மரணித்து விட்டவர்கள் பேய் பிசாசுகளாக வந்து மனிதனை ஆட்டுவிக்கிறார்களா?

கேள்வி எண்: 38. “….(மரணித்து விட்ட) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரையும் அவர்கள் முன்னே ‘பர்ஸக்’ என்னும் திரை இருக்கிறது’ (அல்குர்ஆன்: 23:100) என்ற இறைவசனம் மூலம் நாம் பெறும் தெளிவுகள் யாவை?

பதில்: இந்த வசனத்தின் மூலம் நாம் பெற வேண்டிய தெளிவுகளும், படிப்பினைகளும் ஏராளம் இருக்கின்றன. இந்த வசனத்தை முழுவதுமாக மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.

“அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன் ‘என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திரும்ப அனுப்புவாயாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக’ (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஓர் திரையிருக்கிறது” (அல்குர்ஆன்: 23: 99-100)

இந்த வசனத்தில், இறந்து விட்ட ஒருவன் மீண்டும் இவ்வுலகிற்கு திரும்ப வருவதற்காக அனுமதி கேட்கிறான். அதுவும் நன்மையானக் காரியங்களைச் செய்வதற்காக. ஆனால் அவனுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு அல்லாமல் அவர்களுக்கும் இவ்வுலகத்தினர்களுக்குமிடையே பர்ஸக் என்னும் திரையையும் இட்டு விடுவதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். இவ்வளவு தெள்ளதெளிவாக இறைவன் கூறியிருக்க, இறந்தவர்கள் ஆவியாக இவ்வுலகிற்கு வந்து சிலரை பிடித்து ஆட்டுவதாகவும், அச்சுறுத்துவதாகவும் சிலர் பிதற்றிக் கொண்டு திரிகின்றனர். இவ்வாறு இவர்கள் பிதற்றுவதற்கு காரணம், நல்ல நிலையில் இருக்கின்ற மனிதன் திடீரென்று அசாதாரண நிலைக்கு மாறி, ஆட்டம் போடுதல், கூச்சல் போடுதல், பிற மொழிகளில் பேசுதல், தானாக சிரித்தல், மற்றவர்களை ஏசுதல், அச்சுறுத்தல் போன்ற காரியங்களைச் செய்வதால்தான். இந்த வகையானக் காரியங்களைச் செய்யும் ஒருவனைப் பேய் பிடித்து விட்டதாகவும், இறந்தவனின் ஆவி அவனுடைய உடலில் புகுந்து அவனை அவ்வாறு ஆட்டுவிப்பதாகவும் கூறி அவனுக்கு தட்டு, தகடு, தாயத்து போன்றவற்றைச் செய்து கொடுத்து பாமர மக்களை ஏமாற்றி அதன் மூலம் வயிறு வளர்க்கும் போலிகள் எல்லா சமுதாய மக்களிடமும், குறிப்பாக நமது சமுதாய மக்களிடம் அதிகம் காணப்படுகிறது.

மூடநம்பிக்கைகளை அறவே ஒழித்துக்கட்டிய மார்க்கம் நமது இஸ்லாம் மார்க்கம். நமது மார்க்கத்தில் இந்த மாதிரியான மூடநம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. இவையெல்லாம் மனிதனை வழிகெடுப்பதற்கான ஷைத்தானின் ஏமாற்று வேலைகள். மனநோயாளிகளையும், சித்தம் கலங்கியவர்களையும் பேய், பிசாசு பிடித்துக் கொண்டு ஆட்டுவிப்பதாக நம்புபவரை, அவரது இந்த நம்பிக்கையானது தமது ஈமானையும் இழக்கச் செய்யும். குஃப்ரானக் காரியங்களைச் செய்வதற்குத் தூண்டிவிடும். இதை நம்பக்கூடிய ஒருவன், தனது உயிரினும் மேலான ஈமானை இழந்து, சமாதிகளில் கையேந்தி நிற்கச் செய்து இணைவைத்தல் என்னும் இறைவனால் மன்னிக்கப்படமாட்டாத பெரும்பாவத்திற்கு ஆளாகி, பூசாரிகளிடமும், மாந்திரீகம் செய்யும் இறை மறுப்பாளர்களிடமும், தட்டு, தாயத்து போன்றவற்றைச் செய்து விற்று வயிற்றைக் கழுவிக் கொள்ளும் போலி ஆலிம்களிடமும் ஏமாந்து தமது பொருளாதாரத்தையும் இழந்து நிற்கும் கேவலமான நிலைக்குத் தள்ளிவிடும். மரணித்த ஆத்மா இவ்வுலகில் எவ்வகையிலும் தொடர்பில்லாத பர்ஸக் உலகில் இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது, அவற்றையெல்லாம் மீறி இவ்வுலகிற்கு பேயாக, ஆவியாக வந்து மனிதனைப் பிடித்தாட்டுகிறது என்பதை நம்புவது, இறைவனின் வல்லமையில் குறை காண்பதாகும். இத்தகைய எண்ணங்களிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இன்னும் சிலர் வேறு வகையான நம்பிக்கைகளைக் கொண்டிருக்கின்றனர். அதாவது இறைவனின் நேசர்கள் எனப்படும் வலியுல்லாக்கள் எனப்படுவோர் அவர்களின் சமாதிகளில் உயிரோடு இருப்பதாகவும், மக்களின் தேவைகளை அறிந்து அவற்றை நிரைவேற்றி வைப்பதாகவும் நம்பி தங்களின் ஈமானை இழந்து நிற்கின்றனர். இது இறைவனின் மன்னிப்பே கிடைக்காத  இணைவைத்தல் எனும் மாபெரும் பாவமாகும். இத்தகையோர் தவ்பாச் செய்து உடனடியாக இறைவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

This entry was posted in கேள்வி பதில். Bookmark the permalink.