

(இந்த நிலையில்) அபூ லுபாபா(ரலி) அவர்களை சந்தித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் மெல்லிய வெண்ணிறப் பாம்புகளைக் கொல்லாதீர்கள். குட்டையான (அல்லது சிதைந்த) வால் கொண்ட, முதுகில் இரண்டு வெள்ளை நிறக் கோடுகள் கொண்ட பாம்புகளைத் தவிர. ஏனெனில், அவை (கருவிலுள்ள) குழந்தையைச் சிதைத்துவிடும்; பார்வையைப் போக்கிவிடும். எனவே, அவற்றைக் கொன்றுவிடுங்கள்’ எனக் கூறினார்கள் என எனக்கு அறிவித்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3312

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார். இப்னு உமர்(ரலி) பாம்புகளைக் கொன்று வந்தார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3313

அப்போது அபூ லுபாபா(ரலி) இப்னு உமர்(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் வீடுகளில் வசிக்கும் (மெல்லிய, வெண்ணிறப்) பாம்புகளைக் கொல்வதைத் தடை செய்தார்கள்” என்று தெரிவித்தார்கள். எனவே, இப்னு உமர்(ரலி) அவற்றைக் கொல்வதை நிறுத்திவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3314

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” தீங்கிழைக்கக் கூடிய ஐந்து (பிராணிகள்) எத்தகையவையெனில் அவற்றை ‘ஹரம்’ எனும் பனித எல்லைக்குள் கொன்றாலும் குற்றம் ஏதுமில்லை. எலி, தேள், பருந்து, காக்கை, வெறி, நாய் ஆகியன தாம் அவை. என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3315

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஐந்து பிராணிகள் எத்தகையவையெனில் அவற்றை இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் கொன்றுவிட்டாலும் அவர்மீது குற்றமெதுவும் இல்லை. தேள், எலி, வெறி நாய், காக்கை, பருந்து ஆகியன தாம் அவை. என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3316

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3317

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதருடன் (மினாவில்) ஒரு குகையில் (தங்கி) இருந்தோம். அப்போது, ‘தொடர்ந்து அனுப்பப்படும் காற்றுகளின் மீது சத்தியமாக!” என்னும் அத்தியாயம் (77) அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் (திரு) வாயிலிருந்து (அவர்கள் ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று, தன் புற்றிலிருந்து வெளிப்பட்டது. நாங்கள் அதைக் கொல்ல விரைந்தோம. அது எங்களை முந்திக் கொண்டு தன் புற்றுக்குள் நுழைந்துவிட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைக் போல் அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது” என்றார்கள்.

வேறொரு வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘நாங்கள் அந்த அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்களின் (திரு) வாயிலிருந்து புத்தம் புதியதாகக் கேட்டுக் கொண்டிருந்தோம்” என்று கூறினார்கள்.

இதை அறிவிப்பாளர் இஸ்ராயீல்(ரஹ்) அவர்களைப் போன்றே அபூ அவானா(ரஹ்) அவர்களும் முகீரா இப்னு மிக்ஸம்(ரஹ்) அவர்களிடமிருந்து அறிவித்திருக்கிறார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3318

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருபெண், பூனையொன்றைக் கட்டி வைத்தாள். அதற்கு அவள் தீனி போடவுமில்லை; பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக் கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதன் காரணத்தால் அவள் நரகம் புகுந்தாள். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) வழியாகவும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3319

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அவர் தம் (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. அப்போது அல்லாஹ் அவருக்கு, ‘உங்களைக் கடித்தது ஒரேயொர் எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?)” என்று வஹீ (இறைச்செய்தி) (இறைச்செய்தி) அறிவித்(து அவரைக் கண்டித்)தான்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3320

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் எவருடைய பானத்திலாவது ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும்; பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3321

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” விபசாரியான ஒரு பெண், ஒரு கிணற்றின் விளிம்பில் தன்னுடைய நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள். அந்த நாயைத் தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக் கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி (கிணற்று) நீரை இறைத்து அதற்குக் கொடுத்தாள். எனவே, அது பிழைத்தது. அவள் ஓர் உயிருக்குக் காட்டிய இந்தக் கருணையினால் அவளுக்கு (பாவ) மன்னிப்பு வழங்கப்பட்டது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3322

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நாயோ உருவப் படமோ உள்ள வீட்டில் (இறைவனின் கருணையைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்  என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3323

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3324

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” நாய் வைத்திருப்பவரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு ‘கீராத்’ அளவு குறைந்து விடுகிறது; விவசாயப் பண்ணையைப் பாதுகாக்கும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பாகம் 3, அத்தியாயம் 59, எண் 3325

சாயிப் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார். “விவசாய நிலத்தைப் பாதுகாக்கவோ அல்லது கால்நடைகளைப் பாதுகாக்கவோ அல்லாமல் (தேவையின்றி) நாய் வைத்திருப்பவரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு குறைந்து விடுகிறது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என சுஃப்யான் இப்னு அபீ ஸுஹைர்(ரலி) சொல்ல கேட்டேன். உடனே, நான் அவர்களிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் இதைக் கேட்டீர்களா?’ என்று வினவினேன். அதற்கு அவர்கள், ‘ஆம்; இந்த கிப்லா(இறை)யில்லம் கஅபா)வின் அதிபதியின் மீது சத்தியமாக!” என்று பதிலளித்தார்கள்.

This entry was posted in புகாரி and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.