1201. நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, ‘மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், ‘உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்), அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியும் தங்கமும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். அல்லது அசைகிற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து வந்து ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. (இறைச் சட்டத்தை) உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
போர் வெற்றிப் பொருளை திருடுதல்.
புஹாரி 3073 அபூஹுரைரா (ரலி).
This entry was posted in அல்லுஃலுவு வல்மர்ஜான் and tagged அல்லுஃலுவு வல்மர்ஜான், இறைச்சட்டம், குற்றம், செல்வம், போர். Bookmark the permalink.