(லாமஃபூத – பிஹக்கின் இல்லல்லாஹ் — அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவருமில்லை என்பதாகும்) இதிலே அல்லாஹ்வைத் தவிர வேறெரு இறைவன் இல்லையென்று கூறுவதும், இறைமைத்துவம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே என்று கூறி உறுதிப்படுத்துவதும் அமைந்துள்ளது.
1. “அல்லாஹ்வைத் தவிர வேறொரு இறைவன் இல்லையென்பதை நீர் அறிந்து கொள்ளும்” (47:19) என்று அல்லாஹ் கூறுகிறான்.
இதன் அர்த்தத்தை அறிந்து கொள்வது வாஜிபாகும். இஸ்லாத்தின் ஏனைய கடமைகளை அறிவதற்கு முன்னால் இதனை அறிந்தாக வேண்டும்.
2. “எவனொருவன் மனத் தூய்மையுடன் லாஇலாஹ இல்லல்லாஹ்வை மொழிகிறானோ அவன் சுவர்க்கம் பிரவேசிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: அஹ்மத் (ஸஹீஹ்)
மனத்தூய்மை என்றால், அதனை விளங்குவதும், அதன்படி செயல்படுவதும், அதன்பக்கம் (மக்களை) அழைப்பு விடுப்பதுமாகும். ஏனென்றால், இதிலேதான் தௌஹீத் இருக்கின்றது. இதற்காகத்தான் உலகிலுள்ளோர் அனைவரையும் அல்லாஹ் படைத்தான்.
3. நபி (ஸல்) அவர்களது சிறிய தந்தை அபூதாலிப் மரணப்படுக்கையில் இருக்கும்போது, ‘எனது சிறிய தந்தையே! நீங்கள் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுங்கள். அதனைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக மன்றாடுவேன்’ என்று கூறினார்கள். அவர்கள் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூற மறுத்து விட்டார். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.
“நபி (ஸல்) அவர்கள் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறுங்கள் என்று சொல்லி மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்பதற்காக மக்காவில் பதின்மூன்று வருடகாலம் இருந்தார்கள். ‘ஒரே இறைவனையா நாங்கள் வணங்க வேண்டும்? இவ்வாறு நாங்கள் கேள்விப்பட்டதே இல்லையே’ என்று அம்மக்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் சொல்லக் காரணம் என்னவெனில், அவர்கள் கலிமாவுடைய அர்த்தத்தை விளங்கியிருந்ததனால் தான். எவன் இதனைச் சொல்லுவானோ, அவன் அல்லாஹ் அல்லாத ஏனையவைகளை அழைப்பதை விட்டுவிட்டு, அல்லாஹ்வையே மட்டுமே அழைப்பான். இவர்களைப்பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
“அல்லாஹ்வைத் தவிர வேறொரு நாயனில்லை. (அவனையே நம்பி அவனுக்கே வணக்கம் செலுத்துங்கள்) என்று அவர்களிடம் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொண்டு, பைத்தியம் கொண்ட ஒரு கவிஞனுக்காக எங்களது தெய்வங்களை மெய்யாகவே நாங்கள் விட்டுவிடுவோமா? என்று கூறுகின்றனர். (நபியாகிய அவர் பைத்தியக்காரர்) அல்ல. அவர் உண்மையே கொண்டு வந்தார். தனக்கு முன்னர் வந்த நபிமார்களையும் அவர் உண்மையாக்கி வைத்தார்” (37: 35,36,37)
‘எவனொருவன் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறி அல்லாஹ்வையன்றி வணங்கப்படக் கூடியவை அனைத்தையும் நிராகரிக்கின்றானோ, அவனுடைய பொருளும், அவனுடைய இரத்தமும் ஹராமாகி விடும். (அதாவது அவனுடைய இரத்தத்தை ஓட்டவோ, அவனுடைய பொருளைச் சூரையாடவோ எந்த ஒரு முஸ்லிமும் முற்படக் கூடாது)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.
இந்த ஹதீஸின் அர்த்தமாவது, மரணித்தவர்களிடமோ, அவர்கள் அல்லாதவர்களிடமோ தேவைகளைக் கேட்பது போன்ற அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வணக்கம் செலுத்துவதை நிராகரித்து அதனைப் புறக்கணிப்பது, கலிமாவை மொழியக்கூடிய ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
இதில் அபூர்வம் என்னவென்றால், முஸ்லிம்களில் பலர் இந்தக் கலிமாவை நாவினால் மொழிகின்றனர். ஆனால் தங்களுடைய செயல்கள் மூலமாகவும் அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பதன் மூலமாகவும் அதன் அர்த்தத்துக்கு மாறு செய்கின்றனர்.
5. லாஇலாஹ இல்லல்லாஹ் என்பது இஸ்லாத்தினதும் தௌஹீதினதும் அஸ்திவாரமாகும். இது வாழ்க்கையின் பூரண வழிகாட்டியாகும். அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வணக்கம் செலுத்தக்கூடிய எல்லா வகைகளையும் இது நெறிப்படுத்துகின்றது. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவனை மட்டுமே அழைப்பானென்றால் அவனல்லாத எவருடைய சட்டத்துக்கும் அடிபணியக் கூடாது என்பது அவனுக்குக் கட்டாயப் படுத்தப்படுகிறது.
6. இப்னுரஜப் அவர்கள் ‘அல்இலாஹ்’ (இறைவன் இரட்சகன்) என்ற பதத்துக்குப் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள். இலாஹ் என்பவன் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியவனாகவும், கண்ணியப்படுத்தப்படக் கூடியவனாகவும், விருப்பத்துடனும், அச்சத்துடனும், ஆதரவுடனும் பொறுப்புச் சாட்டப்படக் கூடியவனாகவும், பிரார்த்தனை செய்யப்படக் கூடியவனாகும், மாறு செய்யப்படக் கூடாதவனாகவும் இருக்க வேண்டும். இவையனைத்தும் வல்லமையுள்ள அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருந்தும்.
இறைவனுக்கு மட்டுமே சொந்தமான மேற்கூறப்பட்ட பண்புகளில் ஏதேனுமொன்றைக் கொண்டு படைப்புகளில் ஒன்றை அல்லாஹ்வுடன் எவன் இணையாக்குகின்றானோ அவன், தான் மொழிந்த லாஇலாஹ இல்லல்லாஹ்விலே பிழை விட்டவனாவான். இது படைப்புக்கு வழிபட்டதாக அமைகின்றது.
7. லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவானது ஷிர்க்கைக் கொண்டு அதனை முறித்து விடாதவனுக்கு மட்டுமே பயன்படுகின்றது. உழுவுடன் இருப்பவனுக்கு உலுவை முறிக்கும் செயலொன்று நடந்து விட்டால், எப்படி உலு முறிந்து விடுமோ, அவ்வாறே கலிமா மொழிந்தவன் ஷிர்க் வைத்து விட்டால் அவனுடைய ஈமான் முறிந்து விடுகின்றது. அப்பொழுது அவனுடைய கலிமா அவனுக்கு பயனற்றதாக ஆகி விடுகின்றது.
‘எவனுடைய கடைசி வார்த்தை லாஇலாஹ இல்லல்லாஹ்வாக இருக்கின்றதோ, அவன் சுவர்க்கம் பிரவேசிப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, ஹாகிம் (ஹஸன்)