அரசு ஊழியர்கள் அன்பளிப்பு பெறத் தடை.

1202. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (‘அஸ்த்’ எனும் குலத்தைச் சேர்ந்த) ஒருவரை (‘ஸகாத்’ வசூலிக்கும்) அதிகாரியாக நியமித்தார்கள். அந்த அதிகாரி தம் பணியை முடித்துக்கொண்டு நபியவர்களிடம் திரும்பி வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இது உங்களுக்குரியது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், ‘உம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு உமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதோ இல்லையா என்று பாரும்!” என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மாலை தொழுகைக்குப் பிறகு எழுந்து நின்று, ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனை அவனுக்குரிய பண்புகளைக் கூறி போற்றிப் புகழ்ந்த பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: பின்னர், அந்த அதிகாரிக்கு என்ன ஆயிற்று? அவரை நாம் (ஸகாத் வசூலிக்க) அதிகாரியாக நியமித்தோம். அவரோ நம்மிடம் வந்து ‘இது உங்கள் அதிகாரத்திற்குட்பட்டது. இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது” என்று கூறுகிறார். அவர் தம் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! (இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் யாரேனும் அந்த(ப் பொதுச்) சொத்திலிருந்து முறை கேடாக எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாளில் தம் பிடரியில் சுமந்து கொண்டு நிச்சயம் வருவார். அது ஒட்டகமாக இருந்தால் அது கனைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது பசுவாக இருந்தால் அது கத்திக் கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்; அது ஆடாக இருந்தால் அது கத்திக்கொண்டிருக்கும் நிலையில் அதைக் கொண்டு வருவார்” என்று கூறிவிட்டு ‘(இறைவா! உன்னுடைய செய்தியை மக்களிடம்) நான் சேர்த்துவிட்டேன்” என்று கூறினார்கள். அபூ ஹுமைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் அக்குள்களின் வெண்மையை நாங்கள் நன்கு பார்க்கும் அளவிற்குத் தம் கையை உயர்த்தினார்கள்.

புஹாரி :6636அபூஹூமைத் அஸ்ஸைதி (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged , , , , . Bookmark the permalink.