1203. ”அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடப்பீராக! (அவ்வாறே) அவனுடைய தூருக்கும், உங்களில் பொறுப்பு உள்ளோருக்கும் கீழ்ப்படிந்து நடப்பீராக” எனும் (திருக்குர்ஆன் 04:59 வது) வசனம், நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா இப்னு கைஸ் இப்னி அதீ (ரலி) அவர்களை (தளபதியாக்கி) ஒரு படைப்பிரிவினருடன் அனுப்பியபோது இறங்கியது.
1204. எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார் என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
1205. (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1206. நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படைவீரர்களின் மீது கோபம் கொண்டு, ‘நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லையா?’ என்று கேட்டார். அவர்கள், ‘ஆம்” என்றனர். அவர், ‘விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்து விடும்படி உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்” என்றார். அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெப்பை மூட்டினர். அதில் நுழைய நினைத்தபோது ஒருவரையொருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘(நரக) நெருப்பிலிருந்து தப்பிக்கத்தானே நாம் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றினோம்; அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?’ என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது. அவரின் கோபமும் தணிந்தது. பிறகு நபி (ஸல்) அவர்களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒருபோதும் வெளியேறிருக்க மாட்டார்கள்; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான்” என்றார்கள்.
1207. உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது நாங்கள் அன்னாரிடம் (நலம் விசாரிக்கச்) சென்றோம். நாங்கள், ‘அல்லாஹ் உங்களுக்குக் குணமளிக்கட்டும். நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்ட ஒரு ஹதீஸை (செய்தியை எங்களுக்கு) அறிவியுங்கள்; அதனால் அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிப்பான்” என்று சொன்னோம். அதற்கு உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். நாங்கள் அவர்களிடம் (சென்று இஸ்லாத்தில் நிலைத்திருப்பதாக) உறுதிமொழி அளித்தோம்” என்றார்கள். ‘நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த
விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர” என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.