பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6494
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘இறைவழியில்) தம் உடலாலும் பொருளாலும் போராடுகிறவர். (அடுத்துச் சிறந்தவர்) மலைக் கணவாய்களில் ஒன்றில் தம் இறைவனை வணங்கிக் கொண்டு மக்களுக்குத் தம்மால் தீங்கு நேராமல் தவிர்ந்து வாழ்கிறவர்’ என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6495
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வங்களிலேயே ஆடுதான் சிறந்ததாக இருக்கும். குழப்பங்களிலிருந்து தம் மார்க்க (விசுவாச)த்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டை ஓட்டிக் கொண்டு அவர் மலை உச்சிக்கும், மழைத் துளிகள் விழும் (கணவாய்கள், பள்ளத்தாக்குகள் போன்ற) இடங்களுக்கும் சென்று வாழ்வார் என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6496
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு கிராமவாசியிடம்), ‘நம்பகத்தன்மை பாழ்படுத்தப்பட்டால் மறுமைநாளை நீ எதிர்பார்க்கலாம்.’ என்று கூறினார்கள். அவர் ‘இறைத்தூதர் அவர்களே! அது எவ்வாறு பாழ்ப்படுத்தப்படும்?’ என்று கேட்டதற்கு ‘(ஆட்சியதிகாரம், நீதி நிர்வாகம் போன்ற) எந்தப் பொறுப்பும் அதற்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்படும்போது மறுமை நாளை எதிர்ப்பார்த்துக் கொள்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6497
ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்கு (நம்பகத்தன்மை தொடர்பாக) இரண்டு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்துவிட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கிறேன். ஒரு செய்தி யாதெனில், (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ்மனதில் (‘அமானத்’ எனும்) நம்பகத்தன்மை இடம் பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். பிறகு (என்னுடைய வழியான) சுன்னாவிலிருந்தும் (அதை)அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்துவிட்டேன்.)
இரண்டாவது செய்தி, நம்பகத்தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனுடைய உள்ளத்திலிருந்து நம்பகத்தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதையடுத்து அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்) புள்ளி அளவுக்கு (அவனில்) தங்கிவிடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைப்பற்றப்படும். இம்முறை அ(து அகற்றப்பட்ட) தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்துவிடும். (இவ்வாறு முதலில் ‘நம்பகத் தன்மை’ எனும் ஒளி உள்ளத்தில் ஏற்றப்பட்டுப் பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்களை உருட்டிவிட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பிவிடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரிதாகத் தெரியுமேதவிர, அதனுள் ஒன்றும் இருக்காது.
பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால், அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று (தேடிக் கண்டுபிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகிவிடுவார்கள். மேலும், ஒருவரைப் பற்றி, ‘அவரின் அறிவுதான் என்ன? அவரின் விவேகம்தான் என்ன? அவரின் வீரம் தான் என்ன?’ என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால், அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவு கூட நம்பிக்கை இருக்காது.
(அறிவிப்பாளர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என் மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களில் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை. (ஏனெனில்,) முஸ்லிமாக இருந்தால், இஸ்லாம் (என்னுடைய பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்துவிடும். கிறிஸ்தவராக இருந்தால் அவருக்கான அதிகாரி என்னுடைய பொருளை அவரிடமிருந்து எனக்கு மீட்டுத் தந்து விடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6498
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்கள் போன்றவர்கள். அவற்றில் பயணத்திற்குப் பயன்படும் ஒட்டகத்தை நீ காண்பது அரிது என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6499
ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ‘விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்’ என்று கூறியதைக் கேட்டேன்.
அறிவிப்பாளர் ஸலமா இப்னு குஹைல்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஹதீஸை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுன்துப்(ரலி) அவர்கள் தவிர வேறு யாரிடமும் நான் கேட்டதில்லை. இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்காக மனதுடன் போராடுவது.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6500
முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் ஒரு வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்தேன். எனக்கும் நபிகளாருக்கும் இடையே (ஒட்டகச்) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டை தவிர வேறெதுவும் இருக்கவில்லை. (அந்த அளவுக்கு நெருக்கத்தில் நான் இருந்தேன்.) அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘முஆதே!’ என்று அழைத்தார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்றேன். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் மீண்டும் ‘முஆதே!’ என்றார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்றேன். பிறகு சிறிது தூரம் சென்றதும் மீண்டும் ‘முஆதே இப்னு ஜபலே!’ என அழைத்தார்கள். நான் (அப்போதும்) ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)’ என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா!’ என்று கேட்டார்கள். நான் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் ‘அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும்; அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை வைக்கக் கூடாது’ என்று கூறினார்கள். பிறகு சிறிது தூரம் சென்ற பின்னர் ‘முஆத் இப்னு ஜபலே!’ என்று அழைத்தார்கள். நான் ‘இறைத்தூதர் அவர்களே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன். (கூறுங்கள்)’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் ‘அடியார்கள் அதை நிறைவேற்றினால் அவர்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்’ என்று சொன்னேன். ‘அடியார்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்னவென்றால், அவர்களை அவன் (மறுமையில்) வேதனைப் படுத்தாமல் இருப்பதாகும்’ என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6501
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘அள்பா’ என்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவராலும் வெல்ல முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக்கூடிய)தாக இருந்தது. (ஒரு பயணத்தின் போது) கிராமவாசி ஒருவர் தம் (ஆறு வயதுக்குட்பட்ட) வாட்டசாட்டமான ஒட்டகத்தின் மீது வந்து நபிகளாரின் அந்த ஒட்டகத்தை முந்திச் சென்றார். இது முஸ்லிம்களுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது. முஸ்லிம்கள் ‘அள்பா பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது’ என்று கூறினர். (இதை அறிந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘உலகில் உயர்ந்து விடுகிற எந்தப் பொருளாயினும் நிச்சயமாக (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்’ என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6502
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கிற செவியாக, அவன் பார்க்கிற கண்ணாக, அவன் பற்றுகிற கையாக, அவன் நடக்கிற காலாக நான் ஆம்விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எச்செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6503
ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம்’ என்று கூறி, தம் இரண்டு விரல்களையும் (-சுட்டுவிரல், நடுவிரல் இரண்டையும்) நீட்டியவாறு சைகை செய்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6504
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டையும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம் என அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6505
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6506
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது. இரண்டு பேர் (விற்பனைக்காத்) துணிகளை விரித்து(ப் பார்த்து)க் கொண்டிருப்பார்கள். அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவும் மாட்டார்கள்; சுருட்டிக்கூட வைத்திருக்க மாட்டார்கள். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். மேலும், ஒருவர் மடிகனத்த தம் ஒட்டகத்தி(ல் பால் கறந்து அப்போது தா)ன் பாலுடன் (வீடு) திரும்பியிருப்பார்; இன்னும் அதைப் பருகிக் கூட இருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். ஒருவர் தம் நீர் தொட்டியை (அப்போதுதான்) கல்வைத்துப் பூசியிருப்பார்; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும். உங்களில் ஒருவர் தம் உணவை (அப்போதுதான்) வாயருகில் கொண்டு சென்றிருப்பார்; அதை உண்டிருக்க மாட்டார். அதற்குள் மறுமை சம்பவித்து விடும் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6507
உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வை தரிசிக்க விரும்புகிறவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கிறவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்’ என்று கூறினார்கள். அப்போது ‘ஆயிஷா(ரலி) அவர்கள்’ அல்லது ‘நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்’ ‘நாங்கள் மரணத்தை வெறுக்கிறோம்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘(அல்லாஹ்வின் தரிசனம் என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு இறப்பு நேரம் வரும்போது, அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவரைக் கெளரவிப்பதாகவும் அவருக்கு நற்செய்தி கூறப்படும். அப்போது இறப்புக்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வைவிட விருப்பமானதாக வேறெதுவும் அவருக்கு இராது. எனவே, அவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்புவார். அல்லாஹ்வும் அவரைச் சந்தி(த்து உபசரி)க்க விரும்புவான். இறைமறுப்பாளனுக்கு மரணவேளை வரும்போது, அல்லாஹ் வழங்கும் வேதனை குறித்தும் தண்டனை குறித்தும் அவனுக்கு அறிவிக்கப்படும். அப்போது மரணத்திற்குப் பின்னால் உள்ள (மறுமை) வாழ்வை விட வெறுப்பானதாக வேறெதுவும் அவனுக்கு இராது. எனவே, அவன் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுப்பான்; அல்லாஹ்வும் அவனைச் சந்தி(த்து அருள் பாலி)ப்பதை வெறுப்பான்’ என்று (விளக்கம்) சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6508
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் அல்லாஹ்வை தரிசிக்க விரும்பு கின்றாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகின்றான். எவர் அல்லாஹ்வை தரிசிப்பதை வெறுக்கின்றாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கின்றான். இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6509
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாய் இருந்தபோது, ‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை’ என்று கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, தம் தலையை என்னுடைய மடி மீது வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலை குத்தி நின்றது. பிறகு, ‘இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’ என்றார்கள். நான், ‘அவர்கள் இப்போது நம்முடன் இருப்பதைத் தேர்ந்தெடுக்கவில்லை (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டார்கள்)’ என்று (மனதுக்குள்) கூறிக்கொண்டேன். (அவர்கள் ஆரோக்கியமாக இருந்தபோது ‘இறைத்தூதர்கள் இறக்கும் முன் இம்மை மறுமை இரண்டிலொன்றைத் தேர்வு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப் படுவார்கள்’ என்று) நம்மிடம் அவர்கள் கூறிய சொல் இதுதான் என அறிந்து கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை, ‘இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்)’ என்பதாகவே இருந்தது. இதை அறிஞர்கள் பலர் இருந்த அவையில் உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6510
ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நோய் வாய்ப்பட்டிருந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு முன்னால் ‘தோல் பாத்திரம் ஒன்று’ அல்லது ‘பெரிய மரக்குவளையொன்று’ இருந்தது. அதில் தண்ணீரும் இருந்தது. அவர்கள் தம் இரண்டு கைகளையும் அந்தத் தண்ணீருக்குள் நுழைத்து முகத்தில் தடவிக் கொண்டே ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. நிச்சயமாக மரணத்தின்போது பல வேதனைகள் உண்டு’ என்று கூறினார்கள். பிறகு தம் கையை உயர்த்தியவாறு ‘(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)’ எனப் பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.
அபூ அப்தில்லாஹ் (புகாரி ஆகிய நான்) கூறுகிறேன்: (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘உல்பா’ என்பது மரப் பாத்திரத்தையும், ‘ரக்வா’ என்பது தோல் பாத்திரத்தையும் குறிக்கும்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6511
ஆயிஷா(ரலி) அறிவித்தார். கடின சுபாவம் படைத்த கிராமவாசிகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘மறுமை நாள் எப்போது?’ என்று கேட்பார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவர்களிலேயே வயதில் சிறியவரான ஒருவரை நோக்கி ‘இவர் உயிர் வாழ்ந்தால், இவரை முதுமை அடைவதற்கு முன்பே உங்களின் மீது மறுமை சம்பவித்து விடும்’ என்று கூறுவார்கள்.
இங்கு ‘மறுமை’ (ஸாஅத்) என்பது மரணத்தைக் குறிக்கும் என (அறிவிப்பாளர்) ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6512
அபூ கத்தாதா இப்னு ரிப்ஈ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ‘(இவர்) ஓய்வு பெற்றவராவார்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார்’ என்றார்கள். மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! ஓய்வு பெற்றவர்; அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘இறை நம்பிக்கை கொண்ட அடியார் (இறக்கும் போது) இவ்வுலகத்தின் துன்பத்திலிருந்தும் தொல்லையிலிருந்தும் ஓய்வுபெற்று இறையருளை நோக்கிச் செல்கிறார். பாவியான அடியான் (இறக்கும்போது) அவனி(ன் தொல்லைகளி)டமிருந்து மற்ற அடியார்கள், (நாடு) நகரங்கள், மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு (பெற்று நிம்மதி) பெறுகின்றன’ என்றார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6513
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இவர்) ஓய்வு பெற்றவர்; அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார். இறைநம்பிக்கையாளர் (இறக்கும்போது, இவ்வுலகத் துன்பங்களிலிருந்து) ஓய்வு பெறுகிறார் என அபூ கத்தாதா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6514
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறந்தவரை மூன்று பொருள்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பிவிடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவரின் குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6515
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் (மறுமையில்) அவர் (தங்கப்போகும்) இருப்பிடம் காலையிலும் மாலையிலும் அவருக்கு எடுத்துக் காட்டப்படும். (அது) ஒன்று நரகமாயிருக்கும்; அல்லது சொர்க்கமாயிருக்கும். அப்போது ‘இதுதான் உன் இருப்பிடம். இறுதியில் இங்கு தான் நீ அனுப்பப்படுவாய்’ என்று கூறப்படும் என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6516
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இறந்தோரை ஏசாதீர்கள். ஏனெனில், அவர்கள் தாம் செய்த (நன்மை, தீமை, ஆகிய)வற்றின் பால் சென்று சேர்ந்து விட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6517
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இரண்டு பேர் சச்சரவிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம்; மற்றொருவர் யூதர். அந்த முஸ்லிம் (தாம் செய்த ஒரு சத்தியத்தின் போது) ‘அம்லத்தார் அனைவரையும் விட மூஸா(அலை) அவர்களை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்துக் கொண்டவன் மீதாணையாக! என்று கூறினார். இதைக் கேட்ட அந்த முஸ்லிம் கோபமடைந்து அந்த யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். உடனே அந்த யூதர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று தன்னுடைய நடவடிக்கையையும் அந்த முஸ்லிமின் நடவடிக்கையையும் தெரிவித்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘மூஸா(அலை) அவர்களைச் விடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள். ஏனெனில், (மறுமை நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்துவிடுவார்கள். அப்போது நான்தான் மயக்கம் தெளிந்து எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூஸா(அலை) அவர்கள் இறைவனது அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். மூஸா எனக்கு முன்பே மயக்கம் தெளிந்து (எழுந்து)விட்டாரா? அல்லது மூர்ச்சையடைந்து விழுவதிலிருந்து அல்லாஹ் விதி விலக்களித்தவர்களில் ஒருவராய் அவர் இருந்தாரா? என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6518
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூர்ச்சையடைந்து விழும் (மறுமை) நாளில் மக்கள் மூர்ச்சையடைந்து (கீழே) விழுந்து விடுவார்கள். நான்தான் (மயக்கம் தெளிந்து) எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூஸா(அலை) அவர்கள் இறைவனது அரியணையின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவர் மூர்ச்சையுற்று விழுந்தவர்களில் ஒருவரா என்று எனக்குத் தெரியாது என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் அறிவித்தார்கள்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6519
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் (மறுமை நாளில்) பூமியைத் தன்னுடைய கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானத்தைத் தன்னுடைய வலக் கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு ‘நானே அரசன்; பூமியின் அரசர்கள் எங்கே?’ என்று கேட்பான்
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 7, அத்தியாயம் 82, எண் 6520
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் இந்த பூமி (அடுப்பில் இருக்கும்) ஒரு ரொட்டியைப் போன்று (சமதளமாக) மாறிவிடும். பயணத்திலுள்ள உங்களில் ஒருவர் தம் ரொட்டியை (அடுப்பிலிருந்து எடுத்துக் கையில் வைத்து)ப் புரட்டுவதைப் போன்று, சர்வ வல்லமை படைத்த (இறை)வன் பூமியைத் தன்னுடைய கரத்தால் புரட்டிப் போடுவான். (அதையே) சொர்க்கவாசிகளுக்கு விருந்தாக்குவான்’ என்று கூறினார்கள்.
அப்போது யூதர்களில் ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘அபுல் காசிமே! அளவற்ற அருளாளன் உங்களுக்கு சுபிட்சம் அளிக்கட்டும். மறுமை நாளில் சொர்க்கவாசிகளின் விருந்துணவு என்னவென்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘சரி’ என்றார்கள். அவர் நபி(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே ‘மறுமை நாளில் இந்த பூமி ஒரேயொரு ரொட்டியைப் போன்று இருக்கும்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு, தம் கடைவாய்ப் பற்கள் தெரிய சிரித்தார்கள். பிறகு ‘உங்களுக்கு சொர்க்கவாசிகளின் குழம்பு எது எனத் தெரிவிக்கட்டுமா?’ என்று அந்த யூதர் கேட்டுவிட்டு அவர்களின் குழம்பு ‘பாலாம்’ மற்றும் ‘நூன்’ என்றார். மக்கள் ‘இது என்ன?’ என்று கேட்டார்கள். அந்த யூதர் ‘(அவை) காளைமாடும் மீனும் ஆகும். அந்த இரண்டின் ஈரல்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டை (மட்டுமே சொர்க்கவாசிகளில்) எழுபதாயிரம் பேர் புசிப்பார்கள்’ என்று கூறினார்.