பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6412
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6413
அனஸ்(ரலி) அறிவித்தார். (அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் ‘இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!’ என்று (பாடியபடி) சொன்னார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6414
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ(ரலி) அறிவித்தார். அகழ்ப் போரின்போது நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, ‘இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; எனவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!’ என்று (பாடியபடி) கூறினார்கள்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6415
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். ‘சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும். காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6416
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு ‘உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு’ என்றார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:) ‘நீ மாலை நேரத்தை அடைந்தால் காலை வேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க்குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு’ என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6417
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் ‘சூழ்ந்துள்ள’ அல்லது ‘சூழ்ந்து கொண்டுவிட்ட’ வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பி விட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பி விட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6418
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு ‘(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அருகிலுள்ள (மரணம் – ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது’ என்று கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6419
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும்வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப் போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6420
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். 1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6421
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன: 1. பொருளாசை. 2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6422
மஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார். (நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (கிணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6423
(தொடர்ந்து) முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார். இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி (ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன். (ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது ‘அல்லாஹ்வின் திருப்தியை நாடி ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6424
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றி விடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6425
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார். பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களை, ஜிஸ்யா(காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா இப்னு அல்ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியான ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்து விட்டது. அல்லாஹ்வின் தூதருடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து நபி(ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தங்கள் எண்ணத்தை சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு ‘அபூ உபைதா வந்துவிட்டார்; அவர் ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்’ என்றார்கள். அன்சாரிகள் ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின் ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்’ என்று கூறிவிட்டு ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பி விட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6426
உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழ வைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து ‘உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (‘அல்கவ்ஸர்’ எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்’ என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6427
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) ‘இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத் தான் உங்களின் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்’ என்றார்கள். ‘பூமியின் வளங்கள் எவை?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ‘(கனிமப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய இவ்வுலகக் கவர்ச்சிப் பொருள்கள் (தாம் அவை)’ என்று பதிலளித்தார்கள். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ‘(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?’ என்று வினவியதற்கு (பதிலளிக்காமல்) நபி(ஸல்) அவர்கள் மெளனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தம் நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் ‘கேள்வி கேட்டவர் எங்கே?’ என்று வினவினார்கள். அம்மனிதர் ‘(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)’ என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும் இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகிற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.
இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும். இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6428
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் (-மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் ‘இதற்குப் பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது தலை முறையினரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். (தொடர்ந்து ‘ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’) இவர்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் சாட்சியமளிக்க தாமாக முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கோரமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் நேர்த்திக்கடன் செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள். (அதிகமாக உண்டு குடித்ததால்) பருமன் (தொந்தி) விழும் நிலை அவர்களிடையே தோன்றும் என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6429
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தார் வருவர். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும் அவர்களின் சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6430
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்கள் (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத்) தம் வயிற்றில் ஏழு முறை சூடு போட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் மரணத்தை தடை விதித்திருக்காவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலக வாழ்க்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திடாத நிலையில் (வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைத் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு இவ்வுலக(ச் செல்வ)த்தைப் பெற்றுள்ளோம்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6431
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் (ஒருமுறை) கப்பாப்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தங்களின் (வீட்டுச்) சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: மறைந்துவிட்ட எம் தோழர்(கள் புரிந்த நன்மை)களை இவ்வுலக வார்க்கை எந்த வகையிலும் பாதித்துவிடவில்லை. (ஆனால்,) அவர்களுக்குப் பிறகு நாங்கள் (நிறைய) செல்வத்தைப் பெற்றுள்ளோம். (வீடு கட்டத் தேவைப்படும்) மண்ணைத் தவிர, அதைச் செலவழிக்க வேறு துறை எதையும் நாங்கள் காணவில்லை.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6432
கப்பாப் இப்னு அரத்(ரலி) அறிவித்தார். நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் தாயகம் துறந்து (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) சென்றோம்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6433
ஹும்ரான் இப்னு அபான்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (மதீனாவிலுள்ள) ‘மகாயித்’ எனுமிடத்தில் அமர்ந்திருந்த உஸ்மான்(ரலி) அவர்களிடம் நான் தண்ணீருடன் சென்றேன். அப்போது அவர்கள் பரிபூரணமாக அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். பிறகு ‘நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் பரிபூரணமாக அங்கசுத்தி செய்யக் கண்டேன்’ என்று கூறிவிட்டு, ‘யார் இதைப் போன்று (முழுமையாக) அங்கசுத்தி செய்து, பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு அமருவாரோ அவர் அதற்கு முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘(ஆனால், இதைக் கொண்டு) ஏமாந்து (பாவங்களில் மூழ்கி) விடாதீர்கள்’ என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6434
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும் அவர்களுக்கு அடுத்த (படித்தரத்திலுள்ள)வர்கள் அடுத்ததாகவும் (இவ்வுலகைவிட்டுப்) போய்விடுவார்கள். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப்புவியில்) ‘மட்டமான வாற்கோதுமை போன்ற’, அல்லது ‘மட்டமான பேரீச்சம் பழம் போன்ற’ தரம் வாய்ந்த மக்களே எஞ்சியிருப்பார்கள். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான் என மிர்தாஸ் இப்னு மாலிக் அல் அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: (‘மட்டம்’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘ஹுஃபாலத்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘ஹுஸாலத்’ என்றும் கூறப்படும்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6435
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ பொற்காசு, வெள்ளிக்காசு, குஞ்சம் உள்ள (ஆடம்பர) ஆடை, சதுரக் கம்பளி ஆடை ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்டவன் துர்பாக்கியவான் ஆவான். அவனுக்கு (செல்வம்) வழங்கப்பட்டால் திருப்தியடைவான். (செல்வம்) வழங்கப்படா விட்டால் அதிருப்தியடைவான் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6436
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனக்கு (மனிதனுக்கு) இரண்டு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்களிலிருந்து) பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6437
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய செல்வம் இருந்தாலும் அதனுடன் அதைப் போன்ற மற்றொரு நீரோடை இருக்க வேண்டும் என்றே அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய கண்ணை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் (மக்காவிலுள்ள) சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தவாறு கூறக் கேட்டுள்ளேன்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6438
அப்பாஸ் இப்னு ஸஹ்ல் இப்னி ஸஅத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும் போது சொல்லக் கேட்டேன். மக்களே! நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும் அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6439
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஆதமின் மகனுக்கு (-மனிதனுக்கு)த் தங்கத்தாலான ஒரு நீரோடை இருந்தால் தனக்கு இரண்டு நீரோடைகள் இருக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுவான். அவனுடைய வாயை மண்ணை (-மரணத்தை)த் தவிர வேறேதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6440
உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். இ(ந்த ஹதீஸான)து குர்ஆனிலுள்ள ஒரு வசனம் என்றே நாங்கள் கருதி வந்தோம். ‘செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களைத் திசை திருப்பி விட்டது’ எனும் (திருக்குர்ஆன் 102:1 வது) வசனம் அருளப்பெறும் வரை.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6441
ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களிடம் (தர்மம்) கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். பிறகும் நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள். மீண்டும் அவர்களிடம் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். பிறகு ‘இச்செல்வம்’ அல்லது ‘என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஹகீமே! இச்செல்வம்’ பசுமையானதும் இனிமையானதும் ஆகும். இதை(ப் பேராசையின்றி) நல்ல எண்ணத்துடன் பெறுகிறவருக்கு அதில் சுபிட்சம் வழங்கப்படும். மனத்தை அலையவிட்டு(ப் பேராசையுடன்) இதை எடுத்துக் கொள்கிறவருக்கு அதில் சுபிட்சம் வழங்கப்படுவதில்லை. அவர் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார். மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும்’ என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6442
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் ‘உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்’ என்று பதிலளித்தார்கள். ‘அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6443
அபூ தர்(ரலி) அறிவித்தார். ஒருநாள் இரவு நான் (வீட்டிலிருந்து) வெளியேறினேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுடன் யாரும் இருக்கவில்லை. (அந்தச் சமயத்தில்) அவர்களுடன் எவரும் வருவதை அவர்கள் விரும்பமாட்டார்கள் என்று நான் எண்ணினேன். எனவே, நான் நிலா (ஒளிபடாத) நிழலில் நடக்கலானேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னைத் திரும்பிப் பார்த்து ‘யார் அது?’ என்று கேட்டார்கள். நான் ‘அபூ தர். அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘அபூ தர்ரே! (இங்கே) வாருங்கள்!’ என்றார்கள்.
நான் அவர்களுடன் சிறிது நேரம் நடந்தேன். அப்போது அவர்கள் ‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்றார்கள். இன்னும் சிறிது நேரம் நான் அவர்களுடன் நடந்தேன். அப்போது அவர்கள் என்னிடம் ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று கூறி, சுற்றிலும் கற்கள் இருந்த ஒரு சம வெளியில் என்னை அமரச் செய்தார்கள். ‘நான் உங்களிடம் திரும்பி வரும் வரை இங்கேயே அமர்ந்திருங்கள்’ என என்னிடம் சொல்லிவிட்டு, (பாறைகள் நிறைந்த) ஹர்ராப் பகுதியில் நடந்து சென்றார்கள்.
பிறகு அவர்களை நான் காணமுடியவில்லை. நீண்ட நேரம் அங்கேயே இருந்தார்கள். வெகு நேரமாகியும் என்னிடம் அவர்கள் வரவில்லை. பிறகு அவர்கள் முன்னோக்கி வந்து கொண்டே ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலும் சரியே!’ என்று கூறுவதைக் கேட்டேன். அவர்கள் வந்தபோது என்னால் பொறுமையாக இருக்க முடியாமல் ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்! ஹர்ராப் பகுதியில் தாங்கள் யாரிடம் பேசினீர்கள்? தங்களுக்கு யாரும் எந்தப் பதிலும் அளிப்பதை நான் கேட்கவில்லையே?’ என்று வினவினேன். நபி(ஸல்) அவர்கள் ‘அது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தாம். அவர் ஹர்ராப் பகுதியில் என் முன் தோன்றி, ‘(ஏக இறைவனாகிய) அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத நிலையில் இறப்பவர் சொர்க்கம் செல்வார் என உங்கள் சமுதாயத்தாருக்கு நற்செய்தி கூறுங்கள்’ என்றார். நான் ‘ஜிப்ரீலே! அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?’ என்று (மீண்டும்) கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார். நான் ‘அவர் திருடினாலும் விபசாரம் புரிந்தாலுமா?’ என்று கேட்டேன். அவர் ‘ஆம்’ என்றார்.
வேறு சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. இதே ஹதீஸ் அபுத்தர்தா(ரலி) அவர்களாலும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது (அறிவிப்பாளர் தொடர் முறிந்த) ‘முர்சல்’ ஆகும். அபூ தர்(ரலி) அவர்களின் அறிவிப்பே சரியானதாகும்.
அபுத்தர்தா(ரலி) அவர்களின் அறிவிப்பில் ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறி இறந்தால்’ என்று காணப்படுகிறது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6444
அபூ தர் அல்ஃம்ஃபாரீ(ரலி) அறிவித்தார். நான் (இரவு நேரத்தில்) நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவின் (பாறைகள் நிறைந்த) ஹர்ராப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது உஹுத் மலை எங்களை எதிர்கொண்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அபூ தர்ரே!’ என்று அழைத்தார்கள். நான் ‘இதோ! காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இந்த உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்து, அதிலிருந்து ஒரேயொரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்தாலும் அதை அல்லாஹ்வின் அடியார்களிடையே இப்படி இப்படியெல்லாம் செலவிடாமல் மூன்று இரவுகள் கழிந்து செல்வதுகூட எனக்கு மகிழ்ச்சியளிக்காது. கடனை அடைப்பதற்காக நான் எடுத்துவைக்கும் சில பொற்காசுகளைத் தவிர!’ என்று கூறி, தம் வலப் பக்கமும் இடப்பக்கமும் பின் பக்கமும் சைகை செய்தார்கள். பிறகு (சிறிது தூரம்) நடந்துவிட்டு ‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; இப்படி இப்படியெல்லாம் (இறைவழியில் தம் செல்வத்தைச்) செலவிட்டவர்களைத் தவிர’ என்று கூறி, தம் வலப் பக்கமும் இடப்பக்கமும் பின் பக்கமும் சைகை செய்தார்கள். ‘(ஆனால்,) இத்தகையவர்கள் சொற்பமானவர்களே’ என்றும் கூறினார்கள்.
பிறகு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் ‘நான் வரும்வரை இந்த இடத்திலேயே இருங்கள்’ என்று கூறிவிட்டு, இரவு இருளில் நடந்து சென்று மறைந்துவிட்டார்கள். அப்போது உரத்த குரல் ஒன்றை நான் கேட்டு நபி(ஸல்) அவர்களை யாரோ ஏதோ செய்துவிட்டார்கள் என்று அஞ்சினேன். அவர்களிடம் செல்லலாம் என்று நினைத்தேன். (ஆனால்,) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ‘நான் வரும்வரை இங்கேயே இருங்கள்’ என்று சொன்னது என் நினைவுக்கு வந்தது. எனவே, அவர்கள் என்னிடம் வரும் வரை அங்கேயே இருந்தேன். (அவர்கள் வந்ததும்) ‘இறைத்தூதர் அவர்களே! ஏதோ ஒரு குரலைக் கேட்டு நான் பயந்துவிட்டேன்’ என்று கூறி, (நான் நினைத்தது பற்றியும்) அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அதை நீங்கள் செவியுற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அது (வானவர்) ஜிப்ரீல்தாம். அவர் என்னிடம் வந்து ‘உங்கள் சமுதாயத்தாரில் (ஏக இறைவனாம்) அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைகிறவர் சொர்க்கம் புகுவார்’ என்றார். நான் (ஜிப்ரீலிடம்) ‘அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா (சொர்க்கம் புகுவார்)?’ என்று கேட்டேன். அவர் ‘(ஆம்) விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுவார்)’ என்று பதிலளித்தார் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6445
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உஹுத் தலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவதுகூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6446
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6448
அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். (உடல் நலமில்லாதிருந்த) கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்களை நாங்கள் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக நபி(ஸல்) அவர்களுடன் (தாயகம் துறந்து) ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக்கு (அதற்கான) பிரதிபலன் அளிப்பது உயர்ந்தோனான அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்றுவிட்டனர். அத்தகையவர்களில் ஒருவர்தாம் முஸ்அப்பின் உமைர்(ரலி) அவர்கள். அவர் உஹுதுப் போர் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடு போட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச் சென்றார். (அதன் மூலம் அவருக்குக் ‘கஃபன்’ அணிவிக்க) அவரின் தலையை நாங்கள் மறைத்தபோது அவரின் கால்கள் வெளியே தெரிந்தன. அவரின் கால்களை நாங்கள் மறைத்தபோது அவரின் தலை வெளியே தெரிந்தது. எனவே, அவரின் தலையை (அத்துணியால்) மறைத்துவிட்டு அவரின் கால்களின் மீது ‘இத்கிர்’ புல்லையிடுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். (ஹிஜ்ரத் செய்ததற்கான இவ்வுலகப்) பலன் கனிந்து அதைப் பறித்து (சுவைத்து)க் கொண்டிருப்பவர்களும் எங்களில் உள்ளனர்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6449
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் (மிஅராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன் என இம்ரான் இப்னு ஹ¤ஸைன்(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6450
அனஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறக்கும் வரை உணவு மேசையில் (அமர்ந்து) உணவருந்தியதில்லை; இறக்கும் வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் சாப்பிட்டதில்லை.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6451
ஆயிஷா(ரலி) அறிவித்தார். என் (வீட்டு) நிலைப் பேழையிலிருந்த சிறிது வாற்கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில்தான் நபி(ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். அதனால் (சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய் விட்டது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6452
அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார். எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, ‘அபூ ஹிர்ரே! (அபூ ஹ¤ரைராவே!) என்று அழைத்தார்கள். நான் ‘இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். ‘(என்னைப்) பின்தொடர்ந்து வா!’ என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) ‘இந்தப் பால் எங்கிருந்து வந்தது?’ என்று கேட்டார்கள். அவர்கள் ‘இன்ன ‘ஆண்’ அல்லது ‘பெண்’ தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹ¤ர்’ என அழைத்தார்கள். நான் ‘இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். ‘திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்’ என்றார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸ¤ஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.
இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. ‘(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணை வாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பருகி என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது’ என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘அபூ ஹிர்’ என அழைத்தார்கள். நான் ‘இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்’ என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு ‘அபூ ஹிர்!’ என்று அழைத்தார்கள். நான் ‘இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!’ என்று சொன்னேன். அதற்கவர்கள் ‘நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)’ என்று கேட்டார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்’ என்றார்கள். நான் உட்கார்ந்து பருகினேன். ‘இன்னும் பருகுங்கள்’ என்றார்கள். பருகினேன். இவ்வாறு அவர்கள் ‘பருகுங்கள்’ என்று சொல்லிக் கொண்டேயிருக்க, நான் பருகிக் கொண்டேயிருந்தேன். இறுதியில் ‘இல்லை; சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை’ என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்’ என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பருகினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6453
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். இறைவழியில் அம்பெய்த அரபுகளில் நானே முதல் ஆள் ஆவேன். எங்களுக்குக் கருவேல மரத்தின் இலைகளையும் இந்த நாணற்புல்லையும் தவிர உணவு எதுவும் இல்லாதிருக்கும் நிலையில் புனிதப் போரில் நாங்கள் ஈடுபட்ட (காலத்)தைக் கண்கூடாகக் கண்டுள்ளேன். நாங்கள் ஆடுகள் கெட்டிச் சாணம் இடுவதைப் போல் ஒன்றோடொன்று ஒட்டாமல் மலம் கழித்து வந்தோம். பிறகு (கூஃபாவாசிகளான) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று என்னுடைய) பனூ அசத் குலத்தார் (நான் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்னைக் குறை கூறலானார்கள். அப்படியானால் நான் (இதுவரை) செய்துவந்த வழிபாடு வீணாகி நான் இழப்புக்குள்ளாகி விட்டேன் (போலும் என வருந்தினேன்).
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6454
ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஹம்மத்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்ததிலிருந்து அவர்கள் இறக்கும் வரை அவர்களின் குடும்பத்தார் கோதுமை உணவைத் தொடர்ந்து மூன்று நாள்கள் வயிறு நிரம்ப உண்டதில்லை.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6455
ஆயிஷா(ரலி) அறிவித்தார். முஹம்மத்(ஸல்) அவர்களின் குடும்பத்தார் ஒரு நாளில் இரண்டு முறை உணவு உண்டால் அதில் ஒன்று (வெறும்) பேரீச்சம் பழமாகவே இருக்கும்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6456
ஆயிஷா(ரலி) அறிவித்தார். பேரீச்சம் நாறினால் நிரப்பப்பட்ட பதனிடப்பட்ட தோலே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் படுக்கை விரிப்பாக இருந்தது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6457
கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) அறிவித்தார். நாங்கள் அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் சென்று வருவோம். (அவர்களுடன் அவர்களுக்காக ரொட்டி தயாரிப்பவர் ஒருவரும் இருப்பார். (ஒரு நாள்) அனஸ்(ரலி) அவர்கள் ‘சாப்பிடுங்கள்; (ஆனால்) நான் அறிந்த மட்டில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று சேரும் வரை மிருதுவான ரொட்டியை அவர்கள் பார்த்ததில்லை. வெந்நீரால் முடி களையப்பட்டு தோலுடன் சமைக்கப்பட்ட ஆட்டை அவர்கள் தங்களின் கண்ணாலும் ஒருபோதும் கண்டதில்லை’ என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6458
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தாரகிய) நாங்கள் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்காமலேயே ஒரு மாதகாலம் கூட எங்களுக்குக் கழிந்திருக்கிறது. அப்போதெல்லாம் (வெறும்) பேரீச்சம் பழமும் நீரும்தான் (எங்கள் உணவாகும்); (எப்போதாவது) சிறிது இறைச்சி எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டால் தவிர.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6459
உர்வா இப்னு ஸ¤பைர்(ரலி) அறிவித்தார். ஆயிஷா(ரலி) அவர்கள் என்னிடம் ‘நான் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நாங்கள் பிறை பார்ப்போம். இரண்டு மாதங்களில் (ஆனால்,) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது’ என்று கூறினார்கள். அதற்கு நான் ‘(அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?’ என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள் கறுப்புப் பொருட்களான பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு) இருப்பினும், அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக, இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்து கொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தம் இல்லங்களிலிருந்து அவர்கள் கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6460
அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார். ‘அல்லாஹ்வே! முஹம்மதின் குடும்பத்தாருக்கு(ப் பசிக்கு) உணவு வழங்குவாயாக!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6461
மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது எது?’ என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நிரந்தரமாய்ச் செய்யப்படும் செயல்’ என்று விடையளித்தார்கள். ‘(இரவில்) நபி(ஸல்) அவர்கள் (தொழுகைக்காக) எப்போது எழுவார்கள்?’ என்று கேட்டேன். அவர்கள் ‘சேவல் கூவும்போது (நடுநிசி நேரம்) எழு(ந்து தொழுவார்கள்) என்று விடையளித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6462
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஒருவர் நிரந்தரமாக(த் தொடர்ந்து) செய்யும் நற்செயலே இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமான செயலாக இருந்தது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6463
அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார். ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களில் யாரையும் அவரின் நற்செயல் ஒருபோதும் காப்பாற்றாது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப் பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்)’ என்று கூறினார்கள். மக்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா (தங்களின் நற்செயல் காப்பாற்றாது?)’ என்று வினவினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(ஆம்) என்னையும்தான்; அரவணைத்துக் கொண்டால் தவிர’ என்று கூறிவிட்டு, ‘(எனவே, நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்.) காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். (எதிலும்) நடுநிலை (தவறாதீர்கள்) நடுநிலை(யைக் கடைபிடியுங்கள்.) (இவ்வாறு செய்தால் இலட்சியத்தை) நீங்கள் அடைவீர்கள்’ என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6464
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீர்கள்) அறிந்து கொள்ளுங்கள். உங்களில் யாரையும் அவரின் நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொர்க்கம் புகமுடியும். நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது. (எண்ணிக்கையில்) மிகவும் குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும். என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6465
ஆயிஷா(ரலி) அறிவித்தார். ‘நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘(எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே’ என்று விடையளித்தார்கள். மேலும், ‘நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொடமுயலுங்கள்’ என்றும் கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6466
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்களின் வழிபாடு எவ்வாறிருந்தது? (வழிபாட்டுக்காக என்று ) குறிப்பிட்ட நாள்கள் எதையும் ஒதுக்கிக் கொண்டிருந்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இல்லை. அவர்களின் (எந்த வணக்க வழிபாடு)ம் நிரந்தரமானதாகவே இருந்தது’ என்று கூறிவிட்டு, ‘நபி(ஸல்) அவர்களால் செய்ய முடிந்ததைப் போன்று உங்களில் எவரால் செய்ய முடியும்?’ என்று கேட்டார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6467
ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘வணக்க வழிபாடுகளிலும் நற்செயல்கள் புரிவதிலும்) நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்து கொள்ளுங்கள். (வரம்பு மீறாதீர்கள். நற்செயல் சிறிதே ஆயினும் அதற்குரிய பிரதிபலன் இறைவனிடம் கிடைக்கும் என்ற) நற்செயல் சொர்க்கத்தில் நுழைவித்துவிடாது’ என்று கூறினார்கள். மக்கள் ‘தங்களையுமா? இறைத்தூதர் அவர்களே!’ என்று வினவினார்கள். என்னையும் தான்; அல்லாஹ் மன்னிப்பாலும் கருணையாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர,’ என்றார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ள மற்றோர் அறிவிப்பில் ‘நேர்மையோடு செயல்படுங்கள்; நற்செய்தி பெறுங்கள்’ என்று இடம் பெற்றுள்ளது.
முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நேர்மை அல்லது நடுநிலை என்பதற்கு ‘வாய்மை’ என்று இங்கு பொருளாகும். இதை (அரபியில்) ‘சதீத்’ மற்றும் ‘சதாத்’ என்பர்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6468
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு (லுஹர்) தொழுகையை தொழ வைத்துவிட்டுப் பிறகு சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) ஏறி கிப்லாத் திசையில் தம் கையால் சைகை செய்தவாறு கூறினார்கள்:நான் உங்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த முன் சுவற்றில் சொர்க்கம் மற்றும் நரகத்தின் காட்சி எனக்குக் காட்டப்பட்டது. நன்மை தீமை(களின் விளைவு)களை இன்று கண்டதைப் போன்று என்றும் நான் கண்டதில்லை. நன்மை தீமைகளின் விளைவுகளை இன்று கண்டதைப் போன்று என்றுமே நான் கண்டதில்லை (என்று பல முறை கூறினார்கள்.)
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6469
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ் அன்பையும் கருணையையும் படைத்தபோது அதனை நுறு வகைகளாக அமைத்தான். அவற்றில் தொண்ணூற்று ஒன்பது வகைகளைத் தன்னிடமே வைத்துக் கொண்டான். (மீதியுள்ள) ஒரு வகையை மட்டுமே தன் படைப்புகள் அனைத்துக்கும் வழங்கினான். எனவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப்போன்றே) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6470
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். அன்சாரிகளில் சிலர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவ்வாறு கேட்ட யாருக்குமே நபி(ஸல்) அவர்கள் கொடுக்காமல் இருக்கவில்லை. இறுதியாக, நபியவர்களிடம் இருந்த அனைத்தும் தீர்ந்து விட்டது. தம் கரங்களால் செலவிட்டு எல்லாப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு அந்த அன்சாரிகளிடம் நபி(ஸல்) அவர்கள் ‘என்னிடம் உள்ள எச்செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப் போவதில்லை. (இருப்பினும்) சுயமரியாதையோடு நடப்பவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச் செய்வான். (இன்னல்களைச்) சகிப்பவருக்கு அல்லாஹ் மேலும் சகிப்புத் தன்மையை வழங்குவான். பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருப்பவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை’ என்று கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6471
முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவுக்கு அல்லது புடைக்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது ‘நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?’ என்று கேட்பார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6472
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6473
முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களின் எழுத்தரான வர்ராத்(ரஹ்) கூறினார்: முஆவியா(ரலி) அவர்கள் முஃகீரா இப்னு ஷுஅபா(ரலி) அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள். அதில், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதியனுப்புங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா(ரலி) அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்: நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்’ என்று கூறுவார்கள்.
மேலும், நபி(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு சொல்லப்பட்டது; (இவ்வாறு அவர் சொன்னார் என்று (ஊர்ஜிதமில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப் பேசுவது, அதிகமாக கேள்வி, அல்லது யாசகம் கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தரமறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6474
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ தம் இரண்டு தாடைகளுக்கு இடையே உள்ளத (நாவி)ற்கும், தம் இரண்டு கால்களுக்கு இடையே உள்ளத (மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்கு நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6475
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப் படுத்தட்டும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6476
அபூ ஷ{ரைஹ் அல்அதவீ அல்குஸாஈ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை என் காதுகள் செவியேற்றன்; என் உள்ளம் அதை மனனமிட்டது. விருந்துபசாரம் மூன்று நாள்களாகும். (அவற்றில்) ‘அவரின் கொடையும் அடங்கும் அப்போது அவரின் கொடை என்ன?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அவரின் கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பு) ஆகும்’ என்று கூறிவிட்டு, ‘அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். மேலும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6477
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6478
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6479
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (தன்னுடைய நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில்) ஏழு போருக்கு அல்லாஹ் தன்னுடைய (அரியாசத்தின்) நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். (தனிமையில்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடிப்பவர் (அவர்களில் ஒருவராவார்) என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6480
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பன} இஸ்ராயீல் மக்களில்) ஒருவர் தம் செய்து வந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக இறந்துவிட்டால் என்னை(க் கரித்துச் சாம்பலை) எடுத்து சூறாவளிக் காற்று வீசும் காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்’ என்று கூறினார். (அவர் இறந்தவுடன்) அவரை அவ்வாறே அவரின் வீட்டாரும் செய்தனர். அல்லாஹ் (காற்றோடு கலந்துவிட்ட) அவரின் உடலை ஒன்று திரட்டிய பின் ‘நீ இவ்வாறு செய்யததற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டான். அவர் ‘உன்னைப் பற்றிய அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது’ என்று பதிலளித்தார். எனவே, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான் என ஹ¤தைஃபா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6481
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘முன் சென்ற’ அல்லது ‘உங்களுக்கு முன் வாழ்ந்த’ ஒரு மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தையும் குழந்தைகளையும் வழங்கியிருந்தான். அவருக்கு இறப்பு நெருங்கியபோது அவர் தம் மக்களிடம் ‘உங்களுக்கு நான் எப்படிப்பட்ட தந்தையாக இருந்தேன்?’ என்று கேட்டார். அவர்கள் ‘சிறந்த தந்தையாக இருந்தீர்கள்’ என்று பதில் கூறினர். அவர் தமக்காக அல்லாஹ்விடம் எந்த நன்மையும் சேமித்திருக்கவில்லை. அல்லாஹ்வின் முன்னிலையில் தாம் சென்றால் தம்மை அவன் வேதனை செய்துவிடுவான் என அவர் அஞ்சினார். எனவே, (அவர் தம் மக்களிடம் ‘நன்றாகக் கவனியுங்கள். நான் இறந்துவிட்டால் என்னைப் பொசுக்கி விடுங்கள். நான் (வெந்து) கரியாக மாறிவிட்டால் என்னைப் ‘பொடிப் பொடியாக்கி விடுங்கள்’. அல்லது ‘துகள் துகளாக்கி விடுங்கள்’. பிறகு சூறாவளிக் காற்று வீசும் நாளில் காற்றில் என்னைத் தூவிவிடுங்கள்’ என்று கூறி தாம் கூறியபடி செய்ய வேண்டுமென அவர்களிடம் அவர் உறுதிமொழியும் வாங்கினார். என் இறைவன் மீதானையாக அவ்வாறே அவர்களும் செய்தனர். அப்போது அல்லாஹ் ‘(பழையபடி முழு மனிதனாக) ஆகிவிடு!’ என்று கூறினான். உடனே (அந்த) மனிதர் (உயிர்பெற்று) எழுந்தார். (அவரிடம்) அல்லாஹ் ‘என் அடியானே! இவ்வாறு நீ செய்யக் காரணமென்ன?’ என்று கேட்டான். அந்த மனிதர் உன்னைக் குறித்த அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது’ என்று பதிலளித்தார். (இறுதியில்) அவர் அடைந்தது இறையருளைத்தான்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: நான் அபூ உஸ்மான்(ரஹ்) அவர்களிடம் இதை அறிவித்தேன். அப்போது அவர்கள் ‘சல்மான் ஃபார்சி(ரலி) அவர்கள் இதைப் போன்றே கூற கேட்டேன். ஆனால் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள் எனுமிடத்தில்) ‘கடலில் என்னைத் தூவிவிடுங்கள்’ என்றோ, வேறுவிதமாகவோ கூடுதலாக அறிவித்தார்கள்’ என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6482
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எனக்கும் என்னை அல்லாஹ் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பியுள்ளானோ அதற்கும் எடுத்துக் காட்டாகிறது. ஒரு மனிதரின் நிலையைப் போன்றதாகும். அவர் ஒரு சமூகத்தாரிடம் சென்று ‘நான் (இன்ன பெரும்) படையை என் கண்களால் பார்த்தேன். (எந்நேரமும் அப்படை உங்களைத் தாக்கலாம். அதை எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இல்லை.) நான், ‘நிர்வாணமாக (ஓடி வந்து) எச்சரிக்கை செய்ப(வனைப்) போன்றவன் ஆவேன். எனவே, (ஓடுங்கள்;) தப்பித்துக் கொள்ளுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார். அப்போது ஒரு பிரிவினர் அவருக்குக் கீழ்ப்படிந்து இரவோடு இரவாக மெல்ல வெளியேறித் தப்பிவிட்டனர். ஆனால், இன்னொரு பிரிவினர் அவரை நம்பமறுத்தனர். பிறகு அதிகாலையில் அப்படையினர் வந்து அவர்களைத் தாக்கிப் பூண்டோடு அழித்தனர் என அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6483
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என்னுடைய நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அவரைச் சுற்றிலும் அது ஒளிவீசியபோது விட்டில் பூச்சிகளும் நெருப்பில் விழும் இதரப் பூச்சிகளும் அந்தத் தீயில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றை (தீயில் விழாமல்) தடுத்துக் கொண்டிருந்தார். (ஆனால்,) அவை அவரையும் மீறி தீயில் விழுகின்றன. (இவ்வாறுதான்) நரகத்(தில் விழுவதிலிருந்து (உங்களைத்) தடுக்க உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். (ஆனால்,) நீங்களோ (என்னையும் மீறி) நரகத்தில் நுழைந்து கொண்டிருக்கிறீர்கள்.’
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6484
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ எவருடைய நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிற முஸ்லிம்கள் (உண்மையான) முஸ்லிம் ஆவார். அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகியவரே (உண்மையான) முஹாஜிர் (துறந்தவர்) ஆவார் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6485
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள். அதிகமாக அழுவீர்கள் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6486
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நான் அறிவதை நீங்கள் அறிவீர்களாயின் நிச்சயம் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6487
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6488
என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது. நரகமும் அதைபோன்றே (மிக அருகில் உள்ளது) என அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6489
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ ‘அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்தும் அழியக் கூடியவையே’ எனும் பாடல்தான் கவிஞர்கள் சொன்ன வரிகளிலேயே மிக உண்மையானதாகும் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6490
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும் என அபூ ஹ¤ரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6491
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6492
அனஸ்(ரலி) அறிவித்தார். நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்,) அவற்றை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘மூபிகாத்’ என்றே கருதி வந்தோம்.
அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன் ‘மூபிகாத்’ என்றால் ‘பேரழிவை ஏற்படுத்துபவை’ என்று பொருள்.
பாகம் 7, அத்தியாயம் 81, எண் 6493
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார். (கைபர் போரின் போது) நபி(ஸல்) அவர்கள் (யூத) இணைவைப்பாளர்களிடம் போரிட்டுக் கொண்டிருந்த (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதரைப் பார்த்தார்கள். அவர் எதிரிகளுக்கு பதிலடி கொடுப்பதில் முஸ்லிம்களிலேயே மகத்தான (பங்காற்றுப)வராக இருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘நரகவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புகிறவர் இவரைப் பார்த்துக் கொள்ளலாம்’) என்று (குஸ்மான் எனும் அந்த மனிதரைக் குறித்துக்) கூறினார்கள். (அவரைப் பற்றி நபியவர்கள் ஏன் அவ்வாறு கூறினார்கள் என்று அறிந்து கொள்வதற்காக) உடனே அவரை இன்னொரு மனிதர் பின்தொடர்ந்தார். (குஸ்மான் என்ற) அந்த மனிதரோ (எதிரிகளுடன் கடுமையாகப்) போராடிக் கொண்டு இருந்தார். இறுதியில் அந்த மனிதர் (எதிரிகளால் கடுமையாகக்) காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துவிட விரும்பி, தன்னுடைய வாளின் (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, (கீழ்ப் பகுதியைப் பூமியில் நட்டு வைத்து, அதன்) கூரான பகுதியைத் தம் மார்புகளுக்கிடையே வைத்து, அந்த வாளின் மீது உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து) கொண்டார். வாள் அவரின் தோள்களுக்கிடையே இருந்து வெளியேறியது.
அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன’ என்றார்கள்.