இஸ்லாம் அனுமதிக்கின்ற வஸீலா

“மூமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து அவனிடம் செல்வதற்குரிய வஸீலாவை (வழியை)த் தேடிக் கொள்ளுங்கள்” (5:35) என்று அல்லாஹ் கூறுகிறான்.

‘அல்லாஹ்வுக்கு வழிபடுவது கொண்டும், அவனுக்குத் திருப்தியை அளிக்கக்கூடிய வணக்கங்களைப் புரிந்து கொண்டும் அல்லாஹ்வின் பால் நெருங்குங்கள்’ என்பதே மேற்காட்டிய வசனத்திலுள்ள வஸீலா என்ற சொல்லின் அர்த்தமாகும் என்பதாக கதாதா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதுதான் அல்குர்ஆன் கட்டளையிடுகின்ற அங்கீகரிக்கப்பட்ட ‘வஸீலா’.

நபி (ஸல்) அவர்களும் இதனையே கூறியுள்ளார்கள். இதனைக் கொண்டே நபித்தோழர்கள் செயல்பட்டார்கள். வஸீலாவுக்குப் பல பிரிவுகள் உண்டு. அவற்றுள் மிக முக்கியமானவற்றில் சில பின்வருமாறு:-

ஈமானைக் கொண்டு வஸீலாத் தேடுதல். இதுபற்றி அல்லாஹ் கூறுவதாவது:-

“எங்கள் இறைவனே! ‘உங்கள் இறைவனை விசுவாசியுங்கள்’ என்று எங்களை ஈமானினளவில் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியுற்று, நாங்களும் அவ்வாறே ‘ஈமான்’ கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் பாபங்களிலிருந்து எங்களை விடுவித்து (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரிக்கும்படிச் செய்வாயாக!” (3:193)

அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது கொண்டு வஸீலாத்தேடுதல்:- யூனுஸ் (அலை) அவர்களை மீன் விழுங்கிய போது அவர்கள் செய்த துஆவைப் போன்று இது அமைகின்றது.

“(அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்தோம்; மீன் வயிற்றின்) இருளிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘உன்னைத்தவிர வேறெந்த நாயனுமில்லை; நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அக்கிரமக்காரர்களில் ஒருவனாகி விட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!) என்று பிரார்த்தனை செய்தார்.

நாம் அவருடைய துஆவை அங்கீகரித்து (அவருடைய மிக்க துக்ககரமான) கஷ்டத்திலிருந்தும், அவரை நாம் இரட்சித்துக் கொண்டோம். இவ்வாறே (கஷ்டத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) மூமின்களையும் நாம் இரட்சித்துக் கொள்வோம்” (21:87,88)

அல்லாஹ்வுடைய அழகுத் திருநாமங்களைக் கொண்டு அவனிடம் வஸீலாத் தேடுதல்:-
இதுபற்றி அல்லாஹ் கூறுவது பின்வருமாறு அமைந்துள்ளது.

“அல்லாஹ்வுக்கு மிக்க அழகான திருநாமங்கள் உண்டு. ஆகவே அவற்றைக் கொண்டே அவனை நீங்கள் அழையுங்கள்” (7:180)

அல்லாஹ்வுடையப் பெயர்களைக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்துள்ளது இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

‘அஸ்அலுக பி-குல்லி இஸ்மின் ஹுவலக’ (அல்லாஹ்வே! உனக்கு சொந்தமான எல்லாப் பெயர்களைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன். ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)

அல்லாஹ்வுடைய ஸிபத்து (பண்பு)களைக் கொண்டு வஸீலாத் தேடுதல்:- நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொண்டு கேட்ட ஒரு துஆ பின்வருமாறு அமைந்துள்ளது.

‘யாஹய்யு, யாகய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு’ (உயிருள்ளவனே! என்றும் நிலையானவனே! உன்னுடைய ரஹ்மத்தை (கிருபையை)க் கொண்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.) ஆதாரம்: திர்மிதி.

தொழுகை, பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தல், கடமைகளைப் பேணுதல், அமானிதங்களைப் பேணுதல், தருமங்கள் கொடுத்தல், அல்லாஹ்வை திக்ரு செய்தல், குர்ஆன் ஓதல், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்லல் போன்ற ஸாலிஹான அமல்களைக் கொண்டு வஸீலாத் தேடுதல். நபி (ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் நேசிப்பதும் இதல்லாத ஏனைய ஸாலிஹான அமல்களைச் செய்வதும் அதில் அடங்கும். ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெற்றுள்ள பின்வரும் குகைவாசிகளின் சம்பவம் இதற்குச் சான்றாய் அமைகின்றது.

மூன்று தோழர்கள் ஒருவழியில் சென்று கொண்டிருந்த போது மழைபொழிய ஆரம்பிக்கவே ஒரு குகையினுள் தங்கினர். மழை பெய்து கொண்டிருக்கும் போது, பெரிய கல்லொன்று மலையிலிருந்து உருண்டு விழுந்து குகைவாயிலை அடைத்துக் கொண்டது. அப்பொழுது அவர்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக தாம் செய்த ஸாலிஹான சில அமல்களை முன்னிருத்திஅல்லாஹ்விடம் பிரார்த்தித்தனர்.கூலிக்காரனுடைய கூலியை நேர்மையாகக் கொடுத்ததாக ஒருவரும், பெற்றோர்கள் இருவருக்கும் முறையாகப் பணிவிடை செய்ததாக இரண்டாமவரும், வாய்ப்பேற்பட்ட சமயமொன்றில் விபச்சாரம் ஒன்றிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண்டதாக மூன்றாமவரும் பிரார்த்தித்தனர். ஒவ்வொருவருடைய பிரார்த்தனையின் பின்னும் குகையை மூடிக் கொண்டிருந்த கல் கொஞ்சங்கொஞ்சமாக அகன்று, மூன்றாவது பிரார்த்தனைக்குப் பின் முற்றாகவே அகன்று விட்டது. (இது நீண்ட வரலாற்றின் சுருக்கமாகும்.)

(இது நீண்ட வரலாற்றின் சுருக்கமாகும்.)மது அருந்துதல், விபச்சாரம் செய்தல் போன்ற பாபமான செயல்களை விடுவது கொண்டு வஸீலாத் தேடுதல், மேற்கூறப்பட்ட குகைவாசிகளின் சம்பவத்தில் இது அடங்குவதைக் காணலாம்.

இக்கால முஸ்லிம்கள் ஸாலிஹான அமல்கள் செய்வதையும் அவற்றைக் கொண்டு வஸீலாத் தேடுவதையும் விட்டு விட்டார்கள். அதேவேளை நபி (ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாறாக மரணித்த நல்லடியார்களைக் கொண்டும், அவர்களுடைய அமல்களைக் கொண்டும் அல்லாஹ்விடத்தில் வஸீலாத் தேடுகின்றனர்.

உயிருடனுள்ள ஸாலிஹான நல்லடியார்களைக் கொண்டு வஸீலாத் தேடுதல் அனுமதிக்கப்பட்டதே! பொன்வரும் சம்பவமொன்று இதற்குச் சான்றாய் அமைகின்றது.

கண்பார்வையற்ற ஒருமனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ‘யாரஸூலுல்லாஹ்! எனக்கு கண்பார்வை உண்டாவதற்காக அல்லாஹ்விடம் துஆக் கேளுங்கள்’ என்று கூறினார். அப்பொழுது நபியவர்கள் ‘நீர் விரும்பினால் நான் பிரார்த்திக்கிறேன்; ஆனால் நீர் விரும்பினால் பொறுமையாக இருப்பது உனக்கு மிக நன்று என்று கூறினார்கள். அதற்கு அம்மனிதர் யாரஸூலுல்லாஹ்! நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அப்பொழுது நபி (ஸல்) அவர்கள், அம்மனிதருக்கு ஒழுச் செய்துகொண்டு இரண்டு ரக்கஅத்துக்கள் தொழுதுவிட்டு, பின்வருமாறு துஆக் கேட்கும்படி பணித்தார்கள். துஆவின் அர்த்தமாவது:-

‘அல்லாஹ்வே! ரஹ்மத்துடைய நபியான உனது நபியைக் கொண்டு உன்னை முன்னோக்கி உன்னிடம் கேட்கிறேன். முஹம்மதே! என்னுடைய இறைவன் எனது இந்தத் தேவையை நிறைவேற்றி வைக்க வேண்டுமென்பதற்காக உங்களைக் கொண்டே எனது இறைவனிடம் எனது முகத்தைத் திருப்பியுள்ளேன். அல்லாஹ்வே! நபியவர்கள் எனக்கு ‘ஷபாஅத் செய்யக்கூடியவராயிருக்க நீ ஆக்கி வைப்பாயாக!’ இவ்விதம் அம்மனிதர் துஆக் கேட்கவே, அவர் குணமடைந்தார்’ ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)

நபி (ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும் போது, கண் பார்வையற்ற ஒருவர் தனக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டினார் என்றும், அதனையடுத்து அம்மனிதராகவே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனுடைய நபியினது துஆவைக் கொண்டு அல்லாஹ்வின் பால் முன்னோக்கினார் என்றும், அதனையடுத்து அவருடைய துஆவை அல்லாஹ் ஒப்புக் கொண்டான் என்றும் இந்த ஹதீஸின் மூலம் அறிகிறோம்.

இந்த துஆ நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு மட்டுமே சொந்தமானது. நபியவர்களது மௌத்துக்குப் பின்னால் இவ்விதம் பிரார்த்திப்பதற்கு மார்க்கத்தில் இடமில்லை. ஏனென்றால், ஸஹாபக்கள் இவ்விதம் செய்ததுமில்லை. இந்நிகழ்ச்சிக்குப் பின்னால் வேறெந்த அந்தகரும் இவ்விதம் பிரார்த்தித்துக் குணமடைந்ததுமில்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

This entry was posted in வெற்றியாளர்கள். Bookmark the permalink.