கணவன், மனைவி இடையே உள்ள உரிமைகள்.
கணவன், மனைவி இடையேயும் பரஸ்பரம் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் உள்ளன என்பதை ஒரு முஸ்லிம் எற்றுக் கொள்ள வேண்டும். அவை அவர்கள் ஒவ்வொருக்கும் மற்றவரின் மீதுள்ள உரிமைகளாகும்
அல்லாஹ் கூறுகிறான்: மனைவியர் மீது கணவர்களுக்குள்ள உரிமைகள்போல முறைப்படி கணவர்கள் மீது மனைவியருக்கும் உரிமைகள் உள்ளன. ஆயினும் ஆண்களுக்குப் பெண்களைவிட ஒருபடி உயர்வு உண்டு. (அல்குர்ஆன்: 2:228)
இவ்வசனம் கணவன், மனைவி இருவருக்குமே பரஸ்பரம் உரிமைகள் இருப்பதை உறுதி செய்வதோடு பல்வேறு காரணங்களால் ஆணுக்கு அதிகப்படியான அந்தஸ்து இருப்பதாகவும் கூறுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின்போது கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் கடமைகள் இருக்கின்றன. உங்கள் மீது உங்கள் மனைவியருக்கு உரிமைகள் கடமைகள் இருக்கின்றன. அறிவிப்பவர்: அம்ர் பின் அல் அஹ்வஸ் (ரழி), திர்மிதி, அபூதாவூத்
ஆயினும் இந்த உரிமைகள் கடமைகளில் சில கணவன், மனைவி இருவருக்கும் பொதுவானவையாகவும் சில தனிப்பட்டதாகவும் இருக்கின்றன.
பொதுவான உரிமைகள்.
1. நம்பிக்கை: கணவன், மனைவியர் ஒவ்வொருவரும் பரஸ்பரம் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வது கடமையாகும். சிறிதும் துரோகம் செய்யக் கூடாது.
2. அன்பு, பாசம்: அவர்கள் ஒவ்வொருவரும் பரஸ்பரம் மிக அதிக அளவில் தூய்மையான அன்புடனும் பரிபூரணமான பாசத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் இறைவன் கூற்றை உறுதிப்படுத்தும் விதத்தில் காலம் முழுவதும் பரஸ்பரம் இத்தகைய அன்புடனும் பாசத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்
இறைவன் கூறுகிறான்: அவனுடைய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும். அவன் உங்களுக்காக, மேலும் உங்கள் இனத்திலிருந்தே மனைவியரைப் படைத்தான், நீங்கள் அவர்களிடம் அமைதி பெறவேண்டும் என்பதற்காக. மேலும் உங்களிடம் அன்பையும் கருணையையும் தோற்றுவித்தான். திண்ணமாக சிந்திக்கும் மக்களுக்கு இதில் நிறைய சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்: 30:21)
அன்பு செலுத்தாதவர், அன்பு செலுத்தப்பட மாட்டார் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்
3. பரஸ்பர விசுவாசம்: அவர்கள் பரஸ்பரம் விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும். தம் நம்பிக்கை, நன்னடத்தை வாய்மை ஆகியவற்றில் சிறு சந்தேகமும் ஏற்பட்டுவிடக் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர் மற்றவருக்கு சகோதரர் ஆவார். (அல்குர்ஆன்: 49:9)
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விருபாதவரை உங்களில் யாரும் இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல்: புகாரி, முஸ்லிம்
ஆம்! கணவன், மனைவிய பந்தம் ஈமானிய சகோதரத்துவத்திற்கு உறுதியையும் செம்மையையும் அதிகப்படுத்துகின்றது.
4. பொதுவான ஒழுங்குகள்: உதாரணமாக நடைமுறை பழக்கவழக்கங்களில் மென்மையான போக்கை மேற்கொள்வது, ஒருவரையொருவர் மலர்ந்த முகத்துடன் பார்ப்பது, மதிப்பது, கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொள்வது. இவையனைத்தும் திருக்குர்ஆனில் இறைவன் கட்டளையிட்டிருக்கின்ற குடும்ப வாழ்க்கையின் சிறந்த ஒழுக்கங்களாகும். நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்ற நன்னடத்தைகளாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: அவர்களுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். (அல்குர்ஆன்: 4:19) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெண்களை நல்லமுறையில் நடத்துங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்:புகாரி, முஸ்லிம்
தனிப்பட்ட உரிமைகள், ஒழுக்கங்கள்
அதாவது கணவன் மீது மனைவிக்கும் மனைவியின் மீது கணவனுக்கும் தனிப்பட்ட உரிமைகளும் கடமைகளும் இருக்கின்றன.
நூல்: முஸ்லிமின் வழிமுறை