மலப்பாதையில் உடலுறவு

பலவீனமான ஈமானுடைய ஒரு சிலர் தம் மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்வதிலிருந்து விலகி பேணுதலாக இருப்பதில்லை. இது பெரும்பாவங்களில் ஒன்றாகும். இவ்வாறு செய்பவரை நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘பெண்ணின் பின் துவாரத்தில் புணர்பவன் சாபத்திற்குரியவன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (அஹ்மத்)

இன்னும் சொல்வதானால் ‘மாதவிடாய் ஏற்பட்ட பெண்ணிடம் அல்லது பெண்ணின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டவன், அல்லது குறிகாரனிடம் சென்றவன் முஹம்மதுக்கு இறக்கி அருளப்பட்ட (வேதத்)தை நிராகரித்து விட்டான் எனவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி

நற்சிந்தனையுடைய மனைவியர் சிலர் இதனை மறுத்தாலும் சில கணவன்மார்கள் இதற்கு நீ இணங்கவில்லையெனில் உன்னை விவாகரத்துச் செய்து விடுவேன் என மிரட்டுகின்றனர். இன்னும் சிலரோ இது கூடுமா? கூடாதா? என மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்பதற்கு வெட்கப்படக்கூடிய தம் மனைவியரை இது கூடும் என்ற சந்தேகத்தில் ஆழ்த்தி ஏமாற்றி விடுகின்றனர். சிலபோது பின்வரும் குர்ஆன் வசனத்தையும் அவளுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்; “உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பும் முறையில் செல்லுங்கள்” (2:223). ஆனால் திருக்குர்ஆனுக்கு விளக்கமாக ஹதீஸ்கள் அமைந்திருக்குமென்பது நாம் அறிந்த ஒன்றாகும். கணவன் தன் மனைவியின் பிறப்பு உறுப்பில் அவன் விரும்பும் முறையில் முன்புற வழியாகவோ பின்புற வழியாகவோ உடலுறவு கொள்ளலாம் என்பதை திண்ணமாக நபி (ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியே உள்ளனர். அப்படியிருக்க பின் துவாரமென்பது பிறப்பு உறுப்பு அல்லவே.

இத்தகைய தீமையின் காரணங்களுள் மற்றொன்று என்னவெனில், தூய்மையான திருமண வாழ்க்கையில் பிரவேசிப்பதற்கு முன் அறியாமைக்காலத்து அருவருக்கத்தக்க தீய நடத்தைகளை அனந்தரப் பழக்கங்களாக பெறுகிறான் மனிதன். மேலும் ஹராமென விலக்கப்பட்ட விநோதமான பாலுணர்வு அனுபவங்களுடன் அல்லது ஆபாசமான படங்களின் தீய காட்சிகளால் நிறைந்த சிந்தனையுடன் வருகிறான். இத்தகைய பாவங்களிலிருந்து பாவமன்னிப்புத் தேடாமலேயே தூய்மையான திருமண வாழ்க்கையில் பிரவேசித்து விடுகிறான்.

ஆக இச்செயல் – கணவன் மனைவி இருவரும் இதனைப் பொருந்திக் கொண்டாலும் – ஹராமானதே என்பது தெளிவு. ஏனெனில் ஒரு ஹராமைப் பொருந்திக் கொள்வது அதை ஹலாலாக மாற்றி விட முடியாது.

எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.
This entry was posted in எச்சரிக்கை. Bookmark the permalink.