87- அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு (நன்பகத் தன்மை தொடர்பாக) இரு செய்திகளைக் கூறினார்கள். அவற்றில் ஒன்றை நான் (என் வாழ்நாளிலேயே) பார்த்து விட்டேன். மற்றொன்றை எதிர்பார்த்திருக்கின்றேன். ஒரு செய்தி யாதெனில் (இயற்கையாகவே) மனிதர்களின் ஆழ் மனதில் (அமானத் எனும்) நம்பகத் தன்மை இடம்பிடித்தது. பின்னர் அவர்கள் குர்ஆனிலிருந்தும் (அதை) அறிந்து கொண்டார்கள். (நபியவர்கள் கூறிய இதை நான் பார்த்து விட்டேன்.) இரண்டாவது செய்தி, நம்பகத் தன்மை அகற்றப்படுவது தொடர்பானதாகும். மனிதன் ஒரு முறை உறங்குவான். (உறக்கத்திலேயே) அவனது உள்ளத்திலிருந்து நம்பகத் தன்மை (சிறிது) கைப்பற்றப்படும். அதை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் சிறு (கரும்)புள்ளி அளவுக்கு(அவனில்) தங்கி விடும். பிறகு மீண்டும் ஒரு முறை அவன் உறங்குவான். அப்போது (மறுபடியும்) அது கைபற்றப்படும் இம்முறை அ(து அகற்றப்பட்ட)தன் அடையாளம் (கடின உழைப்பால் கையில் ஏற்படும்) காய்ப்பு அளவுக்கு (அவனில்) நிலைத்து விடும். (இவ்வாறு முதலில் நம்பகத் தன்மை எனும் ஒளி உள்ளத்தில் ஏற்பட்ட பிறகு சிறிது சிறிதாக அது அணைக்கப்படுவதானது) காலில் தீக்கங்கை உருட்டி விட்டு, அதனால் கால் கொப்பளித்து உப்பி விடுவதைப் போன்றதாகும். பார்வையில் அது உப்பிப் பெரிதாகத் தெரியுமே தவிர, அதனுள் ஒன்றும் இருக்காது. பின்னர் காலையில் மக்கள் தங்களிடையே கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வார்கள். (ஆனால் அவர்களில்) யாருமே நம்பிக்கையைக் காப்பாற்ற எத்தனிக்க மாட்டார்கள். இன்னாருடைய மக்களில் நம்பிக்கையான ஒருவர் இருக்கிறார் என்று(தேடிக் கண்டு பிடித்து) சொல்லப்படும் (அளவுக்கு நம்பிக்கையாளர்கள் அரிதாகி விடுவார்கள்.) மேலும் ஒருவரைப் பற்றி அவருடைய அறிவு தான் என்ன? அவருடைய விவேகம் தான் என்ன? என்று (சிலாகித்துக்) கூறப்படும். ஆனால்,அந்த மனிதருடைய இதயத்தில் கடுகளவுகூட நம்பிக்கை இருக்காது. (அறிவிப்பாளர் ஹூதைஃபா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: என் மீது ஒரு காலம் வந்திருந்தது. அக்காலத்தில் நான் உங்களிடம் யாரிடம் கொடுக்கல் வாங்கல் செய்கிறேன் என்று பொருட்படுத்தியதில்லை.(ஏனெனில்) முஸ்லிமாக இருந்தால் இஸ்லாம் (எனது பொருளை அவரிடமிருந்து) என்னிடம் திருப்பித் தந்து விடும். கிருஸ்தவராக இருந்தால் அவருக்கான அதிகாரி (எனது பொருளை) அவரிடமிருந்து எனக்கு மீட்டுத் தந்து விடுவார். ஆனால், இன்றோ நான் இன்னார், இன்னாரிடம் மட்டுமே கொடுக்கல் வாங்கல் செய்கிறேன்.
புகாரி-6497: ஹூதைஃபா பின் அல்யமான்(ரலி)