518. நபி (ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தம் அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களின் முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும். எனவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்து கொண்டு), ‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்” (திருக்குர்ஆன் 46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம் என்று எனக்குத் தெரியாது” எனப் பதிலளித்தார்கள்.
காற்றுகளால் உதவியும் அழிவும்..
519. ”நான் மழைக்காற்றின் (ஸபா) மூலம் உதவப்பட்டுள்ளேன். ‘ஆது’ கூட்டத்தினர் வெப்பக் காற்றினால் (தபூர்) அழிக்கப்பட்டனர்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.