பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவின் நிழலில் வெற்றிபெற்ற பிரிவினர்
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனையே புகழ்கின்றோம். அவனிடமே பிழை பொறுக்கத் தேடுகிறோம். எம்மில் தோன்றும் தீமைகளை விட்டும், எமது செயல்களில் ஏற்படும் கெடுதிகளை விட்டும் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுகிறோம். எவனை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறானோ அவனை வழிதவறச் செய்யவும், எவனை அவன் வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவனை நேர்வழிப் படுத்தவும் எவராலும் முடியாது. அல்லாஹ்வையன்றி வேறெந்த இரட்சகனுமில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரென்றும் அவனுடைய தூதரென்றும் நான் சான்று பகர்கிறேன்.
இந்நூல் முக்கியமானதோர் ஆய்வு நூலாகும், பல பிரிவுகள் கொண்டதாகவும் அமைந்துள்ளது. பரிசுத்தமான தௌஹீ (ஏகத்துவத்) தின் அடிப்படைக் கொள்கையின் பக்கமும், உலகில் பல பாகங்களிலும் வாழும் முஸ்லிம்களில் அதிகமானவர்களிடம் பரவியிருக்கும் ஷிர்க் (இணைவைப்பதி) லிருந்து அவர்களைத் தூரப்படுத்துவதாகவும் இந்நூல் அழைப்பு விடுக்கின்றது. இந்த ஷிர்க் தான் கடந்த கால சமுதாயங்களின் அழிவுக்குக் காரணமாயிருந்தது.
தற்கால உலகின் துர்ப்பாக்கியத்துக்குக் காரணமும், குறிப்பாக உலக முஸ்லிம்களின் இழிநிலைக்குக் காரணமும் இதுவாகும். இவர்கள் பல துன்பங்கள், யுத்தங்கள் சோதனைகளும் போன்றவற்றைச் சந்திப்பதெல்லாம் இதனாலேதான்.
இந்நூலிலுள்ள ஆய்வுகளும், அதனுல் அமைந்துள்ள ஒவ்வொரு தலைப்புகளும் நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸ்களின் அடிப்படையில் செயல்பட்டு, வெற்றி பெற்ற ஒரு கூட்டத்தாரின் அடிப்படைக் கொள்கையைத் தெளிவு படுத்துவதாக அமைந்துள்ளன. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்குப் பயனளிப்பதாக அமைய வேண்டுமென வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறோம்.
முஹம்மத் ஜமீல் ஜைனூ