ஸுஃபியிஸம்: இதைப் பின்பற்றுபவர்கள் ‘திக்ரு’ (ஹல்கா) செய்கிறோம் என்ற பெயர்களில் உரத்த குரலில் சப்தமாக ‘அல்லாஹ்’ எனக்கூவி அழைத்து பாட்டிசைத்து உடலை அசைத்து ஆட்டம் போடுகின்றனர்.
இஸ்லாம்: “(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல்குர்ஆன்: 7:205)
“உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்” (அல்குர்ஆன்: 8:2)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: ‘மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை (திக்ரு) செய்யுங்கள்; நீங்கள் செவிடனையோ, மறைவானவனையோ பிரார்த்திக்கவில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்ற இறைவனிடம் தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள்’ அறிவிப்பவர்: அபூமூஸா அல் அஷ்அரி (ரலி), ஆதாரம்: புகாரி.
ஸூஃபியிஸம்: ஸூஃபியாக்களைப் பின்பற்றுபவர்கள் திக்ரு (ஹல்கா) செய்யும்போது அல்லாஹ்வின் பெயரை ‘அஹ்’ என்றும் ‘ஆஹ்’ என்றும் திரித்துக் கூறுகின்றனர்.
இஸ்லாம்: “அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன; அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள். அவனுடைய திருநாமங்களைத் தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டுவிடுங்கள் – அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்” (அல்குர்ஆன்: 7:180)
ஸூஃபியிஸம்: ஸூஃபிகளைப் பின்பற்றக்கூடியவர்கள் திக்ரு – ஹல்கா செய்கிறோம் என்ற பெயரில் ஆஹ், அஹ் என்று உரக்க சப்தமிட்டவாறு கைதட்டுகின்றனர்.
இஸ்லாம்: அல்லாஹ்வின் பள்ளிகளில் கைதட்டுபவர்களை குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது. “அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கைதட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்கு கூறப்படும்)நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள் (என்று)” (அல்குர்ஆன்: 8:35)
ஸூஃபியிஸம்: அல்லாஹ்வின் பள்ளிகளில் திக்ரு – ஹல்கா செய்கிறோம் என்ற பெயரில் ஆஹ், அஹ் என்று சிலர் கூறிக் கொண்டிருக்கும் போது மற்ற சிலர் தங்களின் தரீக்காவின் பாடல்களை இராகமிசைத்து பாடி, அப்பாடல்களின் மூலம் தங்களின் ஸூஃபிகளையும், ஷெய்குகளையும் அளவுக்கு மீறி புகழ்ந்து அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கின்றனர்.
இஸ்லாம்: “அன்றியும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே இருக்கின்றன; எனவே (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (அல்குர்ஆன்:72:18)
ஸூஃபியிஸம்: இறைவனின் பெயரை திக்ரு செய்கிறோம் என்ற பெயர்களில் ‘இல்லல்லாஹ்’ அல்லது ‘அல்லாஹ்’ என்று மட்டும் தனித்துக் கூறுகின்றனர்.
இஸ்லாம்: அல்லாஹ்வை திக்ரு செய்ய்ம்போது இவ்வாறு ‘அல்லாஹ்’ என்று தனித்து கூறுவதற்கு எவ்வித பொருளுமில்லை. இது பித்அத்தான திக்ரு முறையாகும். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையான திக்ருகள் என்பது அர்த்தமுள்ள வார்த்தைகளைக் கொண்டு திக்ரு செய்வதாகும். உதாரணமாக ‘ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாஇலாஹ இல்லல்லாஹு அல்லாஹ் அக்பர்’ என்பது போன்ற திக்ருகளைச் செய்ய வேண்டும். மேலும் சிலர் கூறுவது போல வெறும் ‘இல்லல்லாஹ்’ (பொருள்: அல்லாஹ்வைத் தவிர) என்று மட்டும் கூறுவது அர்த்தமற்றதாகும்.