தாகூத்துகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்

‘தாகூத்’ என்றால், அல்லாஹ் அல்லாமல் வணங்கப்படக் கூடியவையும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் வழிபடாமல், வணக்கத்தாலும், வழிபாட்டாலும் பின்பற்றுவதாலும் வேறொருவரைக் கொண்டு திருப்தியடைவதும் ஆகும். அல்லாஹ்வுக்கு அடிபணியுமாறும், தாகூத்துகளை விட்டு விலகி விடுமாறும் தத்தமது கூட்டத்தாருக்குக் கட்டளையிடுமாறு ரஸூல்மார்களை அல்லாஹ் அனுப்பினான். இதுபற்றிப் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“(உலகின் பல பாகங்களில் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அவர்கள் அம்மக்களை நோக்கி) ‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழிகெடுக்கும்) தாகூத்து (ஷைத்தான்)களை விட்டு விலகிக் கொள்ளுங்கள்’ (என்று கூறிச் சென்றார்கள்.)” (16:36)

தாகூத்துகள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களில் முன்னனியில் இருப்பவர்கள் ஐவர்.

1. அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அடிபணியுமாறு அழைப்பு விடுக்கும் ஷைத்தான்:- இதுபற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானுக்கு வழிபடக் கூடாது; நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்க விரோதி என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?” (36:60)

2. அல்லாஹ்வுடைய சட்டத்தை மாற்றுகின்ற அக்கிரமக்கார நீதிபதி:- இவன் இஸ்லாத்துக்கு மாறான சட்டமொன்றை ஏற்படுத்துகின்றவனைப் போலாவான். அல்லாஹ் அங்கீகரிக்காதவற்றை மார்க்கமாக்கக் கூடிய இணைவைப்பவர்களை மறுத்து பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்.

“அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணை(தெய்வங்)களும் அவர்களுக்கு இருக்கின்றனவா?” (42:21)

3.ல்லாஹ் அருளாததைக் கொண்டு தீர்ப்பளிக்கும் நீதிபதி:- ‘அல்லாஹ் அருளிய சட்டம் பொருத்தமற்றது’ என்று நம்புதல், அல்லது அவனுடைய சட்டமல்லாததைக் கொண்டு தீர்ப்பளிப்பதை ஆகுமாக்குதல் போன்ற செயல்களையே இவன் தனது தொழிலாகக் கொள்வான். இதுபற்றிக் குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

“எவர்கள் அல்லாஹ் அருளியதைக் கொண்டு தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாகக் காஃபிர் (நிராகரிப்பவர்)களே!” (5:44)

4. அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் மறைவானவற்றை அறியும் ஆற்றலுண்டு என்று கூறுதல்:- இதுபற்றிக் குர்ஆன் கூறுவதாவது:

“நீர் கூறும்: வானங்களிலோ, பூமியிலோ மறைந்திருப்பவற்றை அல்லாஹ்வைத்தவிர மற்றெவரும் அறியமாட்டார்” (27:65)

5. அல்லாஹ் அல்லாத ஒருவனுக்கு மனிதர்கள் அடிபணிந்து, அவனிடம் தமது தேவைகளை வேண்டுதலும், அவர்களின் வழிபாட்டை (வணங்கப்பட்ட) அவன் திருப்தியாக ஏற்றுக் கொள்வதுமாகும்:- இதுபற்றிக் குர்ஆன் கூறுவதாவது:

“அவர்களில் எவனாவது ‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் ஓர் ஆண்டவன் தான்’ என்று கூறினால் அவனுக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அக்கிரமக்காரர்களுக்கு (அவர்கள் எவராயினும்) இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்” (21:29)

அறிந்துகொள்! ஒரு முஃமின் தனது ஈமானில் உறுதியாக இருப்பதற்காக தாகூத்துகளை நிராகரிப்பது அவன் மீது கடமையாகும். குர்ஆன் இதுபற்றிப் பின்வருமாறு கூறுகின்றது.

“எவன் ஷைத்தானை நிராகரித்து விட்டு, அல்லாஹ்வை விசுவாசிக்கிறானோ, அவன் நிச்சயமாக அறுபடாத பலமானதொரு கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டான். அல்லாஹ் செவியுறுவோனும் அறிவோனுமாக இருக்கின்றான்” (2:256)

அல்லாஹ் அல்லாதவர்களுக்கு அடிபணிவதிலிருந்து முற்றாக நீங்கி, அல்லாஹ்வுக்கு அடிபணிவதால் மட்டுமே சரியான பயனை அடைய முடியும் என்பதை இவ்வசனம் (2:256) உணர்த்திற்று. பின்வரும் நபிமொழியும் இதுபற்றிக் கூறுகின்றது.

‘எவனொருவன் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறி அல்லாஹ் அல்லாத வணங்கப்படக் கூடியவற்றை நிராகரிக்கின்றானோ, அவனுடைய பொருளும், அவனுடைய இரத்தமும் (நீதமின்றி ஓட்டப்படுவது) ஹறாமாகிவிடும்’ ஆதாரம்: முஸ்லிம்

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.