742. நபி (ஸல்) அவர்கள் அப்வா அல்லது வத்தான் எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள். என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும். ‘நாம் இஹ்ராம் அணிந்திருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்!” என்று கூறினார்கள்.
743. நாங்கள் மதீனாவுக்கு மூன்று (கல்) தொலைவிலுள்ள காஹா எனும் இடத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களில் இஹ்ராம் அணிந்தவர்களும் இஹ்ராம் அணியாதவர்களும் இருந்தனர். என் தோழர்கள் எதையோ பார்க்கலானார்கள். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. (என் குதிரையில் ஏறியதும்) என்னுடைய சாட்டை கீழே விழுந்தது. (அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டபோது) என் தோழர்கள் ‘நாங்கள் இஹ்ராம் அணிந்திருப்பதால் இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டோம்!” என்று கூறிவிட்டனர். எனவே, நானே (இறங்கி) அதை எடுத்தேன். பின்னர், ஒரு பாறாங் கல்லின் பின்னாலிருந்து (மறைந்து) கழுதையின் அருகே சென்று அதன் கால்களை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். என் தோழர்களிடம் அதைக் கொண்டு வந்தேன். சிலர் ‘உண்ணுங்கள்!” என்றனர். மற்றும் சிலர் ‘உண்ணாதீர்கள்!” என்றனர். எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று இது பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதை உண்ணுங்கள்! அது அனுமதிக்கப்பட்டதுதான்!’ என்று பதிலளித்தார்கள்.
744. நான் ஹுதைபிய்யா ஆண்டில் (மக்காவுக்குப்) புறப்பட்டேன். என்னுடைய தோழர்கள் இஹ்ராம் அணிந்தனர்; நான் இஹ்ராம் அணியவில்லை. எதிரிகள் நபி (ஸல்) அவர்களின் மீது படையெடுத்து வரவிருக்கிறார்கள் என்ற செய்தி நபி (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது. நபி (ஸல்) அவர்கள் அந்தப் படையை எதிர்கொள்ள முன்னே புறப்பட்டார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர்.”அப்போது நான் என் முன்னே ஒரு காட்டுக் கழுதையைக் கண்டு, அதைத் தாக்கி ஈட்டியால் குத்திப் பிடித்தேன். என் தோழர்களிடம் உதவி வேண்டினேன். (இஹ்ராம் அணிந்திருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் மாமிசத்தை நாங்கள் சாப்பிட்டோம். நாங்கள் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்து விடுவோமோ என்று அஞ்சினோம். நபி (ஸல்) அவர்களைத் தேடி என் குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் நான் பனூமஃபார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து, ‘நபி (ஸல்) அவர்களை எங்கே விட்டு வந்தீர்?’ என்று கேட்டேன். அதற்கவர் ‘அவர்கள் ‘சுக்யா’ எனும் இடத்திற்குச் சென்று மதிய ஓய்வு கொள்ள எண்ணியிருந்த வேளையில், ‘தஃஹின்’ எனும் இடத்தில் அவர்களை விட்டு வந்தேன்!” என்றார். (நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து), ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் தோழர்கள் உங்களின் மீது ஸலாம் (இறை சாந்தி) மற்றும் இறைகருணை பொழிந்திடப் பிரார்த்திக்கிறார்கள்! உங்களைப் பிரிந்து விடுவோமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்! எனவே (அவர்கள் வரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்! இறைத்தூதர் அவர்களே! நான் காட்டுக் கழுதையை வேட்டையாடினேன். அதில் சிறிதளவு என்னிடம் மீதம் உள்ளது!” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் ‘உண்ணுங்கள்!” என்றார்கள். (அப்போது) மக்கள் அனைவரும் இஹ்ராம் அணிந்திருந்தார்கள்.
745. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன
் (மக்களும்) புறப்பட்டனர். அவர்களில் என்னையும் சேர்த்து ஒரு சிறு கூட்டத்தை நபி (ஸல்) அவர்கள் வேறு வழியாக அனுப்பி வைத்தார்கள். ‘கடலோரமாக நீங்கள் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். கடலோரமாகச் சென்று திரும்பியபோது என்னைத் தவிர அனைவரும் இஹ்ராம் அணிந்தனர்; நான் மட்டும் இஹ்ராம் அணியவில்லை. இவ்வாறு நாங்கள் சென்று கொண்டிருக்கும்போது என் தோழர்கள் காட்டுக் கழுதைகளைக் கண்டனர். நான் அவற்றின் மீது தாக்குதல் நடத்தி, ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னேன். அனைவரும் ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை சாப்பிட்டோம். ‘நாம் இஹ்ராம் அணிந்திருக்கும் நிலையில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை உண்ணலாமா?’ என்றும் தோழர்கள் (ஒருவரையொருவர்) கேட்டனர். எஞ்சிய இறைச்சியை எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். என் தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் இஹ்ராம் அணிந்திருந்தோம்; அபூ கதாதா இஹ்ராம் அணியவில்லை; அப்போது காட்டுக் கழுதைகளை நாங்கள் கண்டோம். அபூ கதாதா அவற்றைத் தாக்கி அதில் ஒரு பெட்டைக் கழுதையின் கால்களை வெட்டி (வேட்டையாடி)னார். ஓரிடத்தில் தங்கி அதன் இறைச்சியை நாங்கள் சாப்பிட்டோம்; ‘நாம் இஹ்ராம் அணிந்திருக்கும்போது வேட்டையாடப்பட்ட மாமிசத்தை உண்ணலாமா?’ என்று நாங்கள் (எங்களுக்குள்) பேசிக் கொண்டோம்; பிறகு, எஞ்சிய மாமிசத்தை எடுத்து வந்திருக்கிறோம்!” என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் எவராவது அதைத் தாக்குமாறு அவருக்குக் கூறினாரா? அல்லது அதை சுட்டிக் காட்டி சைகை செய்தாரா?’ என்று கேட்டார்கள். நபித் தோழர்கள் ‘இல்லை!” என்றனர். ‘அப்படியானால் எஞ்சிய மாமிசத்தை உண்ணுங்கள்!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.