916. (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒருவர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும், ‘அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘இன்னார் – என் பால்குடித் தந்தையின் சகோதரர் உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும்போது என்னிடம் அவர் வரலாமா?’ என்று கேட்டேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகிற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும்” என்று கூறினார்கள்.
917. பர்தா தொடர்பான வசனம் அருளப் பெற்ற பிறகு, என் வீட்டினுள் வருவதற்கு அபுல் குஅய்ஸின் சகோதரர் ‘அஃப்லஹ்’ (ரலி) அனுமதி கேட்டார்கள். அப்போது, ‘நபி (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்டுப் பெறாதவரை உள்ளே வர அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன்” என்று கூறிவிட்டேன். ஏனெனில், எனக்குப் பாலூட்டியவர், அஃப்லஹின் சகோதரரான அபுல் குஅய்ஸ் அல்லர். அபுல் குஅய்ஸின் மனைவிதான் எனக்குப் பாலூட்டியவர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! அபுல் குஅய்ஸின் சகோதரான ‘அஃப்லஹ்’ என்னிடம் (வீட்டினுள் வர) அனுமதி கேட்டார். தங்களிடம் அனுமதி கேட்காதவரை அவருக்கு நான் அனுமதி தரமாட்டேன் என்று மறுத்துவிட்டேன்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘உன் (பால்குடித்) தந்தையின் சகோதரருக்கு நீ ஏன் அனுமதி தரவில்லை?’ என்று கேட்டார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குப் பாலூட்டியவர் அந்த (அபுல் குஅய்ஸ் என்ற) ஆண் அல்லவே? மாறாக, அபுல் குஅய்ஸின் மனைவிதானே எனக்குப் பாலூட்டினார்!” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவருக்கு (அஃப்லஹுக்கு) அனுமதி கொடு! ஏனென்றால், அவர் உன் (பால்குடித்) தந்தையின் சகோதரர் தாம். உன் வலக்கரம் மண்ணாகட்டும்” என்று கூறினார்கள்.
918. என் வீட்டில் நுழைவதற்கு ‘அஃப்லஹ்’ (ரலி) அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. அவர்கள், ‘நான் உன் தந்தையின் சகோதரராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு (மறைத்து)க் கொள்கிறாயா?’ என்று கேட்டார்கள். நான், ‘அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)?’ என்று கேட்டேன். அதற்கவர், ‘என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார்” என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘அஃப்லஹ் உண்மையே சொன்னார். (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடு” என்று கூறினார்கள்.