2:2. இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர் வழிகாட்டியாகும்.
2:23. இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க் கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.
11:13. “இ(வ்வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
2:24. (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால் – அப்படிச் செய்ய திண்ணமாக உங்களால் முடியாது – மனிதர்களையும், கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.
5:16. அல்லாஹ் இதை (குர்ஆனை)க் கொண்டு அவனது திருப்பொருத்தத்தைப் பின்பற்றக் கூடிய அனைவரையும் பாதுகாப்புள்ள நேர்வழிகளில் செலுத்துகிறான்; இன்னும் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி, தன் நாட்டப்படி ஒளியின் பக்கம் செலுத்துகிறான்; மேலும் அவர்களை நேரான வழியில் செலுத்துகிறான்.
38:29. (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் – அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
10:57. மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது;) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது.
10:58. “அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங் கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) – இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.
15:9. நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
17:9. நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல்வழியைக் காட்டுகிறது; அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.
17:88. “இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது” என்று (நபியே!) நீர் கூறும்.
39:27. இன்னும், இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லாவித உதாரணங்களையும், அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதற்காக நாம் திடமாக எடுத்துக் கூறியுள்ளோம்.
47:24. மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டு போடப்பட்டு விட்டனவா?