913. நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு ‘அஸ்ல்’ பற்றிக் கேட்டேன். அபூ ஸயீத் (ரலி) கூறினார். நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்தலிக் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத்தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பினோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும் (அந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது) ‘அஸ்ல்’ செய்ய நினைத்தோம். (ஆனால்,) நம்மிடையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா?’ என்று (எங்களுக்குள்) பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு, ‘நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேதுமில்லையே! மறுமை நாள் வரை (இறை விதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம். உருவாகியே தீரும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
914. நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில (அரபு) போர்க் கைதிகளைப் பெற்றோம். (அவர்களிடையே இருந்த பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) ‘அஸ்ல்’ செய்து கொள்ளவும் விரும்பினோம். (அது குறித்து) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள் ‘(இந்த அஸ்லை) நீங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறீர்கள்?’ என்று கேட்டுவிட்டு, ‘மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று கூறினார்கள்.
915. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் ‘அஸ்ல்’ (புணர்ச்சி இடைமுறிப்பு) செய்து கொண்டிருந்தோம்.