283– எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயித் என்ற கூட்டத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூஸயீத் (ரலி) அவரது நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்த போது, அபூஸயீத் (ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழி தென்படவில்லை. எனவே மீன்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூஸயீத் (ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (ஆட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூஸயீத் (ரலி) மர்வானிடம் சென்றார்கள். உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சனை? என்று மர்வான் கேட்டார். உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் தடுப்பு வைத்துக் கொண்டு தொழும் போது, யாராவது குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும். அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றுள்ளேன் என அபூஸயீத் (ரலி) கூறினார்கள்.
284– தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூஜுஹைம் (ரலி) அனுப்பி வைத்தார். தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாட்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் (ரலி) விடையளித்தார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன்னழ்ரு என்பவர் நாற்பது வருடங்கள் என்று கூறினார்களா? அல்லது நாற்பது மாதங்கள் அல்லது நாற்பது நாட்கள் என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.