இவர் ஹிஜ்ரி 1115ம் ஆன்து நஜ்திலே (இன்றைய புதிய பெயர் ரியாத்) உள்ள ‘அல் உயைனா’ என்ற ஊரில் பிறந்தார். பத்து வயதை அடையுமுன்னர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். அவருடைய தந்தையிடத்தில் ஹன்பலி பிக்ஹை (சட்டக்கலையை)க் கற்றார். பல ஊர்களிலுமுள்ள ஆசியர்களிடம் தப்ஸீரையும் ஹதீஸையும் கற்றார். குறிப்பாக மதீனா முனவ்வராவில் கல்வி பயின்றார்.
குர்ஆன் மற்றும் ஸுன்னா மூலம் தௌஹீதை விளங்கிக் கொண்டார். அவருடைய ஊரிலும், அவர் தரிசித்த வேற்பல ஊர்களிலுமிருந்த ஷிர்க்கு, அனாச்சாரங்கள், பித்அத்துகள் போன்றவைகளும் சரியான இஸ்லாத்துடன் மோதுகின்ற அளவு கப்றுகளைத் தூய்மைப்படுத்தும் நிலையும் அவரை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கின.
இமாம் அவர்களுடைய ஊரில் திருமண வயதை அடைந்த பெண்கள் ஆண் ஈத்தம் மரத்தடியில் சென்று ‘ஈத்தம் மரமே! அடுத்த ஆண்டு மரங்கள் காய்ப்பதற்கு முன்பாகவே எனக்கொரு கணவன் கிடைக்க வேண்டுமென நான் ஆசை வைக்கிறேன்’ என்று கூறிப் பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் செய்யத் தகுதியற்றவைகளை எல்லாம், நபி (ஸல்) அவர்கள், அவர்களின் குடும்பத்தினர்கள், ஸஹாபாக்கள் முதலானோரின் கப்றுகளில், சென்று மக்கள் செய்பவர்களாக இருந்தனர்.
அல்குர்ஆனுக்கும், நபியவர்களுடைய போதனைக்கும் முரண்படுகின்ற அளவு ரஸூல்மார்களைக் கொண்டும், அல்லாஹ் அல்லாத வேறு பலவற்றைக் கொண்டும் மதீனாவாசிகள் பாதுகாப்புத் தேடுகின்றவர்களாக, இரட்சிப்புக் கோருகின்றவர்களாக இருந்த நிலையை இமாமவர்கள் செவி தாழ்த்தினர். அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“உமக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை (இரட்சகன் என) நீர் அழைக்காதீர். அவ்வாறு செய்தால், அச்சமயமே அக்கிரமக்காரர்களில் (இணை வைப்பவர்களில்) நீரும் ஒருவராகி விடுவீர்” (10:106)
ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தனது சாச்சாவின் மகன் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்வருமாறு கூறுகின்றவர்களாக இருந்தனர்.
‘நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு!’ ஆதாரம்: திர்மிதி (ஸஹீஹ்)
இமாமவர்கள் மக்களைத் தௌஹீதின்பால் அழைக்கின்றவர்களாகவும், அல்லாஹ்விடம் மட்டுமே துஆ இறைஞ்ச வேண்டுமென்று கூறுகின்றவர்களாக இருந்தனர். ஏனென்றால், அல்லாஹ்தான் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையோன்; படைத்தவனும் அவனேயாவான். அவனல்லாதவர்கள் தமக்கோ அல்லது பிறருக்கோ நேரவிருக்கும் தீங்குகளைத் தடுக்கச் சக்தியற்றவர்கள் ஆவர்.
ஸாலிஹீன்கள் என்னும் நல்லடியார்கள் மீது கொண்டுள்ள அன்பு அவர்களைப் பின்பற்றுவதற்கு மட்டுமே தகுதியாகும். இதுவன்றி அல்லாஹ்விடத்தில் அவர்களைத் தரகர்களாகவோ அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டியவற்றை அவர்களிடத்தில் கேட்கக் கூடியதாகவோ மதிப்பதற்கு அவர்கள் தகுதியுடையவர்கள் அல்லர்.
பிழையான வழியிலிருப்போரின் நிலைபாடு இதற்கு மாறுபட்டதாக இருக்கின்றது. இமாமவர்கள் மேற்கொண்ட தௌஹீதுப் பிரசாரத்துக்கு, அனாச்சாரவாதிகள் எதிராகவே இருந்தனர். இது ஆச்சர்யப்படத்தக்க ஒன்றன்று. நபி (ஸல்) அவர்களுடைய காலத்திலேயே தௌஹீதின் எதிரிகள் இல்லாதிருக்கவில்லை. அக்காலத்தில் இருந்தவர்கள் ஆச்சர்யப் பட்டவர்களாக “என்ன! (முஹம்மதாகிய) இவர் (நாம் வணங்கும்) தெய்வங்கள் யாவற்றையும் (நிராகரித்து விட்டு வணங்கப்படக் கூடியவன்) ஒரே இறைவன் தன் என்று ஆக்கி விட்டாரா? (38:5) என்று கூறியதாக அல்லாஹ் குர்ஆனிலேயே கூறிவிட்டான்.
இமாமவர்களின் எதிரிகள், அவர்களை எதிர்க்கவும், அவர்களைப் பற்றி பொய்யான கற்பனைக் கதைகளைப் பரப்பவும், அவர்களை கொலை செய்யுமாறு கட்டளை பிறப்பிக்கவும், அவர்களுடைய பிரசாரத்திலிருந்து மக்களைப் பாதுகாக்குமாறு கட்டளைகள் பிறப்பிக்கவும் தலைப்பட்டனர். ஹிஜாஸி (சவுதி அரேபியாவி)லும், ஏனைய இஸ்லாமிய நாடுகளிலும் தௌஹீத் பரவி விடுமளவு அவர்களுடைய பிரசாரத்துக்குத் துணையான (பலமான)வர்களை அல்லாஹ் ஏற்படுத்திக் கொடுத்தான்.
அன்றுமுதல் இன்றுவரை மக்கள் அவர்மீது பொய்யானக் கதைகளை பரப்பிக் கொண்டே இருக்கின்றனர். அவர் ஐந்தாவது ‘மத்ஹப்’ ஒன்றை ஏற்படுத்தியதாகச் சொல்லுகின்றனர். அவருடைய மத்ஹபோ ஹன்பலியாக இருக்கின்றது.
‘மேலும் வஹ்ஹாபிகள் நபி (ஸல்) அவர்களை நேசிக்கின்றார்களில்லை; அவர்கள் மீது ஸலவாத் சொல்ல மாட்டார்கள்’ என்றும் கூறுகின்றனர். ஆனால் இமாமவர்களால் எழுதப்பட்ட நூல்களில் ‘முக்தஸரு ஸீரதிர் ரஸூல்’ (நபி (ஸல்) அவர்களின் சரித்திர சுருக்கம்) என்பதும் ஒன்றாகும். அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது எந்தளவு அன்புக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இந்த நூலே ஓர் அத்தாட்சியாகும்.
இமாமவர்கள் மீது வேண்டுமென்றே துணிந்து சில பொய்களைக் கற்பனை செய்து கூறியுள்ளார்கள். இவை அனைத்தும் மறுமையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டே தீரும். மக்கள் நடுநிலையான மனதுடன் இமாமவர்களுடைய நூல்களை வாசிப்பார்களென்றால். அவற்றில் குர்ஆனும், ஹதீஸும், ஸஹாபாக்களின் கருத்துக்களும் இருப்பதைக் கண்டுக் கொள்வார்கள்.
உண்மையான நம்பிக்கையுள்ள ஒரு மனிதர் ஓர் ஆலிமைப் பற்றி என்னிடம் கூறினார். அவர் மக்களுக்குப் பாடம் நடத்தும் போதெல்லாம் வஹ்ஹாபியத்தைப் பற்றி எச்சரிக்கத் தவறவே மாட்டார். அவருடைய சபைக்குச் சமூகமளிப்பவர்களில் ஒருவர், முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபுடைய ஒரு புத்தகத்தை, அதன் பெயருள்ள முன் அட்டையைக் கழற்றிவிட்டுக் கொடுத்தார். அந்த ஆலிம் அதனை வாசித்து விட்டு ஆச்சரியமடைந்தார். அதன் ஆசிரியர் இமாமவர்கள் தான் என்பதை அறிந்ததும் அன்று முதல் அவரைப் புகழ ஆரம்பித்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ‘அல்லாஹ்வே! சாமு (ஸிரியாவு)க்கு நீ அபிவிருத்தியை அருள்வாயாக! யமனுக்கும் அபிவிருத்தியை அருள்வாயாக!’ என்று பிரார்த்தனை புரிந்தார்கள். அப்பொழுது ஸஹாபாக்கள் யாரஸூலல்லாஹ்! நஜ்துக்கும் (பிரார்த்திப்பீர்களாக!) என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், எதிர்காலத்தில் அங்கிருந்து தான் ஷைத்தானின் கொம்பு முளைக்கும் என்று கூறினார்கள்’ ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்களும் இன்னும் பல உலமாக்களும் மேற்காட்டிய ஹதீஸீலுள்ள ‘நஜ்து’ என்ற ஊரைப் பற்றிக் கூறுகையில் ‘அது இராக்கிலுள்ள நஜ்தாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (இமாம் முஹம்மதிப்னு அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் சவுதி அரேபியாவிலுள்ள நஜ்திலேயே பிறந்தார்கள்.)
நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இறாக் தேசத்திலுள்ள நஜ்தில் பல ‘பித்னா’க் (குழப்பங்)கள் தோன்றின. அங்குதான் நபியவர்களின் பேரப்பிள்ளை, அலி (ரலி) அவர்களின் மகன் ஹுஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
சில மனிதர்கள் இந்த நஜ்தை ஹிஜாஸிலு (சவுதியிலு)ள்ள நஜ்து என்று கருதுகிறார்கள். இறாக்கில் தோன்றிய அளவு ‘பித்னா’க்கள் ஹிஜாஸில் தோன்றவில்லை. ஆனால் ஹிஜாஸிலுள்ள நஜ்தில் தௌஹீத் தோன்றியது. உலகத்தார்கள் அனைவரையும் இந்தத் தௌஹீதுக்காகவே தான் அல்லாஹ் படைத்துள்ளான். இதனைப் பிரசாரம் செய்வதற்காகவே ரஸூல்மார்களை அனுப்பினான்.
நடுநிலையான சிந்தனையுள்ள சில உலமாக்கள் ‘முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் ஹிஜ்ரி 12ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு ‘முஜத்தித்’ (MUJADDHIDH – சீர்திருத்தவாதி)’ என்று கூறியுள்ளார்கள். இவரைப்பற்றி பல நூல்கள் இயற்றியுள்ளனர்; இவர் மூலம் பல நூல்களை உலகுக்கு அறிமுகம் செய்தும் உள்ளனர்.
அவ்வாறான நூலாசிரியர்களில் அலியுத்தன்தாவி என்பவரும் ஒருவராவார். இவர் சில வரலாற்றுக் குறிப்புகளை வெளியாக்கினார். அவர்களில் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப், அஹமத் இப்னு இர்பான் ஆகியோரையும் சேர்த்துக் கொண்டார். அவர் அந்நூலில் ‘மக்காவுக்கு ஹஜ்ஜுக்கு வந்தவர்கள் மூலமாகவே (இமாமவர்களின்) தௌஹீதுப் பிரசாரம் இந்தியா வரை பரவியது’ என்று கூறியுள்ளார்.
ஆங்கிலேயர்களும் இஸ்லாத்தின் எதிரிகளும் தௌஹீதுக் கொள்கைக்கெதிராக செயல்பட ஆரம்பித்தனர். ஏனென்றால், இந்தக் கொள்கையானது அவர்களுக்கு எதிரான வழியில் முஸ்லிம்களை ஒன்றுபடுத்துவதாக இருக்கின்றது.
இஸ்லாத்தின் எதிரிகள் அந்தக் கொள்கையின் பலத்தை மட்டம் தட்டுவதற்காக, வயிறு வளர்ப்பவர்களுக்கு ஜாடையாக வழிகாட்டி விட்டார்கள். இவர்களோ, தௌஹீதின் பக்கம் மக்களை அழைப்பவர்களுக்கு ‘வஹ்ஹாபி’ என்ற பட்டத்தைச் சூட்டி விட்டனர்.
தௌஹீதீன்பால் மக்களை அழைக்கும் இவர்கள் இஸ்லாத்தில் புதுமைகளை ஏற்படுத்துகின்றவர்கள் என்று மக்கள் கருத ஆரம்பித்து விட்டனர். அல்லாஹ் ஒருவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்தனை செய்யும் தௌஹீதுக் கொள்கையை விட்டு முஸ்லிம்களை திசைதிருப்புவதற்காக எதிரிகள் (இஸ்லாத்தில் உள்ளவர்களை வைத்தே) இவ்விதம் செய்தனர்.
‘வஹ்ஹாபி’ என்றால் ‘அல்வஹ்ஹாப்’ என்ற அல்லாஹ்வின் பெயருடன் இணைக்கப்பட்டு அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள்படும் என்பதை இந்த அறிவீனர்கள் உணரவில்லை. இந்தப் பெயர் அல்லாஹ்வுடைய அழகு திருநாமங்களில் ஒன்றாகும். அவன்தான் தௌஹீதைக் கொடையாகக் கொடுத்து சுவர்க்கத்தைத் தருவதாக வாக்களித்துள்ளான்.