1213. ஹுதைபிய்யா தினத்தன்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்” என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன்” என்று கூறினார்கள்.
1214. (பைஅத்துர் ரிள்வான் என்னும் உறுதிப்பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை பார்த்திருக்கிறேன். பின்பு (ஒரு முறை) அங்கு வந்தேன். அப்போது என்னால் அதனை அறிய முடியவில்லை.
1215. நான், ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அவர்களிடம், ‘ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்” என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், ‘மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள்.
1216. ‘ஹர்ரா’ போரின்போது என்னிடம் ஒருவர் வந்து, ‘அப்துல்லாஹ் இப்னு ஹன்ழலா (ரலி), மக்களிடம் மரணத்தைச் சந்திக்கத் தாயாராயிருக்கும் படி உறுதிமொழி வாங்குகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதிமொழிக்கு)ப் பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்” என்று கூறினேன்.
1217. நான் (ஒருமுறை ஹிஜாஸ் மாகாண ஆளுநர்) ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃபிடம் சென்றேன். அவர் ‘இப்னுல் அக்வஃ! நீங்கள் (மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் அங்கிருந்து) உங்கள் குதிகால்களின் வழியே (கிராமத்திற்குத்) திரும்பிச் சென்றதன் மூலம் கிராமவாசியாக மாறிவிட்டீர்களா?’ என்று கேட்டார். நான், ‘இல்லை ஆயினும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கிராமத்தில் வசிக்க எனக்கு அனுமதியளித்துள்ளார்கள்” என்று சொன்னேன்.